
இலக்கிய விமர்சகர்கள் புஷ்கின் தொடங்கி, கோகோல், துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோர் எழுதிய காலக்கட்டத்தை ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் என்று அழைப்பார்கள்.
1890 தொடங்கி 1940கள் வரையிலான புல்காகோவ், நபாகோவ் போன்றவர்கள் ரஷ்ய எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தை ‘வெள்ளி காலம்’ என்பார்கள்.
செக்காவின் சிறுகதை வாரிசு என்று சிலரால் அழைக்கப்பட்ட இவான் புனின் 1870ல் பிறந்து 1953ல் காலமான இவான் புனின் (Ivan Bunin) ரஷ்ய இலக்கியத்தின் இந்த வெள்ளி ஆண்டுகளில் மட்டுமே இயங்கியவர்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற முதல் ரஷ்ய எழுத்தாளர். நோபல் பரிசு அவருக்கு 1933ல் கிடைத்தது.
1890ல் அவருடைய 20வது வயதில் ‘ஓர்லோவி வெஸ்ட்நிக்’ என்ற வெளிவந்த ‘முதல் காதல்’ என்ற சிறுகதை தொடங்கி 1950ல் நியூ யார்க்கில் வெளிவந்த ‘ஒரு சிறு விபத்து’ சிறுகதை வரை அச்சான அவருடைய சிறுகதைகளின் எண்ணிக்கை 261.
ஆனாலும் தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், கோகோல் போன்றவர்களின் பொற்கால இலக்கியத்தின் கடவுள் சார்ந்த, மனித உள்மன இயக்கங்கள் சார்ந்த, அறம் சார்ந்த படைப்புகளின் அலசல்களோடு ஒப்பிடுகையில் புனின்-இன் கதைகள் வந்த காலம் ஏன் வெள்ளி காலம் மட்டுமே என்பது அவர் கதைகளைப் படிக்கும்போது தெளிவாகப் புரிகிறது.
அவருக்கு முன்னால் வந்த ரஷ்ய எழுத்தாளர்களின் மாபெரும் அறம் சார்ந்த விசாரணைகளைப் போலல்லாமல் புனின்-இன் கதைகள் தமது அலசலைக் குறுக்கிப் பெரும்பாலும் மனித உறவுகளின் வட்டத்துக்குள் அடைத்துவிடக் கூடிய மனித உறவு சிக்கல்களையும், சரீர பரமான காதலுக்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஆன்மீக பரமான காதலுக்கும் இடையே உள்ள முரண்களை ஆராய்கின்றன.
எனினும் செக்காவின் கதைகளின் கதையின் சிக்கல்களை, மற்றும் கதாபாத்திரங்களைக் கட்டமைக்கும் துல்லியம் புனின் பெற்றிருந்தார்.
1895ல் செக்காவுக்குக் கடிதம் எழுதிய கார்க்கி ‘புனின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவர் கதைகள் உங்கள் கதைகள் போலவே இருக்கின்றன. புனின் உங்களைக் காப்பி அடிக்கிறார் என்று நினைக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார்.
1915ல் வெளிவந்த புனினின் “சான் ஃபிரான்ஸிஸ்கோ கனவான்” (The Gentleman from San Francisco) என்ற சிறுகதை பெரும்பாலான விமர்சகர்களால் அவருடைய மிகச் சிறந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது.
வயதான பெரும் பணக்காரனானஅமெரிக்கன் ஒருவன் தன் மனைவியோடு இத்தாலிக்கு உல்லாசக் கப்பல் பயணம் போகிறான். நேப்பஸ்ல் நகரம் அவனுக்குப் பிடித்தமானதாக இல்லை. பின்பு காப்ரி தீவுக்குப் போகும் அவன் எதிர்பாராத விதமாக ஹோட்டலின் வரவேற்பு அறையில் செத்துப் போகிறான்.
அவன் வாழ்ந்திருந்த வரையில் அவன் முன்னால் கூழைக் கும்பிடுபோட்ட ஹோட்டல் ஊழியர்கள் அவன் உடலை அமெரிக்காவுக்கு அனுப்பும் நேரத்தில் எப்படி மிகவும் அலட்சியத்தோடும் அவன் உடலை அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்து கொள்கிறார்கள் என்பது கதையின் சாரம்.
டி.எச். லாரன்ஸ் இந்தக் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
மனித மனத்தின் போக்குகளையும் எல்லோருக்குள்ளும் ஒளிந்துள்ள போலித்தனங்களையும் துர்கனேவ், தஸ்தவ்யஸ்கியின் சாயலில் மிகுந்த துல்லியத்தோடும் அலட்டிக் கொள்ளாமலும் புனின் எழுதுகிறார்.
சிறு சிறு விவரங்கள் உரையாடல்களின் மூலமாகவும் செய்கைகளின் மூலமாகவும் பணக்காரனின் பவிசையும் அவன் உடல் எதிர்கொள்ளும் அவமானத்தையும் புனின் காட்டி ஒப்பிடும்போது கதை பலமாகிறது.
புனின்-இன் ஒரு தொகுப்பைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றால் 1943ல் நியூ யார்க் நகரில் வெளிவந்த அவருடைய Dark Avenues தொகுப்பைப் பரிந்துரைக்கிறேன்.
இன்று காலை படித்துக் கொண்டிருந்தேன். அற்புதமான எழுத்து.