
புத்தாண்டு நாளில் ரஷ்ய மாஸ்டர்களின் ஒரு சுருக்கமான நாவலை வாசித்துவிட விரும்புவர்கள் தஸ்தவ்யெஸ்கியின் ‘சூதாடி”யை வாசிக்கலாம்.
1866ல் வெளிவந்த ‘சூதாடி’ நாவலை தஸ்தவெஸ்கி ஏன் எழுதினார் என்ற வரலாறு சுவாரஸ்யமானது. 1862ல் ஜெர்மனி, ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் போய்ச் சூதாடத் தொடங்கிய தஸ்தவ்யெஸ்கி 1863ல் தன்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் இழந்து தனது கைக்கடிகாரத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதன் பிறகு ஸ்டெல்லோவ்ஸ்கி என்ற பதிப்பாளரிடம் பணச் சிரமத்தில் இருந்த தஸ்தவ்யெஸ்கி ஒரு ஒப்பந்தம் போடுகிறார்.
ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். 1 நவம்பர் 1866க்குள் தஸ்தவ்யெஸ்கி குறிப்பிட்ட பக்கங்களையுடைய நாவலை எழுதித் தரவேண்டும். அப்படி அவர் எழுதித் தரவில்லை என்றால் 1 நவம்பர் 1875வரை அவர் எழுதும் எல்லா நாவல்களையும் தஸ்தவ்யெஸ்கிக்கு ஒற்றைக் காசு தராமல் பதிப்பிக்கும் உரிமை ஸ்டெல்லொவ்கிக்குப் போகும்.
நாவல் அலெக்ஸெய் இவானோவிச் என்பவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. அலெக்ஸெய் ‘ஜெனெரல்’ என்று அழைக்கப்படும் முன்னாள் அரசாங்க உயரதிகாரியின் குழந்தைகளுக்கு டியூஷன் மாஸ்டராக இருக்கிறான். ஜெனரலின் வளர்ப்புப் பெண்ணான போலினாவைக் காதலிக்கிறான்.
ஜெனரல் அரசாங்கச் சேவையிலிருந்த போது கையாடிய பணத்தை ஓய்வு பெறுவதற்கு முன் கட்டிவிட வேண்டிய கட்டாயத்தால் ஒரு பிரஞ்சு பிரபுவிடம் கடன் வாங்கியிருக்கிறார். அதைக் கட்ட முடியாமல் திணறுகிறார். மாஸ்கோவிலிருக்கும் அவருடைய பணக்கார அத்தைக் கிழவி ஒருத்தி நோய்வாய்ப்பட்டிருக்கிறாள் என்று கேள்விபடுகிறார். அவள் சொத்து தனக்குச் சேர வேண்டும் என்ற ஆவலில் அவள் செத்துவிட மாட்டாளா என்று ஆசைப்படுகிறார். 55 வயதான ஜெனெரல் ப்ளான்ச் என்ற இளம்பெண்ணைக் காதலிக்கிறார்.
அலெக்ஸெய் தன்னை வெறித்தனமாகக் காதலிப்பதை அறிந்த போலினா அவனை முட்டாள்தனமான செய்கைகளைச் செய்யத் தூண்டுகிறாள். அவள் தூண்டுதலின் பெயரில் சூதாடப் போகும் அலெக்ஸெய் பணத்தை வென்றுவிட்டுத் திரும்பும்போது அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள். அவன் தனது காதலை அவளிடம் சொல்லும்போதும் மீண்டும் சிரிக்கிறாள்.
இதற்கிடையில் அத்தைக் கிழவி ஜென்ரல் தங்கியிருக்கும் ஜெர்மன் நகரத்துக்கு வந்து தான் சாகப் போவதில்லை என்றும், தனது சொத்து ஜெனரலுக்கு இல்லை என்றும் சொல்கிறாள். பிறகு சூதாடச் செல்லும் கிழவி முதலில் பணத்தை வென்றாலும் பின்பு பெருந்தொகையைத் தோற்கிறாள்.
ஜெனரலுக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்து கொள்ளும் ப்ளான்ச் அவரை விட்டு மாஸ்கோ செல்கிறாள். ஜெனரலுக்குக் கடன் தந்த பிரஞ்சு பிரபு போலினா தனது வைப்பாட்டியாக வர வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பிக்கிறான். போலினாவைக் காப்பாற்ற அலெக்ஸெய் மீண்டும் சூதாடுகிறான். அவளை மீட்கத் தேவையான தொகையை அவன் கொண்டு வந்து தரும்போது போலினா பணத்தை அவனிடம் விட்டெறிந்துவிட்டு ஓர் ஆங்கிலப் பிரவுவிடம் போய்விடுகிறாள்.
அலெக்ஸெய் ப்ளான்ச்சோடு பாரீஸுக்குல் போய் விடுகிறான். பிளான்ச்சின் உயர் சமூக கேளிக்கைகளில் ஈடுபட அலெக்ஸெய் தனது பணம் அத்தனையையும் செலவழிக்கிறான். திடீரென்று பிளான்ச் பாரிஸுக்குப் பின் தொடர்ந்து வந்த ஜெனரலைத் திருமணம் செய்து கொள்கிறாள்.
அலெக்ஸெய் தன் செலவுகளுக்காக நிரந்தர சூதாடியாக மாறுகிறான். ஒரு நாள் ஆங்கிலப் பிரபுவைச் சந்திக்கும் அலெக்ஸெய் அவனிடமிருந்து போலினா தன்னை உண்மையிலேயே காதலித்ததாக அறிகிறான். அத்தைக் கிழவியும் ஜெனரலும் செத்து விட்டதாகவும் அத்தைக் கிழவியின் சொத்து போலினாவுக்கு வந்ததாகவும் ஆங்கிலப் பிரவு சொல்கிறான். ஆங்கிலப் பிரபு அலெக்ஸெய்க்குக் கொஞ்சம் பணத்தைத் தருகிறான். அதை வைத்துச் சூதாட வேண்டாம் என்கிறான்.
அலெக்ஸெய் சுவிட்சர்லாந்துக்குப் போவதைப் பற்றியும் சூதாடுவதைப் பற்றியும் யோசிப்பதோடு நாவல் முடிகிறது.
தஸ்தவ்யெஸ்கி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக வாழ்வின் மிகப் பெரிய சிக்கல்களைத் தன் நாவல்களில் அலசுவது வழக்கம்.
இந்த நாவலின் மையப் புள்ளி சூதாட்டம் என்ற செயல் என்று தோன்றினாலும், தஸ்தவ்யெஸ்கியின் பார்வைக் குவிப்பு மொத்தமும் இந்நாவலில் பணம் உருவாக்கும் அடிமைத்தனத்தின் மீதும் அது மனித உறவுகள்மீது கொண்டுள்ள தாக்கத்தைச் சுற்றியே இருக்கிறது.
தஸ்தவ்யெஸ்கி இந்த நாவலில் எடுத்துக் காட்டும் அடிமைத்தனம் அவர் சொந்த வாழ்க்கையில் ஸ்டெல்லோவ்ஸ்கியிடம் பட்ட அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பு.
ஜெனரல் பிரஞ்சுக்காரனிடம் அடிமைப்பட்டதால் கிட்டத்தட்ட அவரிடம் அடிமை போலவே நடந்து கொள்கிறார். போலினா பிரஞ்சுக்காரருக்கு உடலால் அடிமையாகும் அபாயத்தில் இருக்கிறாள்.
ஆனால் அலெக்ஸெய் போலினாவிடமும், ப்ளான்சிடமும் காதலால் அடிமைபோல் நடந்து கொள்கிறான்.
பணம் தொடர்பான ஊதாரித்தனம்போலவே ஊதாரித்தனமான காதலும் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. மனிதர்களை விடுதலை செய்யக்கூடும் என்று நம்பப்படும் பேரன்பு விலங்காய் அலெக்ஸெய்க்கு மாறுகிறது.
மனத்தளவில் உருவாகும் இந்த அடிமைத்தனம் நாளடைவில் அவனை நிரந்தர சூதாடியாக்கிச் சமூத்தாயத்தின் கண்களில் அவனை அடிமையாக்கி விடுகிறது.
பாவம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து மனிதர்களை மீட்க மீட்பர் ஒருவர் வருவார் என்பது கிறித்துவ சித்தாந்தம். ஆனால் இந்த நாவலில் வரும் அத்தைக் கிழவி போலி மீட்பராகிறாள். பணமிருந்தும் ஜெனரலின் குடும்பத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்க மறுக்கிறாள். தானே சூதாடி அடிமையுமாகிறாள்.
மாறாக சூதாடியாக மாறும் அலெக்ஸெய்யே போலினாவுக்கும் (ஒரு வகையில் ஜெனரலுக்கும்), ப்ளான்ச்சுக்கும் மீட்பராகிறான். ஆனால் பாவத்திற்கு எப்போதும் அப்பாலிருந்த கிறிஸ்து போல் அல்லாமல் அவனே அடிமையாகிறான். தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களின் வரும் பல பாத்திரங்களைப்போலவே (உதாரணத்திற்கு மிஷ்கின்) அலெக்ஸெய்யும் ஒரு வகையில் அசடனான, குறையுள்ள மீட்பன்.
அதனால் அவன் போலினாவுக்கும், ப்ளான்ச்சுக்கும் தந்த மீட்பு போலியானதாகுமா என்பது கேள்வி.
‘சூதாடி’ சின்ன நாவல் என்றாலும் காத்திரமானது. தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களில் வரும் பல முக்கிய அலசல்களை உள்ளடக்கியது.
புத்தாண்டு நாளில் வாசித்துப் பாருங்கள்.