
ரஷ்ய செவ்விலக்கிய நாவல்களின் மாஸ்டர்களாகக் கருதப்படும் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தவ்யஸ்கியின் சிறுகதைகளில் பலவும் அவர்களின் நாவல்களின் முக்கியக் கருத்துகளை விளக்குகின்றன.
தம்வரையில் சிறந்த சிறுகதைகளாக இருந்தாலும், அவர்களது நாவல்களில் அலசப்படும் தத்துவார்த்த விசாரணைகளின் முன்வரைவுகளாகவே எழுதப்பட்டிருக்கின்றன.
டால்ஸ்டாய் எழுதிய இந்த வகையான சிறுகதைகளில் 1885ல் வெளிவந்த “மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்” என்ற கதை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவுக்கே உரிய கடுமையான பனிக்காலம். சைமன் என்னும் பரம ஏழையான காலணிகள் தைத்து விற்கும் தொழிலாளி எப்படியாவது செம்மறியாட்டுத் தோலை வாங்க விரும்புகிறான். தோலைப் பயன்படுத்தித் தனக்கும் தன் மனைவிக்குமாக பனிக்காலம் முழுக்க உழைக்கக் கூடிய இரண்டு பனிக்கோட்டுகளைத் தைக்க நினைக்கிறான்.
ஆட்டுத்தோல்களை வாங்க அவனுக்குப் பணம் தேவைப்படுகிறது. தன்னிடம் காலணிகளை வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கப் போகிறான். அவனுக்குச் சேர வேண்டிய ஐந்து ரூபிள்கள் இருபது கோபெக்குகளில் இருபது கோபெக்குகளே அவனுக்குக் கிடைக்கிறது. இதனால் மனமுடைந்தவனாக கிடைத்த இருபது கோபெக்குகளுக்கு வோட்கா வாங்கிக் குடித்துவிட்டுக் கோட்டு விற்வனைச் சபித்தபடியே வீட்டிற்குத் தள்ளாடியபடி நடக்கிறான்.
ஒரு சிறிய தேவாலயத்தில் முன்னால் குளிரில் நிர்வாணமாக நிற்கும் மனிதன் ஒருவனைக் காண்கிறான். அவன் வெறும் குடிகாரப் பயல் என்று நினைத்து அவனை முதலில் கடந்து போகிறான். பிறகு குளிரில் நிர்வாணமாக இருக்கும் ஒருவனை இரக்கமின்றிக் கடந்து போகிறோமே என்று மனசாட்சி அவனை உறுத்தத் திரும்பி வந்து அவனுக்குத் தனது துணிக் கோட்டுகளில் ஒன்றையும், கையில் வைத்திருக்கும் காலணிகளையும் கொடுக்கிறான். சைமன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுக்கும் மனிதன் தன் பெயர் மைக்கேல் என்றும் ஆண்டவர் தன்னைத் தண்டித்திருப்பதாகவும் மட்டும் சொல்கிறான்.
இருவரும் சைமனின் வீட்டுக்குப் போகிறார்கள்.
தயாரித்துவைத்த ரொட்டி அடுத்த நாள் காலைவரை வருமா என்று வீட்டில் காத்திருக்கும் சைமனின் மனைவி இருவரும் குடித்திருப்பதாக நினைத்து இருவரையும் ஏசுகிறாள். ஆனால் புதிதாக வந்த மனிதனை அமர வைத்து அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். சைமனின் பழைய உடைகளையும் அவனுக்குத் தருகிறாள். இதைப் பார்க்கும் மைக்கேல் முதல்முறையாகப் புன்னகைக்கிறான். அவன் சைமனுக்குக் காலணிகள் தைக்க உதவியாக இருக்கலாம் என்று முடிவாகிறது.
ஒரு நாள் சைமனின் வீட்டுக்கு வரும் பணக்காரன் ஒருவன் தனக்குக் கனமான காலணிகளைத் தைத்துத் தர வேண்டுமென்கிறான். அந்தக் காலணிகள் ஒரு வருடத்துக்குத் தேயாமல் உழைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறான். அப்படி அவை உழைக்கவில்லை என்றால் சைமனைப் பற்றிப் போலீஸாரிடம் புகார் சொல்வான் என்றும் எச்சரிக்கிறான். பணக்காரச் சீமான் பேசிக் கொண்டிருக்கும்போது அவனுடைய தோளுக்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கும் மைக்கேல் இரண்டாவது முறையாகப் புன்னகைக்கிறான்.
பணக்காரன் கிளம்பிய பின்னால் மைக்கேல் அவன் தந்த தோலைப் பயன்படுத்திக் கனமான காலணிகள் தைக்காமல் மெல்லிய செருப்புகளைத் தைக்கிறான். இதற்காகச் சைமன் மைக்கேலைத் திட்டிக் கொண்டிருக்கும்போதே பணக்காரன் செத்துவிட்டதாகவும் அவன் சவ அடக்கத்துக்குத் தோதாகச் செருப்புத் தைத்துத் தர முடியுமா என்று செய்தி வருகிறது.
வேறொரு முறை ஒரு பெண் தனது இரண்டு மகள்களுக்காகக் காலணிகள் தைக்கச் சைமனிடம் வருகிறாள். மகள்களில் ஒருத்திக்கு ஒரு பாதம் பிசகி இருக்கிறது. சைமனின் கேள்விக்கு அந்தப் பெண் பாதம் பிசகி இருக்கும் பெண் குழந்தை தன் மகள் அல்ல என்றும், அந்தக் குழந்தையின் தாய் சாகக் கிடந்த நேரத்தில் மகளின் கால்மீது புரண்டதால் அவள் பாதம் பிசகிவிட்டதென்றும் சொல்கிறாள். அனாதையான குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவிட மனமில்லாமல் அவளை எடுத்து வளர்ப்பதாகச் சொல்கிறாள்.
இதைக் கேட்டு மைக்கேல் மூன்றாவது முறையாகச் சிரிக்கிறான்.
அந்தப் பெண் கிளம்பிப் போன பிறகு மைக்கேல் சைமனிடம் வந்து ஆண்டவன் தன்னை மன்னித்துவிட்டதாகச் சொல்கிறான். அப்படிச் சொல்லும்போது அவன் முகம் ஜோதிமிக்கதாக மாறுகிறது. இது ஏன் என்று சைமன் கேட்க மைக்கேல் தான் ஒரு தூதுவன் என்றும் ஆண்டவன் ஒரு பெண்ணின் உயிரைப் பறிக்க அவனை அனுப்பியபோது அவள்மீது பரிதாபப்பட்டு அவளை வாழவிட்டதால் ஆண்டவரின் சாபத்துக்கு ஆளானதாகவும் சொல்கிறான்.
“மனிதர்களுக்குள்ளே என்ன குடியிருக்கிறது?”, ” எது மனிதனுக்குத் தரப்படவில்லை?”, “எதனால் மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்ற மூன்று கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்து கொள்ளும்வரை அவனுக்குச் சாப விமோசனம் இல்லை என்று ஆண்டவர் சொன்னதாகச் சொல்கிறான்.
சைமனின் மனைவி அவனுக்கு ரொட்டியைத் தந்தபோது “மனிதர்களுக்குள் அன்பே வாழ்வதாகவும்”, பணக்காரன் திடீரென்று செத்தபோது ” மனிதர்களுக்குத் தங்கள் உண்மையான தேவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தரப்படவில்லை” என்றும், அனாதைப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்த பெண்ணைக் கண்ட போது “தங்களுக்காக வாழாமல் மற்றவர்களின்மீது அன்பு காட்டுவதால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள்” என்று தான் கண்டு கொண்டதாகவும் மைக்கேல் சொல்கிறான். தான் உயிரோடு விட்டுவிட்டுச் சென்ற பெண்ணின் உயிரைப் பறிக்க மீண்டும் போனபோது அவள் புரண்டு தன் மகளின் காலை நசுக்கினாள் என்றும் அந்தப் பெண் குழந்தைதான் காலணி தைக்க வந்தது என்பதையும் மைக்கேல் சொல்கிறான்.
அப்படிச் சொல்லி முடிக்கும்போது மைக்கேலுக்குச் சிறகுகள் வளர்கின்றன. “அன்பே ஆண்டவர், அன்பில் வாழ்பவர்கள் ஆண்டவருக்குள் வாழ்கிறார்கள்” என்று சொன்னபடியே மைக்கேல் வானுலகத்துக்குப் போகிறான்.
கிறித்துவ வேதத்திலிருக்கும் கதைகளை நினைவுகூறும் வகையில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதை. புதிய ஏற்பாட்டில் அடிபட்டுக் கிடக்கும் மனிதனைக் கண்டும் காணாததுபோல் போகும் மத அறிஞர்களைவிட அவனுக்கு உதவி செய்யும் வேற்று நாட்டவனே கடவுளுக்குப் பிரியமானவன் என்று இயேசு சொன்ன புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு.
இங்கு காலணி தைப்பவனின் பெயரான சைமன் இயேசுவின் பிரதான சீடனான சைமன் பேதுருவின் பெயரின் சாயல். மைக்கேல் என்பது வேதாகமத்தில் கையில் நீதித்தராசோடு தீர்ப்பு வழங்கும் வானவனின் பெயர்.
நல்லொழுக்கம் கொண்டவர்களிடம்தான் இருப்பார் என்று எல்லோரும் எதிர்ப்பார்க்கும் ஆண்டவர் உண்மையில் வோட்காவிற்கு அடிமையான ஆனால் அன்பு நிறைந்தவனான ஏழை காலணி தைக்கும் தொழிலாளியிடமும் படிப்பில்லாத அவன் மனைவியிடமும்தான் இருக்கிறார் என்பது இந்தச் சிறுகதையின் சாராம்சம். டால்ஸ்டாய் பின்னாளில் எழுதிய பல கதைகளின் மையக் கருத்து இது.
கர்த்தரின் ராஜ்ஜியம் மனிதர்களுக்குள்ளே அன்பின் வடிவத்தில்தான் குடியிருக்கிறது என்ற டால்ஸ்டாயின் தத்துவ முடிவின் பிரதிபலிப்பு.
அப்படி ஆண்டவர் அன்பானவர் என்றால் விதி முடிந்துவிட்ட பெண்ணின் உயிரை பறிக்காமல் விட்ட மைக்கேல் என்ற தூதுவனை அவர் ஏன் தண்டித்தார்? அவள்மீது கொண்ட பரிவிரக்கத்தினால்தானே அவன் அந்தப் பெண்ணை வாழ விட்டான்?
அது அப்படியல்ல. மரணமும்கூட ஆண்டவரின் அன்பின் வெளிப்பாடே என்று மைக்கேல் உணர மறந்ததே அவனை ஆண்டவர் தண்டித்ததற்கான காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. மரணத்தின் கோரத்தை உணர்ந்த நேரத்த்தில் மைக்கேல் அன்பான ஆண்டவர் எப்போதும் தீமை செய்ய மாட்டார் என்ற விசுவாசத்தை மைக்கேல் மறந்ததால் அவன் சபிக்கப்பட்டான்.
உலகில் மரணமும் வன்முறையும் கறுமையும் மண்டிக் கிடக்கும் நேரத்தில்கூட ஆண்டவரின் அன்பே ஜெயிக்கிறது என்பது டால்ஸ்டாய் புத்துயிர்ப்பு போன்ற தனது பின்னாளைய நாவல்களில் சொன்ன செய்தி.
அன்பும் விசுவாசமும்தான் ஆண்டவரின் ராஜ்ஜியத்தை மனிதர்களிடையே கொண்டு வருகின்றன என்பது டால்ஸ்டாயின் திடமான நம்பிக்கை.
அன்பாலும் விசுவாசத்தாலுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். அதைச் சொல்கிறது இந்தச் சிறுகதை.