
வாசிக்கப்பட வேண்டிய பத்து சிறந்த ரஷ்ய நாவல்கள் என்று கடந்த சில நாட்களில் பதிவிட்டிருந்தேன்.
அந்தப் பட்டியலில் இவான் துர்கனேவின் 1850ம் ஆண்டு வெளிவந்த குறுநாவலான “தேவைப்படாத மனிதனின் டைரி” (The Diary of a Superfluous Man)-ஐ வேண்டுமென்றே சேர்க்காமல் விட்டிருந்தேன்.
அழகியல், நாவல் வடிவத்தின் வளர்ச்சி என்ற அடிப்படையில் ‘”தேவைப்படாத மனிதனின் டைரி”-ஐ நான் பட்டியலில் சேர்க்காமல் விட்டது சரிதான். டைரிக் குறிப்புகளால் கதையை முன் நகர்த்திச் செல்லும் உத்தியை இந்நாவல் கையாள்கிறது.
இந்த வடிவம் 1748லேயே ஆங்கிலத்தில் ஜான் க்லேலாண்டால் தனது ‘காமக் கிளுகிளுப்புகளுக்குப் பஞ்சமில்லாத’ நாவலான Fanny Hill-இல் பயன்படுத்தப்பட்டு விட்டது. தஸ்தயெவ்ஸ்கிகூட 1846ல் வெளிவந்த Poor Folk நாவல் ரஷ்யாவைப் பிடித்தாட்டும் வறுமையைப் பற்றிய இரு நண்பர்களிடையே நடக்கும் கடிதப் போக்குவரத்தின் வழியிலேயே கதையைச் சொல்லிக் கொண்டு போகிறது.
ஆனால் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் துர்கனேவ்-இன் “”ம்தேவைப்படாத மனிதனின் டைரி” மிக முக்கியமான நாவல்.
உலக இலக்கியத்துக்கு ரஷ்ய இலக்கியம் தந்த மிக முக்கியமான பங்களிப்பான ‘தேவைப்படாத மனிதன்’ என்ற கதாபாத்திர வகைமையை துர்கனேவ்-இன் இந்த நாவல்தான் உலகத்திற்கு (அறிமுகப்படுத்தா விட்டாலும்) அடையாளப்படுத்திக் காட்டியது.
அது என்ன “தேவைப்படாத மனிதன்”? ரஷ்ய நாவல்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒருவன் மிக நன்றாகப் படித்திருப்பான். அதீத புத்திக் கூர்மையுள்ளவனாக இருப்பான். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். கலை, இலக்கியம் பற்றிய மிக உன்னதமான கருத்துகளும், ரசனையும்கூட அவனுக்கு இருக்கும். ஆனால் அவனால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாதபடி இருக்கும். சும்மா சோம்பித் திரிந்தே வாழ்க்கையைக் கடத்துவான். கண்ணெதிரே நடக்கும் அநீதிகளைத் தடுக்கும் ஆற்றலும், சமூக அந்தஸ்து அவனுக்கு இருந்தும் எதுவும் செய்ய மாட்டான். காதலில் விளக்க முடியாத காரணங்களுக்காகத் தோல்வியடைவான். தனது தேர்ச்சிகளால் மற்றவர்களையும் காயப்படுத்தித் தன்னையும் இறுதியில் அழித்துக் கொள்வான்.
துர்கனேவ்வின் “தேவைப்படாத மனிதனின் டைரி” குறுநாவலில் வரும் சுல்காத்துரின் தன்னையே முக்கியமில்லாதவனாய் கருதுகிறான். குறுநாவலின் தொடக்கத்தில் தான் சாகக் கிடப்பதாய்ச் சொல்லும் சுல்காத்துரின் தன் மீது யாரும் அன்போ காதலையோ காட்டியதில்லை என்கிறான். அவன் கணிப்பைப் பொறுத்தவரையில் அவன் வரலாற்றிலிருந்து எளிதில் கழித்துவிடக் கூடிய மனிதன். சுல்காத்துரின் தன்னையே “தேவைப்படாத மனிதன்” என பெயரிட்டு அழைத்துக் கொள்கிறான்.
டைரிக் குறிப்புகள் தொடர சுல்காத்துரின் தனது வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறான். பணக்கார அதிகாரி ஒருவரின் மகள் ஒருத்தியைக் காதலித்ததையும், சுல்காத்துரினுக்கு சரியாகப் பேசவோ பழகவோ தெரியாவிட்டாலும் அந்த அழகிய பெண் அவனோடு கனிவாகப் பழகியதாகவும் சொல்கிறான். ஆனால் ஒரு நாள் நடைபெறும் நடன விருந்தின்போது அரங்கத்துக்குள் நுழையும் பணக்கார இளவரசன் மீது அந்தப் பெண்ணின் கண் போகிறது. இதனால் வேதனையடையும் சுல்காத்துரின் இளவரசனை அவமானப்படுத்துகிறான். இருவரும் முட்டாள்தனமான சாகும்வரை சண்டையிடத் தயாராகிறார்கள்.
மொத்தத்தில் அவன் விரும்பிய எதுவும் கிடைக்காமல் சுல்காத்துரின்-இன் வாழ்க்கை பூஜ்ஜியமாக முடிகிறது.
சில விமர்சகர்கள் ரஷ்யாவில் இத்தகைய “தேவைப்படாத மனிதர்கள்” உருவாவதற்கு 19ம் நூற்றாண்டு ரஷ்யாவில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைதான் காரணம் என்கிறார்கள். நெப்போலியனின் படையெடுப்பு ரஷ்யாவைச் சர்வநாசம் செய்த பிறகு ஜார் மன்னனின் ஆட்சியில் ரஷ்யாவின் சகல அரசியல்/நிர்வாகத் துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடின. இது திறமை வாய்ந்த மேல்தட்டு இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தது. அவர்களும் ஊழல்மிகுந்த அரசாங்கத் துறையில் ஊழலின் மேலிருந்த வெறுப்பால் சேரத் தயங்கினார்கள். சும்மாவே தமது காலத்தைக் கழித்தார்கள். மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்கள் இதைத்தான் செய்யலாம். உடல் உழைப்பு தொடர்புடைய எதையும் செய்யக் கூடாது என்று அன்றைய சமூகக் கட்டுப்பாடும் இந்தத் தலைமுறையின் மாபெரும் சோம்பலுக்கு வழிவகுத்தது.
மற்ற விமர்சகர்கள் அந்தக் காலக்கட்டத்துப் படித்த ரஷ்ய இளைஞர்களுக்கு ஆங்கிலக் கவிஞர் பைரன் மீதிருந்த மோகம்தான் அவர்களைப் பைரனைப்போலவே தீராத சோகத்திலும், அடையவே முடியாத காதல்களை எண்ணியும் வாழ்க்கையைக் கடத்தத் தூண்டியதாகச் சொல்கிறார்கள்.
எது எப்படி இருப்பினும் துர்கனேவ் அடையாளப்படுத்திய “தேவைப்படாத மனிதன்” என்ற கதாபாத்திரம் முக்கியமான ரஷ்ய நாவல்களில் தோன்றியே வந்திருக்கிறது.
துர்கனேவ் “தேவைப்படாத மனிதனின் டைரி”-ஐ எழுதுவதற்கு முன்னாலேயே வெளிவந்துவிட்ட புஷ்கினின் “இயூஜின் ஓனெகின்” கவிதை நாவலில் வரும் இயூஜின் ஓனெகின், லெர்மந்தோவ்-இன் A Hero for Our Time-இல் வரும் பெச்சோரின் தொடங்கிப் பின்னாளில் தஸ்தவ்யெஸ்கியின் ராஸ்கோல்நிகோவ், மிஷ்கின் இளவரசன், டால்ஸ்டாயின் போரும் அமைதியில் வரும் பேஷுகோவ் ஆகிய அனைவரும் தேவைப்படாத மனிதர்களே. துர்கனேவ்-இன் “தந்தைகளும் மகன்களும்” நாவலில் வரும் பாஸாரோவ்வையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.