
தமிழ் வாசகர்கள் அதிகம் அறியாத – ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய – ரஷ்ய சிறுகதையாசிரியர்களில் விசியேவோலோத் கார்ஷின் (Vsevolod Garshin) மிக முக்கியமானவர்.
1855ல் பிறந்து 1888ல் தனது 33வது வயதில் படிக்கட்டுகளின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கார்ஷின்-இன் அச்சுக்கு வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை வெறும் இருபதுதான். இவை ஆங்கிலத்தில் தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன.
கார்ஷின் இள வயதில் ரஷ்ய-துருக்கி போரில் ஈடுபட்டார். அவர் எழுதிய கதைகள் பலவற்றில் பழைய போர் வீரர்களைக் கதாபாத்திரங்களாக அமைத்திருக்கிறார்.
இதையும் தாண்டி கார்ஷினின் சிறுகதைகள் டால்ஸ்டாய், தஸ்தவ்யெஸ்கி மற்றும் துர்கனெவ்வின் செவ்வியல் நாவல்களில் அலசப்படும் மனிதச் சிக்கல்களையும், தத்துவார்த்த விசாரணைகளையும் மிகத் துல்லியமான, வடிவ அமைதியுடைய சிறுகதைக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்திருப்பதைக் காணலாம்.
சிறுகதைகளில் கார்ஷின் செக்கோவின் முன்னோடியாகவே கருதப்படுகிறார். அவர் எழுதிய கதைகளில் 1883ல் வெளிவந்த ‘சிவப்பு மலர்’ மிகச் சிறந்த கதையாகக் கருதப்படுகிறது.
கதையின் தொடக்கத்தில் மனநல மருத்துவமனைக்கு நோயாளி ஒருவன் கைகள் இறுகப் பிணைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்படப்படுகிறான்.
ஆரம்பத்தில் மனநல மருத்துவமனையை ஆய்வு செய்ய ரஷ்ய பேரரசனால் நியமிக்கப்பட்ட ஆய்வாளனாய்த் தன்னைக் கருதிக் கொள்ளும் நோயாளி, குளியலறைக்குக் கொண்டு செல்லப்பட்டு குளிக்க வற்புறுத்தப்படுவது தொடங்கிச் சிகிச்சைகள் தொடரத் தொடரச் சுற்றியிருப்பவர்களால் துன்புறுத்தப்படும் ஆன்மீக ரத்த சாட்சியாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான்.
மன உளைச்சலால் தூக்கமின்றி துன்புறும் நோயாளியின் எடை மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. அந்த நேரத்தில் மனநல மருத்துவமனையின் தோட்டத்தில் ஒரு சிவப்பு மலரை நோயாளி காண்கிறான்.
அந்த சிவப்பு மலர் அபினி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாப்பி மலர்போல் இருப்பதாக நினைக்கும் நோயாளி, மலருக்குள் உலகத்தின் தீமை குடியிருப்பதாக எண்ணி மருத்துவமனை காவலாளியதை ஏமாற்றிவிட்டு மலரைப் பறித்துவந்து அதை அழித்து விடுகிறான்.
அடுத்த சில நாள்களில் மீண்டும் ஒரு சிவப்பு மலர் பூக்கவே அதையும் பறித்து வந்து அழிக்கிறான். இதனால் அவனை ஒரு அறைக்குள் அடைத்து வைக்கிறார்கள். மூன்றாவது முறையும் சிவப்பு மலர் பூத்திருப்பதைப் பார்த்துவிடும் நோயாளி, அறையிலிருந்தி இரவில் தப்பித் தோட்டத்துக்கு வருகிறான். அறையின் பூட்டை உடைத்து வரும் முயற்சியில் அவனுக்குப் பலமாகக் காயமேற்படுகிறது. எப்படியோ முயன்று மூன்றாவது மலரையும் அழிக்கிறான். அடுத்த நாள் காலை மிகவும் மெலிந்து போயிருக்கும் நோயாளி செத்துக் கிடப்பதை மருத்துவமனையில் உள்ளவர்கள் காண்கிறார்கள்.
அவன் கையில் கசங்கிய சிவப்பு மலர் இருக்கிறது. அதை அவன் கையிலிருந்து எடுக்க அவர்கள் முயல்கிறார்கள். ஆனால் அவன் கைவிரல்கள் மலரைச் சுற்றி இறுக்கமாக இருப்பதால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. கையில் சிவப்பு மலரோடு நோயாளியைப் புதைக்கிறார்கள்.
மிகுந்த குழப்பத்துக்கும் மிகுந்த மனத்தெளிவுக்கும் இடையே அல்லாடும் மன நோயாளியின் மனநிலையை கார்ஷின் கோகோல் தஸ்தவ்யஸ்கி ஆகியோரது நாவல்களில் உள்ள அதே ஆற்றலோடும் மருத்துவத் துல்லியத்தோடும் இந்தக் கதையில் சித்தரிக்கிறார்.
தஸ்தவ்யஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலில்
ஸோசிமா துறவிக்கும் டிமித்திரிக்கும் இடையில் நடக்கும் தத்துவ விவாதத்தின் சாயலில் கார்ஷினின் இந்தச் சிறுகதையிலும் நோயாளி தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவரிடம் பிரம்மாண்டமான சிந்தனைகளையுடைய மனிதனின் நிலையைப் பற்றியும், அப்படிப்பட்ட மனிதர்கள் எப்படி மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போகிறார்கள் என்பது பற்றியும் சுவையான விவாதம் உள்ளது.
பிரம்மாண்ட சிந்தனைகள் உள்ள மனிதன் என்ற கருத்தியல் நீட்சே “சூப்பர் மேன்” அல்லது மாமனிதன் கருத்தியலை ஒத்திருக்கும் வகையில் இந்தச் சிறுகதையில் கார்ஷின் அமைத்திருக்கிறார்.
சாமான்ய சிந்தனைகளின் மத்தியில் உழலும் சாதாரண முட்டாள் மனிதர்களினிடையே பெரிய, அரிய கருத்துகளையுடைய மாமனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான் என்ற நீட்சேயின் கருத்தை இக்கதையில் வரும் மன நோயாளியின் நிலைமை பிரதிபலிக்கிறது.
ஆனால் கார்ஷின் இந்தக் கதையில் காட்டும் நோயாளி வெறும் நீட்சீய மாமனிதன் மட்டுமல்ல. தீமையின் மொத்த உருவமாக இருக்கும் சிவப்பு மலரை அழிக்கத் துன்பங்களை அனுபவித்துக் கடைசியில் மரிக்கும் நோயாளி கிறிஸ்துவின் சாயலாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.
ஆனால் தஸ்தவ்யெஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரது நாவல்களில் வரும் மிஷ்கின் போன்ற கதாபாத்திரங்களைப் போலவே தீமையை எதிர்த்துப் போராடி தோற்றுப் போகும் கார்ஷின் கதையின் நோயாளியும் செத்துப் போனவன் செத்துப் போனவன்தான்.
கிறிஸ்துவைப்போல் அவன் என்றைக்கும் மூன்றாம் நாள் உயிர்த்தெழப் போவதில்லை.
நான் மிகவும் பரிந்துரைக்கும் ரஷ்ய சிறுகதை – விசியேவோலோத் கார்ஷின்-இன் ‘சிவப்பு மலர்’.