
கோகோல், துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரின் நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மிக நுண்ணிய உளவியல் நகர்வுகளுக்காக உலக இலக்கியத்தின் உச்சங்களாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்த உன்னதமான நாவல்களின் முன்னோடிகள், 19ம் நூற்றாண்டின் உளவியல் நாவல்களின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு வழிவகுத்துத் தந்தவை ஜெர்மானிய நாவலாசிரியர் யோஹான் வுல்ஃப்காங் வோன் கதேயின் நாவல்கள்.
1749ல் பிறந்த கதே மொத்தம் நான்கு நாவல்கள் எழுதினார். ஃபௌஸ்ட் என்ற முக்கியமான நாடகத்தையும், ப்ரொமீதியஸ் என்ற மிகச் சிறந்த நீண்ட கவிதையையும் எழுதினார். சிறந்த இலக்கிய, கலை விமர்சகராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாட்டினை உடையவராக இருந்தார்.
கதேயைப் பற்றி ஏதேனும் இதழுக்கு அனுப்ப நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதுகிறேன். ஆனாலும் ரஷ்ய நாவலாசிரியர்கள்மீது அவருக்கு இருந்த தாக்கத்தை அறிய 1774ல் அவருடைய 24வது வயதில் அவர் எழுதிய ‘இளம் வெர்த்தரின் துன்பங்கள்’ (The Sorrows od Young Werther) நாவலை ஒரு பார்வை பார்த்தாலே போதும்.
ஆரம்ப காலத்து ஆங்கில நாவல்களின் பாணியில் இந்நாவலின் கதை வெர்த்தர் என்ற இளம் ஓவியன் தனது நண்பனான வில்ஹெல்முக்கு எழுதும் கடிதங்களின் வழியாகச் சொல்லப்படுகிறது.
வால்ஹெய்ம் என்ற சிறு கிராமத்துக்குச் செல்லும் வெர்த்தர் அங்கு வாழும் மக்களின் எளிய வாழ்க்கையால் கவரப்படுகிறான். அங்குச் சார்லோட் என்ற இளம் பெண்ணின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கிறது. பெற்றோர்களை இழந்த சார்லோட் தன் சகோதர சகோதரிகளை ஒற்றை ஆளாக வளர்க்கிறாள். வெர்த்தர் அவள்மீது காதல் கொள்கிறான். ஆனால் சார்லோட் தன்னைவிட வயதானவனான ஆல்பெர்ட்டுக்கு நிச்சயப்பட்டிருக்கிறாள்.
மிக மெல்லிய உணர்வுகளையுடையவனான வெர்த்தர் ஆல்பெர்ட் சார்லொட் இருவரிடமும் நட்பாக இருக்கிறான். ஆனால் சார்லோட் மீது கொண்டுள்ள காதல் அவனை வருத்தவே வெய்மார் நகரத்துக்குப் போகிறான். அங்கு பணக்ககாரர்கள் உயர்ந்த குடியில் பிறக்காத வெர்த்தரை நிராகரிக்கிறார்கள். வெர்த்தர் மீண்டும் வால்ஹெய்முக்குத் திரும்பும்போது சார்லோட் ஆல்பெர்ட் இருவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது.
மனைவி என்ற கடமையிலிருந்து தவற விரும்பாத சார்லோட் வெர்த்தரிடம் இனியும் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என்று சொல்கிறாள்.
இதனால் மனதுடைந்து போன வெர்த்தர் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, ஆல்பெர்ட்டுக்குத் தனக்கு இரண்டு கைத்துப்பாக்கிகள் வேண்டும் என்று கடிதம் எழுதுகிறான். கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் சார்லோட் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டவளாய் வெர்த்தருக்குக் கைத்துப்பாக்கிகளை அனுப்புகிறாள். வெர்த்தர் தன் தலைய தானே சுட்டுக் கொள்கிறான். அவன் சாகப் பன்னிரண்டு மணி நேரம் பிடிக்கிறது.
கிறித்துவப் போதனைகளின்படி தற்கொலை பாவம் என்பதால் அவனுடைய சவ அடக்கத்தை நடத்த பாதிரியார்கள் மறுக்கிறார்கள். சார்லோட்டும் ஆல்பெர்ட்டும்கூட அவனுடைய சவ அடக்கத்துக்குப் போகாமல் இருக்கிறார்கள்.
கடமையே கண்ணாக இருக்கும் சார்லோட் தன் மனதைப் பிடித்து ஆட்டும் துன்பத்தால் செத்துவிடுவாள் என்ற அறிகுறியோடு நாவல் முடிகிறது.
கதே 1760களிலிருந்து 1780கள் வரை ஜெர்மானிய கலை, இலக்கிய உலகங்களில் ஆதிக்கம் செலுத்திய Sturm and Drang இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவ்வியக்கம் அந்நாளில் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிய அறிவுப் புரட்சிக்கு எதிராக மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் உணர்ச்சிகளால் உந்தப்படும் மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தந்தது.
பின்னாளில் ரஷ்ய மாஸ்டர்களான துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரின் நாவல்களில் மிக உச்ச நிலைக்குப் போன சில அகவயச் சிக்கல்கள் கதேயின் ‘இளம் வெர்த்தரின் துன்பங்கள்’ நாவலில் காணலாம்.
காதலுக்காகத் தன்னையே அழித்துக் கொள்ளுதல், படிப்பறிவில்லாத பாமர மக்களிடையே கிடைக்கக்கூடிய டால்ஸ்டாலிய ஆன்மீக அனுபூதி, கடமைக்கும் சுயத்துக்கும் இடையேயான அகச்சிக்கல், துன்பத்தின் வழியாக மீட்சி போன்ற ரஷ்ய இலக்கியத்தின் அடிப்படை அலசல்களைக் கதே தன் நாவலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய நாவல்களைத் தீவிரமாய் வாசிப்பவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல் ‘இளம் வெர்த்தரின் துன்பங்கள்’