மிலான் குண்டேரா 1986ல் வெளிவந்த ‘நாவல் கலை’ என்ற கட்டுரைத் தொகுப்பில் நாவல் வடிவத்தின் வளர்ச்சியையும், நாவல் வடிவத்தின் நோக்கத்தையும் ஆராய்கிறார்.
நாவலின் உள்ளடக்கத்தைப் பற்றியும் நோக்கத்தையும் பற்றிப் பேசும் நேரத்தில் குண்டேரா அடிக்கடி 1932ல் ‘தி ஸ்லீப்வால்க்கர்ஸ்’ என்ற நாவலை எழுதிய ஆஸ்திரிய நாவலாசிரியரும் கட்டுரையாளருமான ஹெர்மான் ப்ரோக்கை (Hermann Broch) மேற்கோள் காட்டுகிறார்.
ப்ரோக்கின் கருத்துப்படி நாவலின் ஒரே நோக்கம் ‘நாவலால் மட்டுமே எடுத்துச் சொல்லக் கூடிய விஷயங்களை எடுத்துச் சொல்வது’. குண்டெராவும் இக்கருத்தை வலியுறுத்திச் சொல்கிறார்.
குண்டேராவின் அபிப்பிராயப்படி ‘இதுவரை அறியப்படாத வாழ்க்கையின் ஒரு பகுதியைச் சொல்லாத நாவல் அறமில்லாதது. அறியாததைத் தெளிவுபடுத்துவதே நாவல் வடிவத்தின் ஒரே அறம்.’
அது என்ன அறியாத விஷயம்? ஐரோப்பாவில் பாதிரியார்களும் கிறித்துவ மதமும் தமது அதிகாரத்தை இழந்த நேரத்தில் நாவல் பிறந்தது. ஐரோப்பிய கிறித்துவப் பாதிரியார்கள் மனிதர்களின் ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து அக்காலத்தில் இது நல்லது என்றும், இது தீயது என்றும், இன்னின்ன பாவங்கள் செய்தால் மன்னிப்பு உண்டு என்றும், இன்னின்ன பாவங்கள் செய்தால் பாவ மன்னிப்பே இல்லை என்றும் வகைப்படுத்தி இருந்தார்கள்.
விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தேவாலயம் மனிதர்கள் முன்னால் வைத்த அறம், அரசியல், சமூகக் கட்டமைப்பு, மேலோர் கீழோர் போன்ற பார்வைகள் நிராகரிக்கப்பட்டு, கிறிஸ்துவம் ஐரோப்பாவில் தனது வலுவை இழந்த வேளையில், நல்லது தீயது பற்றிய மத அமைப்புக்களின் இந்த கணிப்புகளும் மீள் ஆய்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டன.
ஒரு வகையில் இது சுதந்திரம்போல் தோன்றினாலும், ஐரோப்பியர்களிடையே பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து வந்த நல்லது தீயது பற்றிய அறிவு மங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனிதச் செயல்களைப் பற்றிய நன்மை தீமைகளைப் பற்றிய திடமான தீர்ப்புகள் வலுவிழந்ததும் தோன்றிய வெற்றிடத்தை நிரப்பவே நாவல்கள் தோன்றியதாக குண்டேரா வாதிடுகிறார்.
தேவாலய தீர்ப்புகள் நிராகரிக்கப்பட்ட அதே சமயம் ஒரே அரசனிடம் எல்லா அதிகாரமும் குவிந்திருக்கும் நிலையும் மாறி மெல்ல ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி மலர ஆரம்பித்தது.
ஜெயமோகனும் தனது உரை ஒன்றில் இந்த ஜனநாயகப்படுத்துதலை நவீன இலக்கியத்தின் ஓர் அம்சமாகக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
அரசனிடம் குவிந்திருந்த சர்வாதிகாரம் பிடுங்கப்படுதலையும் மக்களாட்சி மலர்தலையும், அறம் பற்றிய தீர்ப்புகள் வலுவிழந்ததோடு தொடர்புடையதாகவே நான் பார்க்கிறேன். எல்லோருக்கும் பொருந்தக் கூடிய நீதி இல்லாமல் போனபோது, எல்லோருக்கும் மேலே அமர்ந்திருந்த கடவுளும் அரசனும் தங்கள் அதிகாரங்களை இழந்தார்கள்.
அதுவரை தேவாலயமும் அரசனும் செய்து கொண்டிருந்த மனிதர்களின் செயல்களின் நோக்கங்களையும், சாதக பாதகங்களையும், அறத்தையும் அலசும் பணியை நாவல்கள் செய்ய ஆரம்பித்தன.
சர்வாதிகார, மத நிறுவனங்களின் உதவியோடு மனிதர்களையும் அவர்களுடைய செயல்களையும் அதுவரைக்கும் ஆராய்ந்து வந்த பொது மக்கள் இப்போது நாவல்களின் வழியாக அதைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
இத்தகைய விஸ்தாரமான அலசல்களை நாவல்கள் மட்டுமே செய்ய முடியும். சிறுகதையோ, கவிதையோ, நாடகமோ ஒரு முழு வாழ்க்கையின் கனத்தைத் தாங்கும் வலிமையோ அளவோ உள்ளவை அல்ல என்பது குண்டெராவின் வாதம்.
சிந்தித்துப் பார்த்தோம் என்றால் செவ்விலக்கிய வரலாற்றின் உச்சத்தில் இருக்கும் தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய், ஸ்டெந்தால், தாமஸ் மான் ஆகியோரது நாவல்கள் அனைத்தும் இந்த அறம் சார்ந்த அலசலை உள்ளடக்கியவையே.
மிக இக்கட்டான சூழல்களில் மனிதர்களின் செயல்களையும் அவற்றால் அவர்கள் அடையும் வீழ்ச்சியையும் உன்னதத்தையும் எடுத்துச் சொல்லும் நாவல்களே செவ்விலக்கியத் தன்மையை அடைந்துள்ளன.
மனிதர்களின் உள்மன நகர்வுகளைப் பற்றியும் அவர்களின் செயல்களின் விளைவுகளைப் பற்றியும் செய்யப்படும் இந்த அறம் சார்ந்த அலசலே நாவல்களால் மட்டுமே செய்யப்படக்கூடிய ஒரே விஷயம்.
இதைச் செய்யாத நாவல்கள் தோற்றுப்போன நாவல்கள் என்கிறார் குண்டேரா.
