
கோவால்யோவ் என்ற சாதாரண அதிகாரியின் முகத்திலிருந்து தானே கழன்று கொண்ட மூக்கு அவனைவிட உயர்ந்த கவுன்சிலர் பதவியை அடைவதுதான் நிக்கோலே கோகோலின் புகழ்பெற்ற ‘மூக்கு’ சிறுகதையின் சாராம்சம்.
1836ல் அலெக்ஸாண்டர் புஷ்கின் நடத்திய ‘தி கண்டம்பரரி’ இதழில் வெளிவந்த இந்தச் சிறுகதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
முதல் பகுதியில் காலை உணவுக்காகத் தனது மனைவி செய்திருந்த ரொட்டியைப் பிட்டுத் தின்னும் யாகோவ்லெவிச் என்ற நாவிதர் அதற்குள் ஒரு மூக்கு இருப்பதைக் காண்கிறான். அதன் வடிவத்தை வைத்து தன்னிடம் அடிக்கடி முடி திருத்திக் கொள்வதற்கும் சவரம் செய்து கொள்வதற்கும் வரும் கோவால்யோவ்-இன் மூக்குதான் அது என்று அவன் அடையாளம் கண்டு கொள்கிறான். மூக்கை எப்படியாவது அப்புறப்படுத்தி விடும்படி அவனுடைய மனைவி வற்புறுத்துகிறாள். மூக்கைக் கைக்கட்டையில் வைத்து நியேவா ஆற்றுக்குள் வீசப் போகும் யாகோல்லெவிச்சைப் போலீஸ்காரன் ஒருவன் பார்த்துவிடுகிறான். யாகோல்லேவிச் லஞ்சம் தருவதாகச் சொல்லியும்கூட போலீஸ்காரன் அவனைவிட மறுக்கிறான்.
கதையின் இரண்டாவது பகுதியில் கோவால்யோவ் காலையில் எழும்போது தன் முகத்திலிருந்து மூக்கு காணாமல் போயிருப்பதைக் காண்கிறான். இதைப்பற்றி போலீஸாரிடம் புகார் கொடுக்கப் போகும் வழியில் தனது மூக்கு உயரதிகாரியின் உடையில் திரிவதைக் காண்கிறான். மூக்கைப் பின்தொடர்ந்து துரத்திக் கொண்டு ஓடும்போது அது காஸான் தலைமைத் தேவாலயத்துக்குள் போகிறது.
பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் மூக்கை கோவால்யோவ் கேள்வி கேட்கிறான். அது அவன் முகத்தோடு வந்து ஒட்டிக் கொள்ள மறுக்கிறது. கோவால்யோவ்வின் கவனத்தைத் தேவாலயத்திற்குள் வரும் அழகிய பெண் திசை திருப்பிவிடுகிறாள். அந்த நேரத்தில் மூக்கு தப்பித்துப் போகிறது.
மூக்கைத் தேடிப் போகும் கோவால்யோவ் தனது தொலைந்த மூக்கைப் பற்றிப் போலீஸாரிடமும் நீதிமன்றத்திடமும் புகார் தர முயல்கிறான். அவர்கள் எல்லோரும் அவன் புகாரை ஏற்க மறுக்கிறார்கள்.
கோவால்யோவ் வீட்டிற்குப் போய்ச் சேரும்போது யாகோல்லேவிச்சைக் கைது செய்த போலீஸ்காரன் அங்கு இருப்பதைக் காண்கிறான். அவன் கோவால்யோவ்வின் மூக்கை அவனிடமே ஒப்படைக்கிறான். ஆனால் கோவால்யோவ்வால் தனது மூக்கை மருத்தவரின் உதவியை நாடியும் திரும்ப ஒட்டவைக்க முடியவில்லை. கோவால்யோவ் தான் காதலிக்கும் பெண்ணின் தாயார்தான் தன்மீது செய்வினை வைத்துவிட்டதாக எண்ணி அவளுக்கு கடிதம் எழுதுகிறான். பெண்ணின் தாயார் தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று மறுக்கிறாள்.
சில வாரங்களுக்குப் பின் கோவால்யோவ் படுக்கையிலிருந்து எழும்போது மீண்டும் அவன் மூக்கு அவன் முகத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறான். நாவிதனிடம் போய் சவரம் செய்து கொண்டு தனது பழைய ஊதாரி வாழ்க்கையைத் தொடர்கிறான்.
கோகோல் காலத்து ரஷ்யர்கள் ஒரு மனிதனின் வெளிபுறத் தோற்றத்திற்கு மிகுந்த முக்கியத்துவத்தைத் தந்தார்கள். ஒருவனுடைய முகத்தோற்றத்தை வைத்தே அவனுடைய படிப்பையும், சமூக அந்தஸ்தையும் பிற தகுதிகளையும் கணக்கிட்டார்கள்.
குடி பிறப்பென்பதும் சமூக அந்தஸ்து என்பதும் அசைக்க முடியாத இறுக்கமான கட்டுமானமாக மனிதர்களை அடிமைபடுத்தி வைத்திருந்த காலத்தில் முகத்தோற்றம் என்பது எப்படி மற்ற எல்லாத் தகுதிகளையும் மீறி ஒரு மனிதனை எடைபோடப் பயன்படுகிறது என்பதைப் பற்றிய விமர்சனமாகக் கோகோலின் இந்தச் சிறுகதை அமைந்திருக்கிறது.
தஸ்தவ்யஸ்கியைப் பற்றி எழுதிய அவருடைய சமகாலத்தவர்கள் அவருடைய முக லட்சணம் சாமானிய மாஸ்கோ குடியானவன் ஒருவனின் முகத்தோற்றம் போல் புடைத்திருக்கும் நெற்றியோடும் அதிகம் அசைந்து கொண்டிருக்கும் சிறிய சாம்பல் நிறக் கண்களோடும் இருப்பதைக் கண்டு, இப்படிப்பட்ட முகத்தை உடையவரா இப்படிப்பட்ட வீரீயமுள்ள நாவல்களை எழுதியிருப்பார் என்று வியந்ததாகக் குறிப்புகள் உள்ளன. தஸ்தவ்யெஸ்கியேகூட தனது மண்டை ஓட்டின் வடிவம் தனது குண இயல்புகளைப் பற்றி என்ன சொல்கிறது என்று அறிந்து கொள்ள phrenologist என்ற மண்டையோடுகளை ஆராய்ச்சி செய்யும் நண்பரிடம் போயிருக்கிறார்.
கோகோலின் ‘மூக்கு’ சிறுகதையில் வரும் மூக்கு அதற்குச் சொந்தக்காரனான கோவால்யோவ்வைவிட சமூக மாண்பு உடையதாக இருக்கிறது. அந்த ஒற்றைக் காரணத்தினாலேயே அதற்கு கோவால்யோவைவிட அதிக கௌரவம் கிடைக்கிறது.
போலீஸ்காரர்களும் நீதிமன்றமும் கோவால்யோவின் புகாரை ஏற்க மறுப்பதிலிருந்து முகத்தோற்றத்தை வைத்தே ஒரு மனிதனின் சமூகத் தகுதியை எடை போடுவதென்பது அந்நாளைய அரசாங்க இயந்திரத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதைக் கோகோல் காட்டுகிறார்.
அவர் வாழ்ந்த சமுதாயத்தில் வேரோடியிருந்த இந்தப் போலித்தனத்தை தன்னுடைய மற்ற படைப்புகளிலும் கோகோல் சாடியிருப்பது கவனிக்கத் தக்கது.
மூக்கு முகத்திலிருந்து கழன்று சில நாள் தன்னிச்சையாக வாழ்ந்துவிட்டு மீண்டும் காரணமேதும் இல்லாமல் முகத்தோடு வந்து ஒட்டிக் கொள்ளும் கதையின் மாய யதார்த்தம் கோகோல் புஷ்கினிடமிருந்து கற்றுக் கொண்டது. அவருக்குப் பின் வந்த துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரது நாவல்களிலும் கதைகளிலும் இத்தகைய மாய யதார்த்தக் கூறுகள் மிக மிக அபூர்வமாகவே தென்படுகின்றன.
இந்த வகையில் கோகோலின் வாரிசு என்றால் அது இருபதாம் நூற்றாண்டில் எழுதிய புல்காகோவ்வைத்தான் சொல்ல முடியும்.