
19ம் நூற்றாண்டுக்கு முன்னால் நாவல் தனிவடிவமாகக் கருதப்பட்ட அளவுக்குச் சிறுகதை என்பது பெரும்பாலும் தனிவடிவமாகக் கருதப்படவில்லை.
இன்றிருக்கும் சிறுகதை வடிவத்தின் வளர்ச்சிக்கு முன்னர் வந்த கதைகள் ஈசாப் கதைகள், பஞ்சதந்திரம் போன்ற தொகுப்புகளில் வரக்கூடிய நீதிக்கதைகளாகவோ, ஆயிரத்தொரு இரவுகள் போன்ற பெரும் தொகுப்புகளில் சேர்க்கப்பட்ட பொழுதுபோக்குக் கதைகளாகவே இருந்தன.
இத்தகைய கதைகள் சம்பவங்களின் தொகுப்பாகவே அமைந்திருந்தன. அவற்றில் வரும் கதாமாந்தர்கள் குறிப்பிட்ட குணநலன்களின் வார்ப்படங்களாகவே, கதையை நகர்த்தப் பயன்படுத்தும் அல்லது கதையின் முக்கியச் செய்திகளை வலியுறுத்த உதவும் கருவிகளாக மட்டுமே பெரும்பாலும் பயன்பட்டார்கள்.
மனிதர்களின் உளச்சிக்கல்களையோ அகவயமான தூண்டல்களையோ இக்கதைகள் பெரும்பாலும் எடுத்துச் சொல்லவில்லை.
மனிதர்களின் உளவியல் போக்குகளை ஆராயும் கதைகளின் முதல் முயற்சிகளாக 14ம் நூற்றாண்டில் வெளிவந்த பொக்காச்சியோவின் ‘டெக்காமெரோன்’ கதைகளையும், சாசரின் ‘கேண்டர்பரி கதைகளையும்’ கொள்ளலாம்.
18ம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும் ஃபிரான்ஸிலும் மனிதர்களின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்ட நாவல்கள் தோன்றிய நேரத்தில் அவற்றின் சுருக்கமான வடிவமாக இக்காலச் சிறுகதைகளின் முன்னோடி வடிவங்கள் தோன்றின.
ஜெர்மனியில் 1776லிருந்து 1822வரை வாழ்ந்த ஹாப்ஃமன்-உம் (E.T.A. Hoffman), 1803லிருந்து 1870வரை வாழ்ந்த பிரஞ்சுக்காரரான ப்ரோஸ்பர் மெரிமே-யும் (Prosper Merimee) நவீனச் சிறுகதை வடிவத்தின் பிதாமகர்களாகக் கருதப்படுகிறார்கள்.
நவீனச் சிறுகதைக்கு ‘ஒரு முக்கியமான சம்பவத்தின் வழியாகவோ, ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சில முக்கியமான சம்பவங்களின் வழியாகவோ வாசகருக்குள் ஒரே ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் கதை’ என்ற இலக்கணம் வகுக்கப்பட்டது.
ரஷ்ய இலக்கிய வெளிக்குள் புஷ்கினும் கோகோலும் நவீனச் சிறுகதையை அறிமுகப்படுத்தினார்கள்.
அவர்களுக்குப் பின் வந்த ரஷ்ய எழுத்தாளரான அந்தோன் செக்காவ் (1860-1904) நவீனச் சிறுகதை வடிவத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றவராகக் கருதப்படுகிறார்.
(1) கதையில் வரும் கதாபாத்திர மற்றும் இட விவரிப்புகளைக் கதையின் நோக்கத்துக்குத் தேவையான அளவுக்கு மட்டும் குறைத்தல்; (2) வாசகர்களுக்குள் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை நோக்கி விரையும் சிக்கலில்லாத கதையோட்டம்; (3) கதாபாத்திரங்களின் செயல்கள் வழியாகவும் உரையாடல்களின் வழியாகவும் அவர்களின் குணநலன்களை விவரித்தல் என்பவனவற்றைச் சிறுகதைகளின் இயல்பாக்கியவர்களில் செக்காவ் மிகவும் முக்கியமானவர்.
1888ம் ஆண்டு மே மாதம் தனது சகோதரருக்கு எழுதிய கடிதமொன்றில் சிறுகதை எழுத்தாளர்களுக்குக் கீழ்க்கண்ட ஆறு விதிகளைச் செக்காவ் பரிந்துரைக்கிறார்:
1. சிறுகதையில் அரசியல், பொருளாதாரம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி மிக நீண்ட பிரச்சாரங்களைத் தவிர்த்தல்.
2. ஆசிரியரின் சொந்தக் கருத்துகளைக் கலக்காமல் உள்ளதை உள்ளபடி விவரித்தல்
3. மனிதர்கள், பொருட்கள் பற்றி மிகைப்படுத்தப்படாத வருணனைகள்
4. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக
5. முன்னால் வந்த கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களையும், சொல்ல பயன்படுத்திய உத்திகளையும் முடிந்தவரை அறவே தவிர்ப்பது; எல்லா நேரத்திலும் தைரியத்தோடு புதுமையான விஷயங்களைக் கதைகளில் முயல்வது
6. கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் கருணையோடு அணுகுதல்
சிறுகதை ஆசிரியர் தனது கதையில் விவரிக்கும் மாந்தர்கள்மீதும் சம்பவங்கள்மீதும் கருணையும் அக்கறையும் இல்லாதவனாக இருந்தால் அவரால் விவரிக்கப்படும் சம்பவத்தின் அல்லது மனிதனின் உண்மையான ஆழங்களை என்றும் அலச முடியாது என்பது செக்காவின் எண்ணம்.
அப்படிக் கருணையோடு எழுதப்படாத சிறுகதை மூளியாக என்றும் முழுமையில்லாமல் நிற்கும்.
அதுதான் சிறுகதையின் தோல்வி.