
1888ல் ரஷ்யாவின் ஓடெஸ்ஸா நகரத்தில் பிறந்த அன்னா கோரெங்கோ என்ற இயற்பெயர் கொண்ட அன்னா அக்மத்தோவா ரஷ்ய மொழியின் மிகச் சிறந்த கவிஞர்களின் ஒருவராய்க் கருதப்படுகிறார்.
ஆனால் அவர் வாழ்க்கை எந்த வகையில் பார்த்தாலும் இனிமையானதாக அமைந்திருக்கவில்லை. 1910ல் தனது இருபத்து இரண்டாவது வயதில் அக்மத்தோவா குமிலெவ் என்ற கவிஞரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மண வாழ்க்கை மிகுந்த துன்பம் நிறைந்ததாக இருந்தது.
ஓசிப் மெண்டல்ஸ்தாம், செர்கெய் கோரோடெட்ஸ்கி போன்ற புகழ்ப்பெற்ற கவிஞர்களோடு அக்மத்தோவாவுக்கு இருந்த பரிச்சயத்தையும், அவருடைய கவிதைகளுக்கு வளர்ந்து வரும் புகழையும் வெறுத்த குமிலெவ் அவரைக் கவிதை எழுதக் கூடாது என்று வற்புறுத்த ஆரம்பித்தார்.
1918ல் அக்மத்தோவாவும் குமிலெவ்வும் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதே வருடம் ரஷ்யாவின் மன்னராட்சியும் முடிவுக்கு வந்து ரஷ்யாவில் போல்ஷெவிக் அரசாங்கம் நிறுவப்பட்டது. 1921ல் குமிலெவ்வுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தது. 1925ல் அக்மத்தோவாவின் கவிதைகளை அரசாங்கம் தடை செய்தது. 1953 ஸ்டாலினின் மரணம்வரை அக்மத்தோவாவின் கவிதைகள்மீது இந்தத் தடை நடப்பில் இருந்தது. ஸ்டாலினின் மரணத்துக்குப் பிறகு இந்தத் தடை தளர்த்தப்பட்டாலும் அக்மத்தோவா அரசாங்கக் கண்காணிப்பிலேயே இருந்தார். 1965லும் 1966லும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அக்மத்தோவா 1966ல் மாரடைப்பால் காலமானார்.
உடலைப் பிரதானமாகக் கொண்ட உணர்வுமயமான காதலை ஆன்மீகச் சாயலுடைய மொழியில் அக்மத்தோவாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
அக்மத்தோவாவின் கவிதைகளில் மிக இயல்பாய் அமைந்திருந்த இந்த கலவை அந்நாளைய சோவியத் அரசாங்கத் தணிக்கையாளர்களும் பல இலக்கிய விமர்சகர்களாலும் சமூக ஒழுக்கத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. உடல் இச்சைகளை மையமாகக் கொண்ட கவிதைகளில் அக்மத்தோவா ஆன்மீகத்திலிருந்து இரவல் வாங்கிய படிமங்களையும் மொழியையும் பயன்படுத்துவதைக் கண்டித்த ஏய்க்கன்பாவும் என்ற விமர்சகர் அக்மத்தோவாவை “பாதி கன்னியாஸ்திரி, பாதி விபச்சாரி” என்று விமர்சித்தார். அக்மத்தோவாவின் கவிதைகளைச் சோவியத் அரசாங்கம் சமூக ஒழுக்கத்துக்கு ஊறு செய்வதாகச் சொல்லித் தடை செய்வதற்கு இந்த விமர்சனமே போதுமானதாக இருந்தது.
ஆர்தர் லூரி என்ற இசையமைப்பாளரோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்த அக்மத்தோவாவே “நாமெல்லோரும் இங்கே உல்லாசிகளும் விபச்சாரிகளும்தான்” என்ற 1913ம் ஆண்டு வெளிவந்த கவிதையில் இப்படி எழுதுகிறார்:
“நீ கறுப்பு நிற பைப்பைப் புகைத்துக் கொண்டிருக்கிறாய்
பைப்பிலிருந்து வெளிப்படும் புகை விநோதமான வடிவத்தில் இருக்கிறது
நான் இறுக்கமான ஸ்கர்ட்டை அணிந்திருக்கிறேன்
என்னை மேலும் வடிவழகு உடையவளாகக் காட்டிக் கொள்ள”
ஆனால் பெண்கள் உடல் ரீதியான ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு எதிராக அரசாங்கமும் ஆணாதிக்கமும் காட்டிய கடும் எதிர்ப்பை அக்மத்தோவா உணராமல் இல்லை.
“லோத்தின் மனைவி” என்ற 1922ல் எழுதப்பட்ட புகழ்ப்பெற்ற கவிதையில் லோத் என்ற தீர்க்கதரிசி சோதோமை விட்டு ஆண்டவர் கட்டளைப்படி வெளியேறியபோது ஆண்டவரால் அழிக்கப்படப் போகும் அந்த நகரத்தை ஆண்டவரின் கட்டளையை மீறித் திரும்பிப் பார்த்த லோத்தின் மனைவி உப்புத்தூணாய் மாற்றப்பட்டதைத் தனது நிலையோடு அக்மத்தோவா ஒப்பிடுகிறார். சோதோம் என்பது பாவங்கள் – குறிப்பாக உடல் இச்சை தொடர்பான பாவங்கள் – மலிந்திருந்ததால் ஆண்டவரால் அழிவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கம், திருச்சபை மற்றும் ஆணாதிக்க மனோபாவத்தின் குறியீடாக இருக்கும் லோத் ஆண்டவரின் கட்டளைப்படி அந்நகரத்தை விட்டு வெளியேறுகிறான். அந்த நகரத்தை விட்டு அவ்வளவு எளிதில் அகல முடியாத அவன் மனைவி அதை கடைசியாக ஒரு முறை ஏக்கத்தோடு திரும்பிப் பார்க்கிறாள். அவள்மீது ஆண்டவரின் சாபம் இறங்குகிறது.
“ஒற்றைப் பார்வை: கூரிய ஊசிபோன்ற வலி
அவள் ஓசை எழும்பும் முன்னே அவள் கண்களைத் தைத்து விடுகிறது
அவள் உடம்பு உதிர்ந்துவிழும் நிர்மலமான உப்பாக
அவள் விரைவான கால்கள் தரையில் வேரூன்றி நிற்கின்றன
இந்தப் பெண்ணுக்காக யார் அழுவார்கள்? நம் அக்கறைக்கு இவள் தகுதி இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் போனாளா?
ஆனாலும் திரும்ப நினைத்ததால் மரணத்தை ஏற்றுக் கொண்ட இவளை
என்னால் என்றும் நிராகரிக்க முடியாது.”
ஆனால் ரஷ்யாவில் அடக்குமுறையாலும் சர்வாதிகாரத்தாலும் எண்ணில்லாத மக்கள் சித்திரவதைக்குள்ளாகவும் சாகவும் ஆரம்பித்தபோது அக்மத்தோவாவின் கவிதைகளில் மாற்றம் ஏற்பட்டது. காதல் மீதிருந்த கவனம் மாறிப் பைபிளில் கொடிய அரசர்களை எதிர்த்துக் குரல் எழுப்பிய பழைய யூத தீர்க்கதரிசிகளில் ஒருவராகவே அக்மத்தோவா தன்னை உணர்ந்தார்.
“என் உதடுகள் இனிமேலும்/
முத்தமிடுவதில்லை, அவை தீர்க்கதரிசனங்களைச் சொல்கின்றன”
தீர்க்கதரிசனத்திற்கு மட்டுமன்றி கவிதைக்கும் பெயரில்லாத கொடுமைகளுக்கு அடையாளம் தருவதும் அவற்றைப் பெயரிட்டு அழைப்பதுமே தலையாய பணியாக இருக்கிறது. கொடுமைகளைப் பெயரிட்டழைக்கும்போதுதான் அவை மனிதர்களின் நினைவில் தங்கி வரலாறாய் எழுதப்படும் சாத்தியத்தைப் பெறுகின்றன. பெயரிட்டு அழைக்கப்படாத எந்தக் கொடுமையும் விரைவில் நினைவிலிருந்து அகன்றுவிடுகிறது.
கொடுமைகளைப் பதிவு செய்யாமல் அழிய விடுவது கொடுமைக்கு ஆளான மக்களுக்குத் தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, கவிஞர்கள்கூட செய்யும் துரோகம்.
Requiem என்ற கவிதையில் அக்மத்தோவா இப்படி எழுதுகிறார்.
“பதினேழு மாதங்களை லெனின்கிராட் சிறைச்சாலைக்கு வெளியே இருந்த ஒரு வரிசையில் நின்று கழித்தேன். ஒரு நாள் கூட்டத்தில் இருந்த யாரோ என்னை அடையாளம் கண்டு கொண்டார். எனக்குப் பின்னால் குளிரால் நீலம் பாய்ந்திருந்த உதடுகளோடு நின்றிருந்த பெண் யாரும் என்னை யாரும் என் பெயரால் அழைத்துக் கேட்டதில்லைதான். இப்போது நம்மெல்லோருக்கும் பொதுவாக இருந்த அசமந்தத்தை உதறி எழுந்தவள்போல் அவள் என்னிடம் மிகத் தாழ்ந்த குரலில் கேட்டாள் (இங்கு எல்லோரும் மிகத் தாழ்வான குரலில்தான் பேசிக் கொண்டார்கள்): ” இதை உன்னால் விவரிக்க முடியுமா?”
நான் சொன்னேன்: “என்னால் முடியும்” என்று
அப்போது புன்னகை போன்ற ஏதோ ஒன்று ஒரு காலத்தில் அவள் முகமாய் இருந்த பகுதியின்மீது மின்னல்போல் பரவி மறைந்தது.”
மிகுந்த கறுமையான நாட்களில் வெளிச்சத்தை நாடி நின்றவை அன்னா அக்மத்தோவாவின் கவிதைகள். அந்தக் கறுமைக்கு நடுவில் அவையே வெளிச்சமாகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை.
“எனக்குப் பிரியமானவர்களின் ஆன்மாக்கள் எல்லாம் நட்சத்திரங்களுக்குப் பறந்துவிட்டன.
நான் இழப்பதற்கு யாருமே இல்லை – ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம்”
– திரும்புதல், 1944