நிக்கோலே லெஸ்கோவ் – மிட்ஸென்ஸ்க் மாவட்டத்தின் மெக்பெத் சீமாட்டி

19ம் நூற்றாண்டின் ரஷ்ய எழுத்தாளர்கள் வரிசையில் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நிக்கோலே லெஸ்கோவ்.

அவரைவிட இருபது வயது மூத்தவரான நிக்கோலே கோகோலைப் போலவே ரஷ்ய இலக்கியத்தில் புதிய எழுத்துப் பாணியையும், குறிப்பாகக் சிறுகதை, குறுநாவல் போன்ற பரீட்சார்த்த முயற்சிகளையும் புகுத்தியவராக லெஸ்கோவ் பார்க்கப்படுகிறார்.

தலைமைத் தேவாலய மதக்குருக்களின் வாழ்க்கையைப் பற்றியும் அக்காலத்தின் ரஷ்ய அரசாங்கத்தினோடு அவர்களுக்கு ஏற்படும் பூசல்களைப் பற்றியும் 1872ல் அவர் எழுதிய ‘தலைமைத் தேவாலய பாதிரியார்கள்’ (The Cathedral Clergy) என்ற நாவல் உள்ளடக்கத்தில் மட்டுமின்றி சொல்முறை பாணியிலும் 19ம் நூற்றாண்டின் மற்ற எந்தப் படைப்பையும் ஒப்புநோக்க மிகவும் வித்தியாசமானது.

டால்ஸ்டாய் மற்றும் செக்காவ் போன்ற பெரும் எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்ட லெஸ்கோவ்வின் மிக உன்னதப் படைப்புக்களில் 1865ம் ஆண்டில் ‘மிட்ஸென்ஸ்க் மாவட்டத்தின் மெக்பெத் சீமாட்டி’ குறுநாவல் மிக முக்கியமானது.

தஸ்தவ்யஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘பிசாசுகள்’ நாவல்களைப் போலவே மனிதர்களின் சீரழிவையும் மனப்பிறழ்வுகளையும் மிகத் துல்லியமாக, கலையமைதி மாறாமல் விவரிக்கும் அற்புதமான படைப்பு.

மேலும் சொல்ல வேண்டுமென்றால் தஸ்தவ்யஸ்கியின் படைப்புக்களில் பெரும்பாலும் ஆண்களே சீரழந்தவர்களாகவும் மனம் பிறழ்ந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பெண்களைத் தஸ்தவ்யெஸ்கி முழுமையாகச் சித்தரிக்கவில்லை என்ற விமர்சனமும் உண்டு.

ஆனால் லெஸ்கோவ்வின் ‘மிட்ஸென்ஸ்க மாவட்டத்தின் மெக்பெத் சீமாட்டி’ முழுக்கக் காம வயப்பட்டுக் கள்ளக் காதலனோடு சேர்ந்து மாமனாரையும் கணவனையும் கொலை செய்யும் பெண்ணைப் பற்றியும் அவளுக்கு நேரும் முடிவைப் பற்றியுமானது.

இந்தக் குறுநாவல் தஸ்தவ்யஸ்கியின் ‘எபோக்’ இதழில் முதன்முதலில் வெளிவந்தது என்பது அதிக சுவாரசியம்

தரும் விஷயம்.

பெரும் வணிகர்களான பாரிஸ் இஸ்மாயிலோவ்வும் அவன் மகன் ஸினோவியும் வசதியான பண்ணையில் வாழ்கிறார்கள். ஸினோவியின் மனைவியான கத்தரீனாவுக்கு எந்த விதமான கேளிக்கைகளும் பொழுது போக்குகளும் இல்லாத சிறுநகர வாழ்க்கை அலுப்புத் தட்டுகிறது. பாரிஸும் தன் மகனுக்கு ஒரு வாரிசைப் பெற்றுத் தராததற்காக அவளை அடிக்கடி ஏசுகிறான். இதனால் கத்தரீனா வெறுப்படைகிறாள்.

ஒரு நாள் ஸினோவி வெளியூருக்குப் போயிருக்கும் நேரத்தில் பொழுது போகாமல் கத்தரீனா பண்ணையைச் சுற்றிப் பார்க்கப் போகிறாள். செர்கெய் என்ற பண்ணையாளைச் சந்திக்கிறாள். அவன் காமுகன் என்று ஒரு பண்ணைப் பெண் கத்தரீனாவிடம் சொல்கிறாள். ஆனாலும் கத்தரீனா அவனிடம் சரசமாகப் பேசுகிறாள்.

பின்னொரு நாள் செர்கெய் யாருமில்லாத நேரமாகப் பார்த்துக் கத்தரீனாவின் அறைக்குள் நுழைகிறான். இருவரும் உடலறவு கொள்கிறார்கள். கள்ளக்காதல் ஒரு வாரம் தொடர்கிறது. கத்தரீனாவின் அறையை விட்டு வெளியேறும் செர்கெய்யைக் கையும் களவுமாகப் பிடிக்கும் பாரிஸ் அவனைக் கை வலிக்கும்வரை அடித்துப் பாதாள அறையில் பூட்டுகிறான்.

திடீரென்று உணர்ச்சி பெற்றவளாகக் கத்தரீனா பாரிஸிடம் செர்கெய்யை விடுவிக்கும்படிக் கெஞ்சுகிறாள். பாரிஸ் மறுத்து அவளையும் தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறான். கத்தரீனா மாமனார் பாரிஸை விஷம் வைத்துக் கொல்கிறாள்.

ஊரிலிருந்து திரும்பும் கணவன் அவளிடம் அரசல் புரசலாகத் தனக்கு வந்த செய்தியைப் பற்றி விசாரிக்க கத்தரீனா செர்கெய்யை அறைக்குள் அழைத்துக் கணவனின் கண் முன்னாலேயே அவனை முத்தமிடுகிறாள். பிறகு இருவரும் ஸினோவியைக் கழுத்தை நெரித்துக் கொல்கிறார்கள். அவன் எந்தப் பாதாள அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தானோ அதே அறையில் ஸ்னோவியின் பிணத்தை செர்கெய் மறைத்து வைக்கிறான்.

இதன்பிறகு கத்தரீனாவும் செர்கெய்யும் வெளிப்படையாகவே பண்ணையில் காதலர்களாக வலம் வருகிறார்கள். கத்தரீனா கர்ப்பமாகிறாள். பாரிஸின் சகோதரி மகன் ஃப்யோதோர் சொத்தில் உரிமை கேட்டு வருகிறான். முதலில் அவனிடம் கனிவாய் இருக்கும் கத்தரீனா பிறகு மனம் மாறுகிறாள். பையன் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயம் செர்கெய்யும் கத்தரீனாவும் அவனைக் கொலை செய்ய முயல்கிறார்கள். தேவாலயத்திலிருந்து வீடு திரும்பும் ஊர்க்காரர்கள் அவர்கள் செய்வதைப் பார்த்து விடுகிறார்கள். அவர்கள் ஜன்னலை தடதடவென்று தட்டும் சத்தத்தைக் கேட்கும் செர்கெய் தான் கொலை செய்த பாரிஸும் ஸினோவியும்தான் வந்துவிட்டார்கள் என்று எண்ணிப் பயந்துபோய் ஊர் மக்களிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறான்.

கத்தரீனாவும் செர்கெய்யும் சைபீரியாவுக்கு அனுப்பப்படுகிறார்கள். சிறைக்கைதிகளைக் கொண்டு செல்லும் வண்டியில் கத்தரீனாவுக்குக் குழந்தை பிறக்கிறது. அதன்மீது அவ்விதமான அன்பும் இல்லாத கத்தரீனா குழந்தை பாரிஸின் சகோதரியிடம் வளரட்டும் என்று சொல்லி அதைப் பண்ணைக்கு அனுப்பிவிடுகிறாள்.

வண்டியில் செர்கெய்யும் கத்தரீனாவும் இரு பெண்களைச் சந்திக்கிறார்கள். செர்கெய் இரு பெண்களையும் அனுபவிக்க முயல்கிறான். முதல் பெண்ணோடு செர்கெய் இருப்பதைப் பார்க்கும் கத்தரீனா அந்தப் பெண் விபச்சாரி என்பதால் ஆபத்தில்லை என்று ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறாள். இரண்டாவது பெண் செர்கெய்யுடன் சேர்ந்து கத்தரீனாவை ஏளனம் செய்து சிறுமைபடுத்துகிறாள். கடைசியில் இரு பெண்களுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இருவரும் வழியில் குறுக்கிடும் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கிச் சாகிறார்கள்.

சிறுநகரப் பெண்களுக்குத் தனியே உணர்வுகளோ, விருப்பங்களோ இருக்கக்கூடாது, அவர்கள் வாழ்வு அவர்களுடைய கணவர்களின் வாழ்க்கையோடு பிணைந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அந்நாளைய பொதுபுத்தியை லெஸ்கோவ்வின் இந்த குறுநாவல் விமர்சனம் செய்கிறது.

சிறுநகரங்களில் வாழும் பெண்களுக்கும் கனவுகள், தனிமை யாவும் இருக்கின்றன. அவர்களை வெறும் பொம்மைகளாகவோ போகப் பொருள்களாகவோ நடத்துவதால் சில நேரங்களில் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளை இக்குறுநாவலின் வழியாக லெஸ்கோவ் ஆராய்கிறார்.

சிறுநகரத்தில் வாழும் திருமணமான பெண்ணின் உளச்சிக்கல்களை ஆராய்ந்த குஸ்டாவ் ஃப்ளோபேர்ட்டின் 1856ம் ஆண்டு வெளிவந்த ‘மேடாம் போவாரி’ நாவலோடு லெஸ்கோவின் ‘மிட்ஸென்ஸ்க் மாவட்டத்தின் மெக்பெத் சீமாட்டி’யைத் தாராளமாக ஒப்பிடலாம்.

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தில் வரும் மேக்பெத்தின் மனைவி தன் கணவனின் முன்னேற்றத்துக்குத் முற்றுக்கட்டையாக இருப்பவர்களைக் கொலை செய்வதற்குத் தடையாக இருக்கக் கூடிய தனது கருணை குணம் மிகுந்த பெண்மையை அகற்றிவிடும்படி தீய சக்திகளிடம் வேண்டுவாள்.

அதுபோலவே இக்குறுநாவலில் கத்தரீனாவும் தனது பெண்மைக் குணங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மெக்பெத் சீமாட்டியாக வர்ணிக்கப்படுகிறாள்.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தின் மெக்பெத் சீமாட்டி தனது கணவனுக்காகவே கொலைகளைச் செய்தது போலவே கடைசிவரை கத்தரீனாவும் எல்லாக் கொலைகளையும் அவள் காதலித்த செர்கெய்க்காகவே செய்கிறாள்.

ஊர் மக்கள் இருவரையும் பிடித்து வைத்து விசாரிக்கும்போதும் கத்தரீனா இதையேதான் அவர்களிடம் சொல்கிறாள்.

ஆனால் இதிலும் மெல்லிய நகைமுரண் ஒன்று உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வந்தவள் உண்மையிலேயே சீமாட்டி. லெஸ்கோவ்வின் குறுநாவலில் வருன் கத்தரீனா தன்னைச் சீமாட்டி என்று நினைத்துக் கொண்டாலும் உண்மையில் கவனம் பெற முடியாத ஒரு சிறுநகரத்துப் பண்ணை முதலாளியின் மனைவியே.

படைப்புக்களில் தினசரி பேச்சு வழக்கையும், நகைச்சுவையையும் பயன்படுத்தும் ‘ஸ்காஸ்’ (skaz) எழுத்துப் பாணியை ரஷ்ய இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியவர்களாகக் கோகோலும் லெஸ்கோவும் கொண்டாடப்படுகிறார்கள்.

தஸ்தவ்யஸ்கியைவிட காத்திரமான வகையில் லெஸ்கோவ் இக்குறுநாவலில் மனித மனத்தின் இருண்ட பக்கங்களையும் மனிதர்களின் உளச்சிக்கல்களையும் காட்டியிருந்தாலும் இக்குறுநாவலில் மீட்சி என்று இன்று இல்லாமலேயே முடிந்து போவது தஸ்தவ்யஸ்கியின் முக்கிய நாவல்களோடு ஒப்புநோக்க இதன் தரத்தைக் குறைக்கத்தான் செய்கிறது.

கத்தரீனா கடைசியில் நதியில் மூழ்கிச் சாவதும், அவளோடு செர்கெய்யின் காதலியையும் தண்ணீருக்குள் இழுத்துக் கொள்வதும் அவளுக்கோ வாசகர்கள் உட்பட மற்றவர்களுக்கோ மீட்சி தர முடியாத வெறும் துன்பியல் சம்பவங்களே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s