
Hopscotch மற்றும் Blow Up and Other Stories ஆகிய சிறந்த நாவலாசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறியப்படும் ஹூலியோ கோர்த்தஸார் 1984ல் நிகழ்ந்த அவருடைய மரணம்வரையில் கவிதையில் மிகப் பெரிய ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார்.
அவருடைய மொத்த படைப்புகளின் தொகுப்பில் கவிதைகள் மட்டும் கிட்டத்தட்ட 1,400 பக்கங்களுக்கு வருகின்றன. 1971ல் வெளிவந்த அவருடைய Pameos y Meopas என்ற கவிதைத் தொகுப்பின் பின்னட்டையில் (கவிதைகளைக் குறிக்கும் poemas என்ற வார்த்தையை இரண்டு விதமாகத் திருப்பிப்போட்டு உருவாக்கிய தலைப்பு) ஜுவான் கோர்த்தஸார் “எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு கவிஞன்” என்று வர்ணிக்கப்படுகிறார்.
Pameos y Meopas தவிர 4 கவிதை தொகுப்புகள்/முக்கியமான நீண்ட கவிதைகளை 1914ல் பிறந்த கோர்த்தஸார் எழுதியுள்ளார்.
1938ல் வெளிவந்த Presencia (“இருப்பு”) என்ற தலைப்பிட்ட தொகுப்பு.
1949ல் Los Reyes (“அரசர்கள்”) என்ற தலைப்பில் பழைய கிரேக்க தொன்மங்களிலில் இருந்து மினோட்டோர் என்ற அரை காளை மாடும் அரை மனிதனுமான உயிரியை அடிப்படையாகக் கொண்ட கவிதை.
1971ல் வெளிவந்த Pameos y Meopasக்குப் பிறகு இந்தியாவின் ஜெய்ப்பூரில் இருக்கும் ராஜா ஜெய் சிங் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாகக் கொண்ட Prosa de Observatorio (“ஆய்வுக்கூட உரைநடை”) என்ற உரைநடைக் கவிதை.
பின்பு அவர் இறந்த வருடமான 1984ல் வெளிவந்த பெரிய தொகுப்பான Salvo el Crepusculo (“அந்திநேரத்தைக் காப்பாற்றுங்கள்”).
தன் வாழ்நாளின் கடைசிவரைக்கும் கோர்த்தாஸாருக்குக் கவிதையின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்த போதிலும் கவிதை எழுதும் தனது ஆற்றலைப் பற்றிக் கோர்த்தஸார் பலமான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.
1938ல் வெளிவந்த தனது முதல் தொகுப்பைத் தனது சொந்த பெயரில் வெளியிட மறுத்து ஹூலியோ டென்னிஸ் என்ற புனைப்பெயரில் வெளியிட்டார்.
கடைசிவரைக்கும் தனது கவிதைகளை வெளியிடுவது கோர்த்தஸாருக்குப் பெருன் போராட்டமாகவே இருந்தது. 1971ல் வெளிவந்த தனது தொகுப்பின் முன்னுரையில் “என் கவிதைகளை அச்சில் கொண்டுவர தேவை இருந்ததாக நான் எப்போதும் நினைத்ததே இல்லை” என்று கோர்த்தஸார் குறிப்பிடுகிறார்.
தன் கவிதைகளைப் பற்றி வந்த எதிர்மறையான விமர்சனங்கள் கோர்த்தஸாரை மிகவும் பாதித்தன. பெரு நாட்டைச் சேர்ந்த விமர்சகரான ஹோசே மிகுவெல் ஓவியேடோ தனது கவிதைகள் “நெஞ்சைத் தொடும் வகையில் மோசமாக இருப்பதாக” சொன்னதைக் கோர்த்தஸார் குறிப்பிட்டுள்ளார்.
கோர்த்தஸாரின் கவிதைகள் கடைசிவரையில் பெரும்பாலான தென்/லத்தீன் அமெரிக்க கவிதைகளிலிருந்து மாறுபட்டவையாகவே இருந்தன. போர்ஹெஸ் போன்றவர்கள் ரூபன் தாரியோவின் தென் அமெரிக்க நவீனத்துவ (modernismo) கவிதையின் யாப்பு வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கைவிட்டுவிட்ட பிறகுகூட கோர்த்தஸார் modernismo சாயல் உள்ள கவிதைகளை எழுதி வந்தார்.
1800களின் இறுதியில் தோன்றி 1930களின் வாக்கில் வழக்கொழிந்து போன modernismo இயக்கம் கவிதைகள் படைக்கப்படும் கலாச்சாரச் சூழலையும் காலத்தையும் அவை பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
லத்தீன் அமெரிக்க அடையாளத்தை முன்னிறுத்துவது, தொன்மங்களிலிருந்து பெற்றுக் கொண்ட படிமங்களைக் கவிதைகளில் பயன்படுத்துவது, ஐம்புலன்களால் உணரக்கூடிய நிறங்களையும், மணங்களையும், சுவைகளையும் கவிதைக்குள் கொண்டு வருவது போன்ற அடிப்படை கோட்பாடுகளை தென் அமெரிக்க நவீனத்துவம் பரிந்துரைத்தது.
மேலும் கவிதை வெறும் உணர்ச்சிப் பிரவாகம் இல்லை என்பதையும், மாறாக மிகுந்த கவனத்துடன் செதுக்கப்பட வேண்டிய கலை வடிவம் என்பதையும் தென் அமெரிக்க நவீனத்துவம் வலியறுத்தியது.
கோர்த்தஸாரின் கவிதைகளில் பல அடி இயைபுகள் (rhyme) கொண்ட பழைய கிரேக்க, ரோமானிய யாப்பு வகைகளிலும் அவற்றின் சாயலிலும் எழுதப்பட்டவை. தென் அமெரிக்க நவீனத்துவத்தின் இலக்கியக் கோட்பாடுகளைப் பிரதிபலிப்பவை.
உதாரணத்துக்கு 1984ம் ஆண்டு வெளிவந்த அவருடைய தொகுப்பில் வரும் Sonnet in a Pensive Mood என்ற கவிதை கண்டிப்பான அசை கட்டுப்பாட்டையுடைய பழைய சொன்னெட் யாப்பு வகையில் அமைந்திருக்கிறது.
“அவள் கறுத்த தலைமயிர் அலைபாயும் காற்றில் அசைகிறது
அவள் பழங்களால் செய்யப்பட்டிருக்கிறாள்
முழுக்க விஷத்தாலும் செய்யப்பட்டிருக்கிறாள்
ஆண்களுக்கு உள்ளதைப்போல் பருத்திருக்கும் அவள் தொடைகளின் அசைவு
மீன்களை அவை ஒன்றோடொன்று கூடி கருத்தரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறது”
இந்தக் கவிதையில் பெண்ணைக் குறித்த அங்க வருணனையிலும், பழங்களுக்கும் விஷத்துக்கும் அவளை ஒப்பிடும் உத்தியிலும் புலன்களால் உணரக்கூடிய நிறம், சுவை, தொடுதல், முகர்தல் ஆகியவற்றைத் தூண்டக்கூடிய படிமங்களைக் கோர்த்தஸார் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
மேலும் ஆண்களின் சாயலையுடைய பெண் தென் அமெரிக்கத் தொன்மக் கதைகளில் வரும் அமெஸானியர்கள் என்ற பலமுள்ள பெண்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
ஆனால் இந்த படிமத்தில் பெண்ணின் வெறும் பலம் மட்டும் கொண்டாடப்படவில்லை. அந்தப் பலத்தோடு கலந்திருக்கும் அவளுடைய பாலினக் கவர்ச்சியும் கொண்டாடப்படுகிறது. கோர்த்தாஸாரின் கவிதைகளில் இழையோடும் பாலினக் கவர்ச்சி தொடர்பான மெல்லிய படிமங்களுக்கும், ஆண் சாயல் கொண்ட பெண்களின் சித்திரங்களுக்கும் இவ்வரி மிக அழகான உதாரணமாக விளங்குகிறது.
புலன்களைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும் படிமங்கள் அதே வேளையில் வாசகர்களின் முன்னே முற்றிலும் வேறுபட்ட கனவு வெளிகளை முன்னிறுத்தக் கூடியவை.
ஜெய்ப்பூர் ஆய்வுக்கூடத்தைப் பற்றிய கவிதை காலத்தின் ஓட்டத்திற்கு அப்பாலிருக்கும் ஒரு நேரத்தில் நடப்பதாகத் தொடங்குகிறது
“இந்த மணி நேரம் மற்ற எல்லா மணி நேரங்களுக்கும் தாண்டியும் வரக்கூடிய கால வலையில் ஓர் ஓட்டை”.
ஆய்வுக்கூடம் புத்தியின்பாற்பட்ட ஆராய்ச்சிக்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட்ட இடம். ஆனால் கோர்த்தஸார் கவிதை புத்தியின் பிடியைவிட்டும் நழுவிப் போகும் விஷயம் என்கிறார்:
“ஆ, மற்த அழைப்புகளுக்குப் பழக்கமாகிவிட்ட புத்தியின் கவர்ச்சியில் மயங்காமல் வார்த்தைகளுக்குள் நுழைதல், நட்சத்திரங்கள் அல்லது விலாங்கு மீன்களின் வாந்தியில் இருந்து…
விலாங்கு மீன் என்னும் நட்சத்திரம் என்னும் விலாங்கு மீன் என்னும் நடசத்திரம் என்னும் விலாங்கு மீன்”.
மற்றொரு கவிதையில் கோர்த்தஸார் நிறைவேறாத காதலை இப்படிப் பாடுகிறார்.
“பார்த்திருக்கிறாயா?
உண்மையில் பார்த்திருக்கிறாயா?
பனி, தொடக்கம், மென்காற்றின் மெத்தென்ற அடிகள்.
அறிந்திருக்கிறாயா?
உன் தோலின் ஒவ்வொரு மயிர்காலிலும்,
உன் கண்கள், கைகள், மர்மஸ்தானம்,
உன் மென்மையான இதயம்
எவ்வாறு தூக்கியெறியப்பட வேண்டும் என்று
எவ்வாறு கரைக்கப்பட வேண்டும் என்று
எவ்வாறு மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று”
புத்தியை மீறி அல்லது மறுதலித்துவிட்டுப் புலன்களோடு நேரடியாகப் பேசும் கவிதைகள் கோர்த்தஸாரின் கவிதைகள்.
அந்த வகையில் கோர்த்தஸார் பழைய தென் அமெரிக்க ரோமாண்டிஸிச மரபின் கடைசி பிரதிநிதியாக தனித்து நிற்கிறார்.