
இன்று சீனப் புத்தாண்டு. இன்றிலிருந்து தொடர்ந்து பதினைந்து நாள்களுக்குக் கொண்டாட்டங்கள் தொடரும்.
பதினைந்து நாள்களுக்கும் வளம், செல்வம், லாபம், உடலாரோக்கியம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் மீன்கள், காய்கறிகள், தேன், இனிப்பு வகைகள், ஆரஞ்சுகள் ஆகியவற்றை அதிகமாக உண்பார்கள். தேனும், இனிப்பு வகைகளும் நேரடியாக இனிப்பை ஞாபகப்படுத்தும். மற்ற உணவுகளின் பெயர்கள் அதிர்ஷ்டமான பொருள்களை நினைவுபடுத்துவதால் சேர்க்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு மீனைக் குறிக்கச் சீன மொழியில் ‘யூ’ என்ற சொல் ‘அதிகதிகம் (லாபம்)’ என்ற பொருளைக் குறிக்கும் சொல்லின் ஒலியைப்போலவே இருப்பதால் மீன் சீனப் புத்தாண்டு விருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
அது போலவே பா ச்சாய் என்ற பாசி சீன உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. அந்த வார்த்தை சீன மொழியில் ‘லாபம் அடைதல்’ என்ற சொற்றொடரைப்போல் ஒலிக்கிறது.
ஆரஞ்சுகளின் நிறமே தங்கத்தை நினைவுபடுத்துவதால் வீடுகளில் நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்திருப்பார்கள்.
ஆரோக்கியத்தைக் குறிக்கும் சிவப்பு நிறமும், செல்வத்தைக் குறிக்கும் தங்கம் மற்றும் ஆரஞ்சு நிறமும் எங்கும் நிறைந்திருக்கும். சாவைக் குறிக்கும் வெள்ளை நிறத்தை புத்தாண்டு நாள்களில் பெரும்பாலும் அணியமாட்டார்கள்.
சீனப் புத்தாண்டுக்கு முந்திய நாள் இரவு சீனர்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து விருந்துண்பார்கள். இதற்கு reunion dinner என்று பெயர். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இந்த ஒரு நாள் இரவு வீட்டுக்குத் திரும்பிக் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்பது மிகப் பெரும் கடமையாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் யாரோ அவர் வீட்டில் இந்த விருந்து நடக்கும்.
சீனாவில் இது பெரும் வைபவம். ரயில்களும், பேருந்துகளும், விமானங்களும் பயணிகளால் நிறைந்திருக்கும். இந்த வருடம் சீனாவில் வூஹான் காய்ச்சல் பரவியிருப்பதால் இந்தப் பயணங்கள் தடைபட வாய்ப்புள்ளது.
சீனர்கள் நாள்காட்டி சந்திரனை வைத்துக் கணக்கிடப்படுவது. ஒவ்வொரு சீன வருடமும் ஒரு மிருகத்தின் பெயரைக் கொண்டிருக்கும். இந்த வருடம் எலி வருடம். இதற்குப் பின் எருது, புலி, முயல், கடல்நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி என்று மொத்தம் பன்னிரண்டு வருடங்கள்.
ஒவ்வொரு மிருகத்துக்கும் விறகு, தீ, மண், இரும்பு, நீர் என்று ஐந்து வகைகள் உண்டு. அதன்படி இந்த வருடம் இரும்பு எலி வருடம்.
அடுத்த இரும்பு எலி வருடம் வர மொத்தம் அறுபது வருடங்களாகும். எங்கோ கேட்டது போல இருக்கிறதா? அதேதான், நம்மில் இருப்பதுபோல் அறுபதாண்டு கணக்குதான். இன்று பிறக்கும் பிள்ளைக்கும் அடுத்த முறை இரும்பு எலி வருடம் வரும்போது அறுபதாம் கல்யாணம் நடக்கும்.
எந்த நாட்டவரும் செய்யாத வகையில் சீனர்கள் புத்தாண்டின் போது சிவப்பு உறைகளில் பணத்தைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த உறைகளுக்கு ‘அங் பாவ்’ என்று பெயர். ‘அங் பாவ்’ என்ற வார்த்தைக்கு அர்த்தமே ‘சிவப்பு உறை’தான். திருமணமான பெரியவர்கள் திருமணமாகாத வயதில் சிறியவர்களுக்கு இந்த உறைகளைத் தருவார்கள். உறைகளில் வைக்கப்படும் பணம் இரட்டைப்படை எண்ணாக இருக்க வேண்டும் என்பது நியதி. மகிழ்ச்சி இரட்டிப்பாக வேண்டும் என்பதற்காக.
பணம் கொடுக்கக் கொடுக்க வளரும் என்பது சீனர்களின் பெரும் நம்பிக்கை.
குடும்பப் பிணைப்பை முன்னிலைப்படுத்துவது சீனப் புத்தாண்டு. அவ்வகையில் எல்லாப் பண்டிகைகளும் ஒரே நோக்கத்தைக் கொண்டவைதான்.
அனைவருக்கும் இரும்பு எலி வருடப் புத்தாண்டு வாழ்த்துகள்!