பத்து சிறந்த ரஷ்ய சிறுகதைகள் (6) – மாக்ஸிம் கார்க்கியின் ‘செல்காஷ்’

மாக்ஸிம் கார்க்கியின் நாவல்களை வாசித்து அவற்றின் சமூக அலசலின் ஆழத்தையும் வீச்சையும் உணர்ந்தவர்கள் அவர் எழுதிய சிறுகதைகளின் நுணுக்கமான வேலைப்பாடுகளை அறியாமல் போகலாம்.

டால்ஸ்டாய், செக்காவ் தொடங்கி தனது காலத்தில் வாழ்ந்த அநேக ரஷ்ய எழுத்தாளர்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்த கார்க்கி தனது வாழ்நாளில் இறுதி வரையில் சிறுகதைகள் எழுதினார்.

செக்காவ்-க்கு அவர் எழுதிய கடிதங்களில் சிறுகதை வடிவத்தின் மீது அவருக்கு இருந்த ஆழமான ஈடுபாடும், சமகால ரஷ்ய சிறுகதைகளைப் பற்றி அவருடைய விமர்சனப் பார்வையும் தெளிவாகின்றன.

சிறுகதைகளுக்குக் கார்க்கிச் செக்காவையே ஆதர்சமாகக் கொண்டிருந்தார். கார்க்கி எழுதிய சிறுகதைகளில் தலைசிறந்த கதைகளில் ஒன்றாக 1895ம் வெளிவந்த ‘செல்காஷ்’ (Chelkash) சிறுகதை கருதப்படுகிறது.

செல்காஷ் என்பவன் துறைமுகப் பகுதியில் உள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயமான கடத்தல்காரன். சற்றே வயசாளி. குடிகாரன்.

ஒரு நாள் கடலிலிருந்து கடத்தல் பொருள்களை இறக்கிக் கொண்டு வர படகோட்டி தேவைப்படுகிறான். இந்த வேலைக்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான பழைய கூட்டாளி மைக்கேலைத் தேடிப் போகிறான்.

ஆனால் மைக்கேல் காலில் அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கிறான் என்று செல்காஷுக்குத் தெரிய வருகிறது. அதனால் வேறு வழியில்லாமல் வயலில் தினக்கூலி வேலை முடிந்த பிறகு கிராமத்துக்குத் திரும்பக் காத்திருக்கும் காப்பிரியல் என்ற நாட்டுப்புற இளைஞனைத் தனக்காகப் படகோட்டும்படி கேட்டுக் கொள்கிறான். கடத்தல் வேலை என்று சொல்லாமல் காப்பிரியலிடம் தான் கடலில் மீன்பிடிக்கப் போவதாகச் சொல்கிறான்.

கடத்தல் முடிந்து நிலத்துக்குத் திரும்ப வரும் நேரத்தில் காப்ரியலுக்கு உண்மை தெரிந்து விடுகிறது. கையில் இருக்கும் பட்டுத் துணி முதலான சுங்க வரி கட்டாத கடத்தல் பொருள்களின் மதிப்பு குறைந்தது ஐநூறு ரூபிள்களாவது தேறும் என்று செல்காஷே அவனிடம் சொல்கிறான்.

அடுத்த நாள் காலை செல்காஷ் கடத்தல் பொருள்களை ஐநூற்று நாற்பது ரூபிள்களுக்கு விற்கிறான். அதில் நாற்பது ரூபிள்களைக் காப்ரியலுக்குத் தருகிறான். ஆனால் செல்காஷுக்குக் கிடைத்த தொகையின் மதிப்பு காப்ரியலை அதிரச் செய்கிறது. அந்தப் பணத்தால் சொந்தமாக நிலம வாங்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறான். செல்காஷின் காலில் விழுந்து மொத்த பணத்தையும் தனக்குத் தந்துவிடும்படி கெஞ்சுகிறான்.

செல்காஷ் கேவலம் பணத்துக்காக இப்படி மானத்தைவிட்டுக் கெஞ்சுவதை வெறுக்கும் செல்காஷ் காப்ரியலிடம் மொத்த பணத்தையும் தூக்கி எறிகிறான். பணத்தை எடுத்துக் கொள்ளும் காப்ரியல் படகில் இருக்கும்போதே துடுப்பினால் செல்காஷின் தலையில் அடித்துப் பணத்தை பறித்துக் கொள்ளும் எண்ணம் தனக்குத் தோன்றியதாகச் செல்காஷிடம் சொல்கிறான்.

இதைக் கேட்டு ஆத்திரமடையும் செல்காஷ் பணம் மொத்தத்தையும் பிடுங்கிக் கொண்டு நடக்கிறான். செல்காஷின் பின்னந்தலையைக் குறி பார்த்து காப்ரியல் பெரிய கல்லை வீசுகிறான். செல்காஷ் காயத்திலிருந்து ரத்தம் பெருக சாலையில் விழுகிறான். காப்ரியல் இப்போது செல்காஷிடம் தன்னை மன்னிக்க வேண்டும் என்று சாலையில் மண்டியிட்டபடி கெஞ்சுகிறான்.

அவன் செயல்களைப் பார்த்து வெறுப்படையும் செல்காஷ் தன்னிடமிருந்த தொகையில் மிகப் பெரும் பங்கை காப்ரியலிடம் தருகிறான். இருவரும் பிரிந்து போகிறார்கள்.

கார்க்கியின் கதைகூறலும் விவரிக்கும் ஆற்றலும் அபாரமாக வெளிப்பட்டிருக்கும் கதை ‘செல்காஷ்’. துறைமுகப் பகுதியில் ஒரு ராஜாவைப்போல திரியும் வயசாளி செல்காஷின் திமிரைச் சொல்வதாகட்டும், அல்லது நாட்டுப்புறத்தான் என்று இளைஞனிடம் முதலில் பிரியம் வைத்துப் பின்பு காரணமே இல்லாமல் காப்ரியலை வெறுப்பதை விவரிப்பதாகட்டும் கார்க்கி மிக நுணுக்கமாக விவரிப்புகளாலும் உரையாடல்களாலும் தனது ஆற்றலை நிரூபிக்கிறார்.

செக்காவுக்குக் கைவந்த அதே அவதானிக்கும் ஆற்றலும் சிறு சிறு விவரங்களால் மிக துல்லியமான மனிதச் சித்திரங்களை வரையும் பாணியும் இந்தக் கதையில் கார்க்கிக்கும் கைவந்திருக்கின்றன.

கதையின் தொடக்கத்தில் மிக எளிமையான, வசீகரமான நாட்டுப்புற இளைஞனாகக் காட்டப்படும் காப்ரியல் கதையில் இறுதியில் வெறுக்கத்தக்கவனாக மாறுவதைக் காட்டுவதன் மூலமாக பணத்தாசை எப்படி மனிதனின் ஆன்மாவைச் சீரழிக்கிறது என்று காட்டுகிறார்.

எனினும் காப்ரியலை வெறும் பணத்தாசை கொண்டவனாக மட்டும் காட்டியிருந்தால் இது சாதாரணமான கதையாகவே போயிருக்கும். தினக்கூலிக்காக மாரடிக்கும் காப்ரியல் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொந்தமாக நிலம் வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

அவன் குடும்பத்தாருடைய எல்லா நலனும் நிலம் வைத்திருத்துடன் தொடர்புடையதாகவே இருப்பதாகச் சிறுகதையில் காட்டப்படுகிறது. கடலில் முதன்முறையாகப் பயணப்படும்போது இருளையும் கொந்தளிக்கும் கடலையும் பார்த்து காப்ரியல்படும் அச்சமும் பதற்றமும் செல்கேஷைக் கல்லால் அடித்தவுடன் அவனைப் பிடித்தாட்டும் குற்ற உணர்ச்சிக்கு ஒப்பாய் இருக்கிறது.

முதல் கடல் பயணம்போலவே குற்றவாளி என்ற நிலைக்கு முதல் பயணமும் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

ஆனால் இரண்டும் நடந்து முடிந்தவுடன் முதலிலிருந்த நிலைக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை.

முதலில் கடலைக் கண்டு அச்சப்படும் காப்ரியலை அடிப்பேன் என்றும் கொல்வேன், கடலுக்குள் பிடித்துத் தள்ளுவேன் என்றும் சொல்லிச் செல்கேஷ் தொடர்ந்து படகோட்ட வைக்கிறான். ஆனால் நிலத்துக்கு வந்தவுடன் வன்முறை எண்ணம் அவனிடமிருந்து காப்ரியலுக்கு மாற்றப்படுகிறது.

தெருவோரமாய் அவன் கண்டெடுத்த இளைஞம் செல்கேஷின் திருட்டுக்கும் வன்முறைக்கும் வாரிசாகிறான்.

காலகாலமாக மனிதர்களுக்குள்ளே உள்ள பணத்தாசையும் அதன் சீரழிக்கும் ஆற்றலும் இதைச் சாத்தியமாக்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s