
ஜான்-பால் சார்த்தரின் இருத்தியலியல் (existentialism) தத்துவத்தின் அடிப்படை குறிக்கோள் தனிமனிதர்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கள் வாழ்க்கையைக் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை மீட்டெடுப்பது.
தனது போக்கை யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்ந்தெடுக்க முடிவதுதான் தனிமனித சுதந்திரத்தில் ஆணிவேராக இருத்தலியல் கருதுகிறது.
ஆனால் தங்களது வாழ்க்கையின் போக்கைத் தேர்ந்தெடுக்கக் கூடிய சுதந்திரம் மிகப் பெரும்பாலான சூழ்நிலைகளில் தனி மனிதர்களிடமிருந்து சமுதாயத்தால் பறிக்கப்பட்டிருக்கிறது.
சமுதாயக் கட்டுப்பாடுகளும் எதிர்ப்பார்ப்புகளும் மனிதர்கள் இன்னின்ன சூழ்நிலைகளில் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
காம்யூவின் ‘அந்நியன்’ குறுநாவல் வட ஆப்ரிக்காவில் இருக்கும் பிரெஞ்சு காலனி ஒன்றில் வாழும் மெர்ஸோல்ட் என்ற பிரஞ்சுக்காரனின் கதையைச் சொல்கிறது. கதையின் போக்கில் மெர்ஸோல்ட் வயதான தனது தாயின் சாவிற்குப் போகிறான். அம்மாவின் சாவுக் காரியங்கள் நடந்து முடிந்த நாளுக்கு அடுத்த நாள் தன் பழைய தோழி ஒருத்தியைச் சந்தித்து அவளுடன் காமெடி திரைப்படம் ஒன்றைப் பார்க்கப் போகிறான். பின்னர் அவளுடன் உடலுறவு கொள்கிறான். அவன் நண்பனுக்கு உண்மையாக இல்லாத அவனுடைய அரபு காதலியை நண்பன் பழி தீர்த்துக் கொள்ள உதவுகிறான். இறுதியில் அவனைத் தாக்க வரும் அரபுப் பெண்ணின் சகோதரனைச் சுட்டுக் கொல்கிறான். அதனால் கைது செய்யப்படுகிறான். அவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கிறது.
நாவலின் ஆரம்பத்தில் மெர்ஸோல்ட் தனது அம்மாவின் சாவுக்காகத் துக்கம் கொண்டாட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். அம்மாவின் சாவுக்காக அவன் துக்கப்பட மறுத்தது மட்டுமன்றி அம்மாவின் பிணத்தின் முன்னால் காபி குடித்ததும் அருவருக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
சமுதாய எதிர்ப்பார்ப்புகளை மீறிச் செயல்படத் துணிவோரை அருவருக்கத் தக்கவர்களாகப் பார்ப்பது மட்டுமில்லாமல் சமுதாயக் கட்டுபாடுகளின்மீதும் ஒழுக்கங்களின்மீதும் அவர்கள் காட்டும் அலட்சியமே அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப் போதுமான சாட்சியமாகச் சமூகத்திலுள்ளவர்கள் கருதும் நுண் அரசியலை காம்யூ தனது நாவலில் சித்தரிக்கிறார்.
அரபியனைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது அவன் செய்ததாகச் சொல்லப்படும் கொலைக்கு மெர்ஸோல்ட் எந்தவிதமான வருத்தத்தையும் தெரிவிக்காததையும் அவனுடைய அம்மாவின் சாவிற்காக அவன் அழாததையும் மெர்ஸோல்ட் நிச்சயம் கொலை செய்திருப்பான் என்பதற்கான ஆதாரமாய் அரசாங்க வழக்கறிஞர் முன் வைக்கிறார்.
சமுதாய எதிர்ப்பார்ப்புகளின்படி மெர்ஸோல்ட் கண்ணீர்விடாததே அவன் அரக்கன் என்றும் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்க நீதிமன்றத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. ஏனெனில் காம்யூவின் கணிப்புப்படி நீதி என்பதே சமூக விருப்பு வெறுப்புகளின் பிரதிபலிப்பு மட்டுமே.
தான் செய்த குற்றத்திற்காக பொய்யாகவாவது கண்ணீர் விட்டிருந்தால் மெர்ஸோட்டுக்குக் கருணை காட்டப்பட்டிருக்கலாம்.
மனிதன் உண்மையாக இருப்பதைவிட சமுதாயத்தைத் திருப்திபடுத்தும் வகையில் பொய்யாய் இருப்பது நல்லது என்பது சித்தாந்தம் மட்டுமல்ல, பிழைக்கும் வழியும்கூட.
மாறாக மெர்ஸோல்ட்டின் கதாபாத்திரத்துக்கு எதிர் பிம்பமாகக் காம்யூ சித்தரித்துக் காட்டும் சாலாமானோ என்ற கிழவன் தனது தாயை முதியோர் இல்லத்தில் விட்டதைப் பற்றி மற்றவர்கள் அவனைக் குறைகூறியதைச் சொல்லி வருத்தப்படுகிறான்.
இங்கு சமுதாயக் கட்டுப்பாட்டின் வேறொரு நுணுக்கமும் காம்யூவால் காட்டப்படுகிறது. சமுதாயம் தன்னுடைய கட்டுப்பாடுகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் தனிமனிதர்கள்மீது திணிக்கிறது என்பது மட்டுமல்ல, சுதந்திரமாக இருப்பதே அபாயகரமானது என்று தனிமனிதர்களை அது நம்பவும் செய்து விடுகிறது.
மனிதர்கள் சுதந்திரர்களாக இருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் சுதந்திரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக அவர்கள் அல்லல் படுபதாகவும் சார்த்தர் சொல்கிறார். இருத்தியல் தனிமனிதச் சுதந்திரத்தைச் சுமந்து கொள்ள முடியாமல் மனிதர்கள் படும் இந்த அல்லலை anxiety என்று அழைக்கிறது.
சமுதாய வற்புறுத்தலிலிருந்து மனிதன் எப்படி தனது தனி மனிதச் சுதந்திரத்தை மீட்டுக் கொள்வது?
சமுதாயத்தின் கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலைபடாமல் மெர்ஸோல்ட்டைப்போல் அந்த கணத்தில் என்ன தோன்றுகிறதோ அப்படி வாழ்வதுதான் ஒரே வழி என்று இருத்தியலியல் சொல்கிறது.
இருத்தலியல் கோட்பாட்டின்படி இதுதான் தனிமனித சுதந்திரத்துக்கு முதல்படி.
ஒரு முறை சார்த்தரிடன் இருத்தியலியல் கோட்பாட்டின் எதிரிகள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். “உங்களை ஒரு வரிசையில் நிற்க வைத்து நாஜி ஜெர்மன் அதிகாரி ஒருவன் துப்பாக்கியால் ஒவ்வொருவராகச் சுட்டுக் கொண்டே வருகிறான். எங்கும் சுதந்திரம், எதிலும் சுதந்திரம் என்று சொல்கிறீர்களே. இந்தச் சூழ்நிலையில் உங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?” ஒரு விநாடிகூட யோசிக்காமல் சார்த்தர் பதில் சொன்னார். “சாவதற்கு அஞ்சாமல், மற்றவன் என்னைக் கொல்கிறான் என்ற எண்ணத்துக்கு இடம் தராமல் நான் செத்துப் போக முடிவு செய்வேன்.”
இருத்தியல் காட்டும் தனிமனித சுதந்திரத்தில் தன்னைத்தான் அழித்துக் கொள்ளும்.சுதந்திரமே பிரதானமாகப் பேசப்படுகிறது. இருத்தியல் காட்டும் தனிமனித சுதந்திரத்தில் தன்னைத்தான் அழித்துக் கொள்ளும் சுதந்திரமே பிரதானமாகப் பேசப்படுகிறது.
தன்னைத்தான் அழித்துக் கொள்ளுதலே சமுதாய எதிர்ப்பார்ப்புகளுக்கெல்லாம் எதிராக தனிமனிதன் செய்யக்கூடிய மிகத் தீர்மானமான செயல்.
அந்நியன் நாவல் முழுவதும் மெர்ஸோல்ட் தனது செயல்கள் அவனுக்குச் சமுதாயத்தின் கண்டனத்தையும், அதிக பட்ச தண்டனையையும் பெற்றுத் தரலாம் என்ற புரிதலோடே அவற்றைச் செய்கிறான்.
இத்தகைய கடுமையான சுதந்திரத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால் அடிமைத்தனத்தின்மீதும் சாரமே இல்லாத அன்றாட வாழ்க்கைமீதும் ஒரு மனிதனுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட வேண்டும் என்று இருத்தலியல் சொல்கிறது.
அந்நியன் நாவல் முழுவதும் இந்த வெறுப்பே மிகுந்திருக்கிறது. மெர்ஸோல்ட் தனது அம்மாவின் சாவுக் காரியங்களை வெறுக்கிறான். உடலுறவு கொள்ளும் பெண்ணை வெறுக்கிறான். அவனுடைய நண்பன் தனக்கு உண்மையாக இல்லாத காதலியோடு கடைசியாக ஒரு முறை உடலறவு கொண்டுவிட்டு அவள் முகத்தில் காறித் துப்ப நினைப்பதில் வெறுப்பு மிகுந்திருக்கிறது. மற்றவர்களின் அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படும் சாலமானோகூட தனது தொலைந்து போன நாயை வெறுக்கிறான்.
இதற்கெல்லாம் உச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மெர்ஸோல்ட் தான் சாகடிக்கப்படும்போது பொதுமக்கள் கூட்டமாகத் திரண்டு அவனை வெறுப்போடு சபிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இப்படி நடந்தால் அவன் வாழ்க்கையின் சூழ்ந்துள்ள தனிமை கொஞ்ச நேரமாவது மறைந்து அவன் வாழ்க்கை ஓரளவேனும் அர்த்தமுள்ளதாகும் என்று நினைக்கிறான்.
விசித்திரமான விருப்பமாக இது தோன்றினாலும் மனிதர்கள் ஓரளவாவது தங்கள் போலி இரக்கத்தைவிட்டு உண்மையாக, சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரர்களாக இருக்க மாட்டார்களா என்ற மெர்ஸோல்ட் மற்றும் காம்யூவின் ஏக்கமாகவே இந்த ஆசை தோன்றுகிறது.
இத்தகைய நாவல் தமிழிலோ வேறெந்த ஆசிய மொழியிலோ சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆசியர்களிடையே சமுதாயப் பிணைப்பு அதிகம்.
ஆனால் ஐரோப்பிய சிந்தனையோட்டத்தில் மிகப் பலமான ஒரு கோட்பாடாய் உள்ள தனிமனித சுதந்திரம் என்ற பிடிப்புக்கு இந்த நாவல் சிறந்த சான்று.
மனித வாழ்வைப் பற்றிய இருத்திலியலின் அலசல் தீர்க்கமானவை என்றாலும் அது தரும் தீர்வுகளை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றுகிறது.