
என்னைக் கேட்டால் 2020ம் ஆண்டு வெளிவந்துள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்றாக கே. கணேஷ்ராம்-இன் ‘காஃப்காவின் நுண்மொழிகள்’ என்ற நூலைச் சொல்வேன்.
இது 1931ல் வெளிவந்த செக் எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்காவின் Zurau Aphorisms என்ற நூலின் மொழிபெயர்ப்பு.
இதன் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைத்தது. அதில் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை வழக்கம்போல் கன துல்லியம். காஃப்காவின் ஏனைய படைப்புகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த நுண்மொழிகள் ஒரு சாவி என்று எஸ்.ரா. மிக அழகாக விளக்கினார். தமிழில் காஃப்கா மொழிபெயர்ப்புகளின் வரலாற்றை அவர் சொன்னார். ஸ்ருதி டீவி பதிவு செய்துள்ளார்கள்.
1883ல் பிறந்து 1924ல் அவருடைய 41வத்ய் வயதில் இறந்த காஃப்கா 1917லிருந்து 1918வரை காச நோயால் அவதிபட்டார். காசநோயால் அவதிபடுகிறவர்கள் எங்கேணும் தூய்மையான காற்றும் சூழலும் உள்ள இடத்துக்குப் போய் தங்கினால் அவர்கள் குணமடைவார்கள் என்பது அந்நாளைய நம்பிக்கை.
காஃப்காவும் தன் சகோதரி வாழ்ந்த இடமான ஸூராவ் என்ற கிராமத்துக்குப் போய்த் தங்கினார்.
காசநோய்க்கு எதிரான பாசில் கால்மெட்-கெரின் (bacille Calmette-Guerin) என்ற காசநோய்க்கு எதிரான தடுப்பூசி 1906லேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அது முதன்முறையாக 1921ல்தான் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டது.
அதுவரை, குணத்தைத் தேடி நாட்டுப்புறங்களுக்குப் போனவர்களில் 50% பேர் நோயால் இறந்து போனார்கள்.
அங்கு அவர் எழுதிய டைரிக் குறிப்புகளிலிருந்து 109 சிறு துணுக்குகளை எடுத்து அவர் தனாக எழுதி வைத்தார். காஃப்காவின் மரணத்துக்குப் பின் அவர் நண்பர் மாக்ஸ் பிராட் “பாவம், எதிர்ப்பார்ப்பு, துயரம், மெய்வழி” என்ற தலைப்பில் அச்சிட்டார்.
இந்த நுண்மொழிகளை எப்படிப் புரிந்து கொள்வது? தனது மொழிபெயர்ப்பின் இறுதியில் கணேஷ்ராம் நல்ல அறிமுகம் ஒன்றைத் தந்திருக்கிறார்.
என் பார்வையில் அந்த அறிமுகத்தில் அதிகம் தொடாத ஒன்றைத் தர விரும்புகிறேன். காஃப்கா தன் வாழ்நாள் முழுவதுமே தன்னுடைய தோற்றமும் ஆளுமையும் அருவருக்கத் தக்கதாக இருந்ததாகவே நம்பினார். அவருடைய முக்கிய படைப்புகளில் அருவருக்கத்தக்க பூச்சியாகவும், பெயரில்லாதவர்களாவும், முகமில்லாதவர்களாகவும் சித்தரிக்கப்படும் மனிதர்களின் அடிப்படை சித்திரமே காஃப்காவின் இந்தச் சுய வெறுப்பில்தான் ஆரம்பமானது என்ற பார்வையும் விமர்சகர்களிடையே உண்டு.
இந்தச் சுயவெறுப்பின் ஆணிவேர் காஃப்காவின் யூத மத அடையாளத்திலிருந்து எழுந்தது. காஃப்கா வாழ்ந்த ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசில் யூதர்களின் மதமும், எபிரேய-ஜெர்மானிய வார்த்தைகள் கலந்த யித்திஷ் மொழியின் ஓசைகள் கலந்து அவர்கள் பேசிய ஜெர்மன் மொழியும் பரிகாசத்துக்கு உள்ளாகியிருந்தன.
காஃப்கா வாழ்ந்த காலத்தில் முன்னேற விரும்பும் அவர் வயதுடைய யூத இளைஞர்களுக்கு யூத மதம் பெரும் பாரமாக இருந்தது. அவர்கள் பழமைவாய்ந்த யூத மதத்தை நவீன உலகத்தோடு ஒத்துப்போக வைக்க நினைத்தார்கள்.
ஜோஸுவா ஆப்ரகாம் ஹேர்ஷெல் போன்ற யூத சிந்தனையாளர்கள் நவீனக் கொள்கைகளுக்கு ஏற்ப யூத இறையியல் கொள்கைகளை விளக்க முற்பட்டார்கள்.
யூதனா ஜெர்மானியனா என்ற பிளவுண்ட அடையாளத்தோடு வாழ்ந்த காஃப்கா மரணத்தை எதிர்கொண்ட போது தனக்குள் ஏற்பட்ட அடையாளச் சிக்கலைத் தீர்க்க பயன்படுத்திய கருவியே இந்த நுண்மொழிகள் என்று எனக்குத் தோன்றுகின்றன.
46ம் நுண்மொழியில் காஃப்கா sein என்ற ஜெர்மானிய வார்த்தைக்கு ‘அங்கே இருத்தல்’ அல்லது ‘கடவுளுக்குரியவராக இருத்தல்’ என்ற இரு பொருள்கள் உள்ளதாகச் சொல்கிறார். இது முழுக்க ஜோஸுவா ஹேர்ஷெல்லின் எழுத்துக்களிலிருந்து பெறப்பட்ட சிந்தனையாகும். எபிரேய பைபிளில் மோசே தேவனிடம் அவருடைய பெயரைக் கேட்டபோது தேவன் ‘இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக” என்கிறார்.
இருக்கிறவராக இருக்கும் யூதர்களின் விசித்திரமான தேவன் ஜெர்மானிய sein என்னும் வார்த்தை வழியாக ஜெர்மானியர்களுக்கும் உவப்புடையவராக்கக் காஃப்கா முயல்கிறாரோ?
அதுபோலவே அன்பே வடிவானவர் என்று சித்தரிக்கப்படும் கிறிஸ்துவ தேவனுடன் ஒப்பிடுகையில் பாவங்களைக் கடுமையாகத் தண்டிக்கும் கடவுள் என்று மேற்குலகால் கட்டமைக்கப்படும் யூதக் கடவுள் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து கனிகளைப் புசித்ததற்காக வெளியேற்றவில்லை என்றும் மேலும் கனிகளைப் புசித்துப் பாவங்களைச் செய்யாமல் இருக்கவே வெளியேற்றப்பட்டார்கள் என்று நுண்மொழி 82 சொல்கிறது.
இப்படி அடையாளச் சிக்கலால் பிளவுண்டு அமைதியில்லாமல் போன மிக மென்மையான மனதுடைய காஃப்காவின் ஓயாத சுய பரிசோதனையாக நுண்மொழிகள் அமைந்திருக்கின்றன.
எஸ்.ரா சொல்வதுபோல் காஃப்காவின் நூல்களில் வரும் பிளவுண்ட மனிதர்களையும் துன்பப்படும் மனிதர்களையும் புரிந்து கொள்ள காஃப்காவின் நுண்மொழிகள் இன்றியமையாத திறவுகோல்.
காஃப்காவின் தமிழ் விசிறிகள் பயனடையும் வகையில் இதை அழகாக மொழிபெயர்த்த கே. கணேஷ்ராமையும், வெளியிட்ட நூல்வனத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.