ஒரு தாளை எடுத்து வைத்துக் கொண்டு ‘நாவல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு நான்கு வரிகளுக்கு மேல் போகாமல் பதில் எழுதத் தொடங்கினோம் என்றால் என்ன எழுதுவோம் என்பது நல்ல கேள்வி.
பிற இலக்கிய வடிவங்களை மிகத் துல்லியமான இலக்கணங்களால் வரையறுப்பது ஓரளவுக்குச் சாத்தியம்தான்.
சில நேரங்களில் கவிதைகள் குறுங்கதைகள் அல்லது சிறுகதைளின் அம்சங்களைக் கொண்டிருந்தாலும் கவிதைகளை வேறுபடுத்திக் காட்டும் தெளிவான கட்டமைப்பு உண்டு.
சிறுகதைகள் கவிதைத்தனமான மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவை சில இன்றியமையாத இலக்கணங்களால் சிறுகதைகளாக அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றன.
நாவலை ஒரு குறிப்பிட்ட வார்த்தை எண்ணிக்கையை உடைய நீளமான கதை என்று சொல்லலாம். ஆனால் இதுகூட சிக்கலான வரையறைதான். 30,000 வார்த்தைகளையுடைய நாவல்களும் உண்டு. 1,50,000 வார்த்தைகளுக்குப் போகும் நாவல்களும் உள்ளன.
பெரிய நாவல், சின்ன நாவல் என்று சொல்லலாம். ஆனால் அப்படியும் நாவல் என்பது என்ன என்று இது தெளிவாக்காது.
ரஷ்ய கலை விமர்சகர் மிக்காயில் பாக்தீன் நாவல்கள் மற்ற எல்லா வடிவங்களையும் தனக்குள் உள்ளடக்கும் சாத்தியம் உள்ள எதிர் இலக்கிய வடிவம் என்று சொல்கிறார். உதாரணத்துக்கு, புஷ்கினின் இயூஜின் ஓனெகின் முழுவதும் கவிதை நடையில் எழுதப்படிருந்தாலும் நாவல் என்றே கருதப்படுகிறது.
நாவலில் புனைவெழுத்தின் கதைகூறல், விவரங்களைப் பட்டியலிடக்கூடிய கட்டுரை நடை, நாடக வடிவத்துக்குச் சொந்தமான உரையாடல்கள், கவிதைகள் என்று எல்லாவற்றையும் அடைத்துவிடலாம். அப்போதும் அந்தப் படைப்பு முழுவதையும் நாவல் என்று அழைப்பதில் சிரமம் இருக்காது.
நாவலுக்கு மெய்யியல் அறிஞர் ஹெகெல் தரும் விளக்கம் எனக்குச் சிறந்ததாகத் தோன்றுகிறது.
“நாவல் என்பது வெகு சாதாரணமான தினசரி காரியங்களைக் கொண்டாடும் காவியம்”.
பழைய காவியங்களைப்போல் நாவல்கள் குறிப்பிட்ட மனிதர் அல்லது மனிதர்களின் கதையைச் சொல்கின்றன.
காவியக் கதாநாயகர்கள் சந்திக்கும் சிக்கல்களைப்போலவே நாவலின் கதாநாயக நாயகியரும் சந்திக்கிறார்கள். இந்த வாழ்வா சாவா என்ற போராட்டத்தைச் சுற்றியே காவியம், நாவல் ஆகியவற்றின் கதை நகர்கிறது. (இதில் வாழ்வா சாவா என்பதை உடல் சார்ந்த மரணமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மனிதர்களின் ஆன்மாவை, மதிப்பைச் சிதைக்கும் எவ்வித சிக்கலும் அவரவரைப் பொறுத்தவரை மரணத்துக்கீடான விஷயம்தான்).
கடைசியாக, காவியத்தில் வருவதுபோலவே நாவலிலும் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரம் நடத்தும் அறப்போராட்டத்தின் எதிரெதிர் அணியின் உறுப்பினர்களாகவும், பல நேரங்களில் வேறுபட்ட தத்துவச் சிந்தனைகளின் குறியீடுகளாகவும் வந்து போவார்கள்.
ஆனால் காவியம் அன்றாட வாழ்க்கைக்கு முற்றிலும் வேறுபட்ட ஆமானுஷ்யங்கள், அற்புதங்கள் நிறைந்த நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது. நாவல் விடாப்பிடியாக இந்த உலகத்தில் தினசரி நடக்கும் வாழ்க்கையின் போராட்டங்களைச் சித்தரிக்கிறது.
ஒரு வகையில் காவியங்கள் பின்னால் பார்ப்பவை. கடந்து போன இறந்தகாலங்களின் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பவை.
நாவல்கள் நிகழ்காலச் சூழல்களில் சிக்கல்களில் வேரூன்றி இருப்பவை. பழைய காவியக் கதாபாத்திரங்களையும் கதைகளையும் சுற்றி எழுதப்பட்டிருந்தாலும் நாவல் தற்காலத் தேவைகளின் வழியாக அவற்றை நிகழ்காலப்படுத்தி விடுகிறது.
தினசரி வாழ்க்கையின் வெகு சாதாரணமான நிகழ்வுகளையும் மனிதர்களையும் காவியமாக்கித் தருவதே நாவலின் இலக்கணம் என்கிறார் ஹெகெல்.
நல்ல நாவல்கள் இத்தகைய காவியத்தன்மையைக் கொண்டவை.
