
மரணம் என்பது தூரத்திலிப்பவர்களுக்கு ஆன்மீக மர்மங்களும் தத்துவச் செறிவும் நிறைந்ததாகவும், அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அர்த்தமற்ற அபத்தமாகவும் தோன்றும் இருமை குணம் கொண்டது.
சைரஸ் மிஸ்திரியின் “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்” என்ற 2019ம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருது பெற்ற ஆங்கில நாவல் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த ‘அழுக்குத் துரைகள்’ என்று அழைக்கப்படும் பிணம்தூக்கி ஒருவனின் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறது.
பழைய நாளில் பர்ஸியா என்றழைக்கப்படும் ஈரானிலிருந்து எட்டாம் நூற்றாண்டில் மும்பைக்குக் குடிபெயர்ந்த பார்ஸிகள் நெருப்பை வணங்குபவர்கள். அவர்கள் மதத்தின் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த அம்சமாகச் செத்தவர்களுக்கு அவர்கள் நடத்தும் இறுதிச் சடங்குகள் இருக்கின்றன. மரித்துப் போன பார்ஸி பிணங்களைக் குளிப்பாட்டிச் சடங்குகளை நடத்திய பிறகு பார்ஸிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் அமைதித் தோட்டத்திலுள்ள உயரமான கோபுரங்களின் உச்சியில் பிணத்தை கழுகுகளுக்கு இரையாக வைப்பது பார்ஸிகளின் வழக்கம்.
சாகும் நேரத்தில் இயற்கைக்கு ஒரு பார்ஸி செய்யும் இறுதிக் கொடையாக இச்செயல் பார்க்கப்படுகிறது. பிணத்தைத் தூக்கி வந்து தயார் செய்வதற்காகப் பார்ஸிகளிடையே பிணந்தூக்கிகள் என்ற துணைஜாதி உருவாகியிருக்கிறது. மிகத் தூய்மையான பணியினைச் செய்பவர்கள் என்று இந்தப் பிணந்தூக்கிகளுக்குப் பெயரிருந்தாலும் அவர்களை ஏனைய பார்ஸிகள் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறார்கள்.
ஒரு பிணந்தூக்கிக் குடும்பத்தின் பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் தந்தையின் வற்புறுத்தலால் பிணந்தூக்கியாகவே மாறி 1942ல் பார்ஸி பிணந்தூக்கிகளின் வேலை நிறுத்தத்தை நடத்திய ஓர் இளைஞனின் கதையை அடிப்படையாகக் கொண்டு மிஸ்திரி இந்நாவலை எழுதியுள்ளார்.
நாவலின் முக்கிய பாத்திரமான ஃபெரொஸ் எல்சிதனா அக்னி கோவில் பூசாரி ஒருவரின் இரண்டாவது மகன். பிணந்தூக்கிக் குடும்பத்துப் பெண்ணான செப்பிதேயைக் காதலித்துப் புனிதமான பூசாரிக் குடும்பச் சூழலை விட்டு விலகிப் பிணந்தூக்கியாகிறான்.
நாவல் ஆரம்பமாகும் 1942ம் ஆண்டில் மும்பை நகரத்தைத் தாக்கும் கொள்ளை நோயால் பல மரணங்கள் நிகழ்கின்றன. பொழுது சாய்வதற்கு முன்னால் பிணங்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலையிலிருக்கும் பிணந்தூக்கிகள் தங்களுக்கு எந்தவித தொழில் அனுகூலங்களையும் வழங்காமல் நாள் கணக்கில் வேலை வாங்கும் பார்ஸி சங்க நிர்வாகிகளுக்கெதிராக வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
பிணந்தூக்கிகளுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கும் பார்ஸி சமூக அரசியல், அதன் பின்னணியில் அன்றைய இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பார்ஸி மதத்திலுள்ள பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்குமிடையே மதச் சடங்குகளைக் குறித்த விவரங்களை ஒட்டி நிகழும் பூசல்கள் என்று நாவல் 1990கள் வரை நீள்கிறது.
தீண்டாமையும் உயர்சாதி உணர்வும் தனி மனிதர்களின் பொருளாதார நிலைமீதும் உறவுகள்மீதும் ஏற்படுத்தும் அருவருக்கத்தக்க விளைவுகளை எல்சிதனாவின் மகள் ஃபரிதாவின் வழியாகவும், செப்பிதேயின் தாயின் கொடூர மரணத்தின் வழியாகவும், மற்ற பிணந்தூக்கிகளின் வாரிசுகள் வேலை தேடிக் கொள்ளவும், தக்க வாழ்க்கைத் துணைத் தேடிக் கொள்ளவும் எதிர்கொள்ளும் சிரமங்களின் வழியாக மிஸ்திரி மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார்.
மரணத்தின் அநர்த்தத்தைப் போலவே தீண்டாமையின் அர்த்தமற்ற தன்மையும் வாசகரை நாவலின் ஒவ்வொரு திருப்பத்திலும் அசைத்துப் பார்க்கிறது.
அமைதித் தோட்டத்தில் உள்ள எல்லா மிருகங்களிடமும் அன்பாகவே இருந்த செப்பிதேயை தோட்டத்திலிருந்த நல்ல பாம்பே ஏன் கொத்தியது என்று கேட்கும் சிறு வயது ஃப்ரிதாவின் கேள்விக்கு எல்சிதனா எந்த பதிலும் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.
அதுபோலவே பிணந்தூக்கிகளுக்கு எதிராகவும் ஒரு பார்ஸியாகப் புதைக்கப்ப்ட வேண்டும் என்று ஆசைப்படும் ஜோசப் மலோனிக்கு எதிராகவும் இத்தனைக் கொடூரமான தீண்டாமை ஏன் என்ற கேள்வியும் நம்மிடையே எந்த பதிலும் இல்லாமலேயே நிற்கிறது.
நாவலில் வரும் பழமைவாதிகளானாலும் சரி, பாவிகள், ஒழுக்கமற்றவர்களானாலும் சரி, சீர்திருத்தவாதிகளானாலும் சரி, எல்லோரையும் மிகுந்த கருணையுடனும் அவர்கள் தரப்பு வாதத்துக்கு போதிய இடம் தந்தும் மிஸ்திரி நாவலை முன்னகர்த்திச் சென்றிருக்கிறார்.
நாவலின் இறுதியில் நடக்கும் எல்சிதனாவின் தந்தையின் மரணமும், பார்ஸிகளின் எண்ணிக்கையைப் போலவே சுற்றுச்சூழல் மாசுகளால் அருகிவரும் கழுகுகளின் எண்ணிக்கையைப் பற்றிய விவரிப்புகளும் வாசகனை மெல்ல மிக ஆழமான மௌனத்திற்குள் தள்ளிவிடுகின்றன.
நாவலின் கடைசியில் எண்பது வயதகியிருக்கும் எல்சிதனாவும் இதே மௌனத்திற்குள்தான் குடிபுகுகிறார்.
பார்ஸிகள் வணங்கும் நெருப்பைப் போலவும், அமைதித் தோட்டக் கோபுரங்கள்மீது கிடத்தப்பட்டிருக்கும் பிணங்களைத் தின்னும் கழுகுகளைப் போலவும், மரணத்தைப் போலவும் மௌனத்திற்கும் நம்மைச் சுத்திகரிக்கும் மிகப் பெரிய ஆற்றல் உள்ளது.
மிஸ்திரியின் நாவலில் மேற்கூறிய நான்கு விஷயங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
பார்ஸி கோவிலில் உள்ள நெருப்பைப் போலவே மனிதர்களைச் சுத்திகரிப்பதும் இலக்கியத்தின் வேலைகளில் ஒன்று.
பார்ஸிகளைப் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நாவல்.
மாலன் தமிழில் இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். மிக இயல்பான, அலுப்பு தட்டாத மொழிபெயர்ப்பு.