
(ரஷ்ய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான பத்து சிறுகதைகளைப் பற்றி இன்றிலிருந்து ஒவ்வொன்றாகப் பதிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன்)
நவீன ரஷ்ய நாவல் மற்றும் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சியில் அலெக்ஸாண்டர் புஷ்கினின் பங்களிப்பு மகத்தானது.
1799ல் பிறந்து 1837ல் தனது முப்பத்தேழாவது வயதில் டி’அந்தஸ் என்பவரோடு நடைபெற்ற சடங்குபூர்வமான துப்பாக்கிச் சண்டையில் (duel) இறந்து போன புஷ்கின் நவீன ரஷிய இலக்கியத்தின் தந்தை என்றே கொண்டாடப்படுகிறார்.
புஷ்கினின் காலம்வரைக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளோடு ஒப்பிடுகையில் ரஷ்ய மொழி இலக்கிய நயமற்ற மொழியாகத்தான் கருதப்பட்டது. ரஷ்ய மொழி பின்னாளில் அடைந்த இலக்கிய அழகிற்கும் நயத்துக்கும் புஷ்கினே தோற்றுவாயாகக் கருதப்படுகிறார்.
அவர் எழுதிய ‘இயூஜீன் ஓனெகின்’ நாவல் எப்படி பிற்கால ரஷ்ய செவ்வியல் நாவல்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறதோ, அதுபோலவே அவருடைய சிறுகதைகளும் வடிவத்தாலும் உள்ளடக்கத்தாலும் பின்னாளில் செக்கோவ் போன்றவர்கள் எழுதிய சிறுகதைக்கு முன்னோடியாகக் கொண்டாடப்படுகின்றன.
புஷ்கின் எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமானதாக அவருடைய “ஸ்பேடுகளின் ராணி” கதை கருதப்படுகிறது.
தனது சக அதிகாரிகள் சீட்டாடுவதை ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் ஹெர்மான் என்ற ஜெர்மானிய ராணுவ அதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குச் சூதாடிப் பழக்கமில்லை.
சீட்டாடிக் கொண்டிருக்கும் தோம்ஸ்கி என்பவன் சூதாட்டத்தில் வெற்றிபெற “மூன்று சீட்டுகளின்” ரகசியம் ஒன்று உள்ளதாகவும, அது தனது பாட்டிக்கு மட்டுமே தெரியும் என்றும் சொல்கிறான்.
தோம்ஸ்கியின் பாட்டியான அந்த முதிய சீமாட்டி பல ஆண்டுகளுக்கு முன்னால் சூதாட்டத்தில் தோற்றுக் கொண்டிருந்தபோது ஒரு பிரபுவிடமிருந்து அந்த ரகசியத்தைக் கற்றுக் கொண்டாள் என்று தோம்ஸ்கி சொல்கிறான்.
இதைக் கேள்விப்படும் ஹெர்மானுக்கு எப்படியும் அந்த மூன்று சீட்டுகளின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. இன்னமும் உயிரோடிருக்கும் எண்பத்தேழு வயதான சீமாட்டியின் வீட்டிற்குள் நுழைவதற்காக அவள் வீட்டில் வசிக்கும் லிசாவியெட்டா என்ற இளம் பெண்ணைக் காதலிப்பதுபோல் நடிக்கிறான்.
வீட்டிற்குள் எப்படியோ நுழைந்த பிறகு ரகசியத்தைத் தன்னிடம் சொல்லச் சொல்லிச் சீமாட்டியை வற்புறுத்துகிறான். அவள் அது வெறும் கற்பனைக் கதை என்று சொல்லி மழுப்புகிறாள். கோபமடைந்த ஹெர்மான் தனது துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். கிழவி பயத்தால் செத்துப் போகிறாள். லிசாவியெட்டாவின் அறைக்கு ஓடிப்போகும் ஹெர்மான் தான் கிழவியைக் கொல்லவில்லை என்றும், தனது துப்பாக்கியில் குண்டே இல்லை என்றும் சொல்கிறான். அவன் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னது பொய் என்று அறிந்து கொள்ளும் லிசவியெட்டா அவனை வெறுக்கிறாள். ஆனாலும் அவன் தப்பிப் போக உதவுகிறாள்.
பின்னர் சீமாட்டியின் சவ அடக்கத்துக்கு ஹெர்மான் போகிறான். அங்கு சீமாட்டியின் பிணம் அவனைக் கண் திறந்து பார்க்கிறது. அன்றிரவு ஹெர்மானுக்கு முன்னால் தோன்றும் இறந்து போன சீமாட்டியின் பேய் மூன்று சீட்டுகளின் ரகசியம் “மூன்று, ஏழு, ஏஸ் (ace) சீட்டு” என்று அவனுக்குச் சொல்கிறது. ஆனால் அவன் ஓர் இரவு ஒரே எண்ணை மட்டுமே வைத்து ஆட வேண்டும் என்றும், லிசவியெட்டாவை மணந்து கொள்ள வேண்டும் என்றும் பேய் கட்டளையிடுகிறது.
தன் மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு சூதாடப் போகும் ஹெர்மான் முதல் நாள் மூன்று என்ற எண்மீது சூதாடி பெரும் பணத்தை ஜெயிக்கிறான். இரண்டாம் நாளும் அது போலவே ஏழு என்ற எண்மீது பணம் கட்டி ஜெயிக்கிறான். மூன்றாம் நாள் ஏஸ் என்ற சீட்டின்மீது பணத்தைக் கட்டி ஆடுகிறான். ஆனால் சீட்டுக்கள் திறக்கப்படும்போது அவன் ஸ்பேடுகளின் ராணிமீது பணம் கட்டியிருப்பது தெரிய வருகிறது. சீட்டிலிருக்கும் ஸ்பேடுகளின் ராணி சித்திரம் அவனைப் பார்த்துக் கண்ணடிக்கிறது. ராணியின் முகமும் செத்துப்போன சீமாட்டியின் முகம்போல் இருக்கிறது.
அச்சத்தில் ஓடிப்போகும் ஹெர்மான் பைத்தியமாகிறான். மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஹெர்மான் ‘மூன்று, ஏழு, ஏஸ் – மூன்று, ஏழு, ராணி’ என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசாதரணமான வேகத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறான். லிசவியெட்டா சீமாட்டியின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் மகனை மணக்கிறாள்.
குற்றம் அதைச் செய்யும் மனிதனின்மீது ஏற்படுத்தும் நுண்ணிய விளைவுகளையும், அதற்குரிய தண்டனையை அவன் அனுபவிப்பதையும் மிக நுணுக்கமாகப் புஷ்கினின் “ஸ்பேடுகளின் ராணி” கதை சொல்கிறது. இவ்வகையில் கோகோல், துர்கனேவ், தஸ்தவ்யெஸ்கி ஆகியோரது பின்னாளைய நாவல்களின் முன்னோடியாகவே புஷ்கினின் இந்தக் கதை திகழ்கிறது.
குறிப்பாக ஹெர்மான் தனது துப்பாக்கியைக் காட்டியதால் கிழட்டுச் சீமாட்டி செத்துப் போவதற்கும், தாச்தவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிகோவ்வின் கையால் கிழவி சாவதற்கும் நிறையவே ஒற்றுமைகள் உள்ளன.
அது மட்டுமன்றி சூதாடும் மனிதர்களின் மனோ நிலைகளையும், சூதாட்டம் என்பது மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை விவரிப்பதில் புஷ்கின் சரி-தவறு என்று மேம்போக்கான அலசல்களை மீறி மனோதத்துவக் கண்ணோட்டத்தில் இக்கதையில் எழுதியிருக்கிறார்.
ரஷ்யர்கள் சூதாட்டத்தின் மீது வைத்திருக்கும் நாட்டத்தையும் அதனால் அவர்கள் சீரழிவதையும் பின்னாளில் பல ரஷ்ய நாவலாசிரியர்கள் – தஸ்தவ்யெஸ்கி உட்பட – பேசியிருக்கிறார்கள். என்றாலும் ஹெர்மான் என்ற ஜெர்மானியன்கூட சூதாட்டத்தின் மீது பித்தாவதுபோல் புஷ்கின் கதையை அமைத்திருக்கிறார்.
சூதாட்டம், கோபம், காமம் முதலான வெறித்தனங்கள் மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் உந்துதல்கள் அறிவுக்கு அப்பாற்பட்டவை. வெறும் விஞ்ஞானத்தால் பகுத்து அறிய முடியாதவை. சூதாட்டம் என்பது என்னவென்றே அறியாத, அறிந்து கொள்ள விரும்பாத ஹெர்மானும் இதற்கு அடிமையாகிப் பைத்தியமாகிப் போவது மனிதர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த கருமை நிறைந்த வெறித்தனங்களுக்கு உதாரணமாகிப் போகிறது.
ஒருவன் செய்யும் குற்றம் அவனை முன்னேற விடாமல் ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விடுகிறது. ஹெர்மான் தனது குற்றற்திற்குக் காரணமாக் இருந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறான். ரஸ்கோல்நிகோவ் தனது குற்றத்தின் விவரங்களையே மீண்டும் மீண்டும் சிந்தித்தபடி அலைகிறான்.
இப்படித் தான் செய்த குற்றத்தின் நினைவுகளோடு ஸ்தம்பித்து நிற்பதே குற்றம் செய்த மனிதனுக்குத் தண்டனையாகிறது. அதுவே அவன் ஓய்வின்றித் தன்னோடு தூக்கி அலையும் நரகமாகவும் இருக்கிறது.