
தனது ‘ரஷ்ய இலக்கியத்தின் மீதான விரிவுரைகள்’-இல் விளாடிமீர் நபோகோவ் இவான் துர்கனேவ்வின் நாவல்களின் கதையமைப்பை மெனக்கெடல் இல்லாதது என்று விமர்சிக்கிறார்.
துர்கனேவ்வின் நாவல்களின் கதையமைப்பை ஃப்ளோபேர்ட்டின் ‘மாதாம் போவாரி’ நாவலின் கதையமைப்போடு ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியில்லை என்பது நபோகோவ்-இன் எண்ணம்.
ஃப்ளோபேர்ட்டின் நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளின் ஆழத்தையுன் தீவிரத்தையும் ஒப்புநோக்க துர்கனேவ்வின் ‘தந்தைகளும் மகன்களும்’ போன்ற நாவல்களே எளிமையானதுதான்.
நபோகோவ் துர்கனேவ்-இன் மீது வைக்கும் மிக முக்கிய விமர்சனமே அவர் எழுத்தில் போதிய உழைப்பைப் போடுவதில்லை என்பதுதான்.
ஆனால் துர்கனேவ்-இன் உரைநடையும், உரையாடல்களும் கன கச்சிதமானவை. அளந்து வைத்த வார்த்தைகளால் மிகத் துல்லியமான முறையில் கதையை நகர்த்திச் செல்லக் கூடியவை.
துர்கனேவ்வின் நாவல்களிலேயே இந்தத் தன்மைகளைக் காணலாம். அதைவிட முக்கியமாக அவருடைய சிறுகதைகளை கவிதை நயத்தோடும் மொழியின் வசீகரத்தோடும் முன்னெடுத்துச் செல்ல அவை உதவுகின்றன.
துர்கனேவ் எழுதிய சிறுகதைகளில் ‘மூமூ’ என்ற சிறுகதை புகழ் பெற்றது. துர்கனேவ்வின் உரைநடைச் சிறப்புக்கு நல்ல உதாரணமாக விளங்கிறது.
மாஸ்கோ நகரத்தில் ஒரு பணக்கார விதவைக் கிழவி தனியாக வாழ்கிறாள். அவளுடைய குரூரமான குணத்தால் அவளுடைய குடும்பத்தார் யாரும் அவளை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
கிழவிக்குக் கெராசிம் என்ற செவிட்டு ஊமை வேலைக்காரனாக இருக்கிறான். அவன் எல்லோரிடமும் சைகைகளாலேயே பேசுகிறான். கிழவியின் வீட்டிலிருக்கும் தாத்தியானா என்ற இளம் வேலைக்காரியை அவன் காதலிக்கிறான். அவளிடம் நெருங்கிப் பழகும் காப்பித்தோன் என்ற சக வேலைக்காரனை கெராசிம் மிரட்டுகிறான். குடிகாரனான காப்பித்தோனுக்குக் கெராசிம்மின்மீது கோபம் வருகிறதும்
ஒரு நாள் கிழவி தாத்தியானாவைக் காப்பித்தோனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறாள். தாத்தியானா காப்பித்தோனைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறாள். ஆனால் காப்பித்தோனும் தாத்தியானாவும் கெராசிம் கோபப்படுவானே என்று அஞ்சுகிறார்கள்.
கிழவியின் கட்டளைபடி காப்பித்தோனுக்கும் தாத்தியானாவுக்கும் திருமணம் நடத்தி வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த தலைமை வேலைக்காரன் கெராசிம்முக்குக் குடிப்பவர்களைப் பிடிக்காது என்று சொல்லித் தாத்தியானாவைக் குடிபோதையில் இருப்பதுபோல் நடிக்கச் சொல்கிறான்.
தாத்தியானாவுக்கும் காப்பித்தோனுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் காப்பித்தோனின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் மோசமாகவே அவனும் தாத்தியானாவும் கிழவியின் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் கிளம்பும்போது கெராசிம் தாத்தியானாவுக்குச் சிவப்புக் கைக்குட்டை ஒன்றைப் பரிசளிக்கிறான். கைக்குட்டையைப் பார்க்கும் தாத்தியானா அழுகிறாள்.
இதன்பிறகு கெராசிம் தண்ணீரில் மூழ்கிச் சாகப் போகும் பெண்நாயைக் காப்பாற்றுகிறான். அதை வீட்டிற்குக் கொண்டுபோய் மூமூ என்று பெயரிடுகிறான்.
ஒரு நாள் மூமூ கிழவியைப் பார்த்து பல் காட்டிக் குரைக்கவே கிழவி அந்த நாய் தனது வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். தலைமை வேலைக்காரனிடம் நாயைச் சந்தையில் விற்றுவிடச் சொல்கிறாள். நாயைக் காணாமல் கெராசிம் தவித்துப் போகிறான்.
நாய் எப்படியோ வீட்டிற்கு மீண்டும் வந்து விடுகிறது. கெராசிம் நாயைத் தனது அறையில் வைத்து வளர்க்கிறான். ஆனால் அது குரைக்கும் சத்தம் கிழவிக்குக் கேட்கிறது. அவளால் அனுப்பப்பட்ட வேலைக்காரர்கள் மூமூவைப் பிடிக்க வருகிறார்கள்.
வேறு வழியில்லாமல் தானே நாயை அப்புறப்படுத்தி விடுவதாகக் கெராசிம் சொல்கிறான். நாயை ஒரு படகில் கொண்டு போய் அதைத் தண்ணீரில் மூழ்கச் செய்து சாகடிக்கிறான்.
இந்தச் சிறுகதை மொத்தமும் கெராசிம் என்ற செவிட்டூமை அவனது சக வேலைக்காரியான தாத்தியானாவின் மீது கொண்டிருந்த ஒருதலை காதலைப் பற்றியும் அவளை இழந்த பிறகு அவன் வளர்ந்து வந்த மூமூ என்ற பெண் நாயைப் பற்றியுமான கதை என்று முதல் வாசிப்பில் தோன்றலாம்.
கெராசிம் முதலில் தாத்தியானா என்ற தனது அன்பிற்குரிய பெண்ணை இழப்பதும் பிறகு ஆசையாக வளர்த்துவந்த மூமூ என்ற பெண் நாயை இழப்பதும் இப்படியான மேம்போக்கான வாசிப்பை நியாயப்படுத்தலாம்.
ஆனால் கெராசிம், தாத்தியானா, காப்பித்தோன், மூமூ ஆகியோரின் கதைகளின் பின்னால் குரூர மனம் படைத்த அந்தக் கிழவிதான் இந்தக் கதை முழுவதும் வியாபித்திருக்கிறாள்.
கெராசிம் ஆசையாக வளர்த்த நாயை அவன் தன் கையாலேயே கொல்வதற்கு அவளே காரணமாகிறாள். தாத்தியானா கெராசிமுக்குக் கிடைக்காமல் போவதற்குக் கிழவி வேண்டுமென்றே காய்களை நகர்த்தினாள் என்று கதையில் நேரடியாகச் சொல்லப்படா விட்டாலும் நாயைக் கெராசிம் கொன்றதற்கு அவள் காரணமாக இருந்ததால் பெண்ணை அவன் இழப்பதற்கும் அவளே காரணமாக இருக்க வேண்டும் என்று வாசகர்களுக்குத் தோன்று ஆரம்பிக்கிறது.
கதையில் வரும் கிழவி தாத்தியானாவுக்கும் கெராசிம்முக்கும் காரணமில்லாமலே கெடுதல் செய்கிறாள். அவர்களை அவள் வெறுப்பதற்கு ஒரு காரணமும் சொல்லப்படவில்லை. ஆனால் அவள் வார்த்தையே சர்வ வல்லமையுடையதாக இருக்கிறது. அவள் வார்த்தையை மீற முடியாமல் தாத்தியானாவும் கெராசிம்மும் அவள் விருப்பப்படியே நடக்கிறார்கள்.
கடைசியில் தாத்தியானாவும் கெராசிமும் கிழவியின் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.
சுருங்கச் சொன்னால் கெராசிம்மையும் தாத்தியானாவையும் ஆட்டிப் படைக்கும் குரூரமான கிழவி யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத காலம் அல்லது விதி அல்லது கடவுள் போல கதை முழுவதுமே யாரும் நெருங்க முடியாதவளாய் நிறைந்திருக்கிறாள்.
இந்தக் காரணத்தால் துர்கனனேவ் எழுதிய சிறுகதைகளில் ‘மூமூ’ மிகவும் கனமான கதை.
செவிட்டூமையை வளர்ப்பு நாய்க்குப் பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பான். ‘மூமூ’ என்றுதான் வைப்பான்.
அதுபோலவே குரூரரமானதும் வலியதுமான விதி அல்லது கடவுளால் ஆட்டிப் படைக்கப்படும் மனிதனும் சொற்கள் எல்லாம் வற்றிப்போய்ச் செவிட்டூமையாகவே இருப்பான்.