
முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த (1) கரமசோவ் சகோதரர்கள், (2) அன்னா கரனீனா, (3) போரும் அமைதியும், (4) குற்றமும் தண்டனையும், மற்றும் (5) இவான் இலியிச்சின் மரணம் ஆகிய நாவலகள் அனைவராலும் செவ்வியல்தன்மையுடைய நாவல்கள் என்று ஒப்புக் கொள்ளப்படுபவை.
ஆங்கில மொழியைப் பொறுத்தவரை 1930கள் தொடங்கி ரஷ்ய செவ்வியல் நாவல்களைப் பற்றிய ஆய்வு உலக இலக்கியத்தில் அவற்றின் முக்கியத்தவத்தைக் குறித்தும் கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.
ஆங்கில நாவல் உலகில் தலைசிறந்தவர்கள் என்று கருதப்பட்ட ஹென்றி ஜேம்ஸ், ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் போன்றவர்கள் டால்ஸ்டாய், தஸ்தவ்யெஸ்கி, துர்கனெவ் ஆகியோரது நாவல்களைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள்.
ஆர்னல்ட் பென்னட் உலகின் மிகச் சிறந்த பன்னிரண்டு நாவல்களைப் பட்டியல் போட்டார். அதில் இருந்த அத்தனை நாவல்களும் ரஷ்ய நாவல்களாகவே இருந்தன.
வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த பத்து ரஷ்ய நாவல்கள் பட்டியலில் இரண்டாம் பகுதியாக கொடுக்கப்பட்டுள்ள கீழ்வரும் ஐந்து நாவல்கள் முதல் ஐந்தின் அதே செவ்வியல் தன்மை கொண்டவை அல்ல. (ஓரளவுக்குத் துர்கனேவ்வை வேண்டுமென்றால் செவ்வியல் என்ற வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளலாம்).
இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ரஷ்ய விமர்சகர் மிக்காயில் பாக்தின்-இன் கருத்தே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
ரஷ்ய நாவல்கள் பெற்ற வரவேற்பையும் புகழையும் கோட்பாட்டு ரீதியில் விளக்க முனைந்த பாக்தின் ‘மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய நாவல் வடிவத்தின் கட்டமைப்பை, உள்ளடக்கத்தை, சமூக/அரசியல் அலசலை, பாத்திர வார்ப்பை, உரையாடல்களை ரஷ்ய நாவல்கள் உள்வாங்கிக் கொண்டு ரஷ்ய பாரம்பரிய அழகியலின் வழியாக இன்னும் பெரிதாக, இன்னும் விரிவாக, இன்னமும் ஆழமாக மாற்றித் தந்ததே’ ரஷ்ய நாவல்களின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
அதாவது டால்ஸ்டாய், தஸ்தவ்யெஸ்கி ஆகியோரது நாவல்கள் மனித குலம் அனைத்துக்கும் பொதுவான பிரச்சனைகளையும் மனித குண இயல்புகளையும் ரஷ்ய அழகியல் என்ற லென்ஸின் மூலமாக ஆராய்ந்து அந்த அலசலின் பலனை மீண்டும் உலகுக்கே தந்தன எனலாம்.
கீழ்வரும் மற்த ஐந்து நாவல்கள் சிறந்தவை என்றாலும் அவற்றுள் ரஷ்யத் தன்மை மிகுந்ததாலும் உலகத்துப் பயனுள்ளதாக அமையக்கூடிய பொதுப் பார்வை குன்றியதாலும் சற்று மாற்றுக் குறைந்தவையாகவே கருதப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
6. தந்தைகளும், மகன்களும் – இவான் துர்கனேவ்
1862ல் வெளிவந்த இவான் துர்கனேவ்-இன் ‘தந்தைகளும் மகன்களும்’ அதன் காலத்தில் மிகுந்த புகழ்ப்பெற்ற நாவலாகக் கருதப்பட்டது. ஆர்காடி கிர்சானோவ் மற்றும் பார்சாரோவ் என்ற இரண்டு நண்பர்களின் கதையை இந்த நாவல் சொல்கிறது. பல்கலைக் கழகப் படிப்பை முடித்துவிட்டு இருவரும் ஆர்காடியின் பண்ணை வீட்டிற்குத் திரும்புகிறார்கள். ஆர்காடி சொந்தமான நிலங்களும் பண்ணையும் உடைய குடும்பத்தைச் சேர்ந்தவன். மருத்துவ மாணவனான பார்ஸாராவ்வோ சாதாரண மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆர்காடியைவிடவும் பண்ணையாரனா அவன் தந்தை நிக்கோலேயைவிடவும் சாமர்த்தியசாலியாகவும் சுறுசுறுப்பானவனாகவும் பார்ஸாரோவ் இருந்தாலும் சமூக அந்தஸ்தில் அவன் தாழ்ந்தவன் என்பதால் அவனுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. இதன் பயனாக பார்ஸாரோவ் நிலவும் சமூக அமைப்புக்கள் அனைத்தையையும் புரட்டிப்போட்டுப் புதிதாக்கும் நிஹிலிச கொள்கையைப் பேசுகிறான். பார்ஸாரோவ்வின் கவர்ச்சியில் மயங்கி ஆர்காடியும் நிஹிலிச கொள்கையால் ஈர்க்கப்படுவதைக் கண்டு நிகோலேயும் ஆர்காடியின் சித்தப்பா பாவேலும் பார்ஸாரோவை வெறுக்கிறார்கள். ஏழைகளான பார்ஸாரொவ்வின் பெற்றோர்கள் அவனுடைய அரசியல் எண்ணங்களைக் கண்டு புரியாமல் மிரள்கிறார்கள். இதற்கிடையில் பார்ஸாரோவ் அன்னா செர்கியெவ்னாவிடம் காதல் கொள்கிறான். அன்னா பெண் என்றாலும்கூட பார்ஸாரோவ்வைப் போலவே சமூக அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். ஆனால் அவள் உயர் மட்டத்தில் உள்ளாவர்களோடு வைத்திருக்கும் பரிச்சயம் அவர்களிடையே காதல் வளர்வதைத் தடுக்கிறது. அன்னா பார்ஸாரோவ்வின் காதலை மறுக்கிறாள். பார்ஸாரோவ் மருத்துவத் தொழிலில் தனது தந்தைக்கு உதவி செய்ய முடிவெடுக்கும் நேரத்தில் பிணம் ஒன்றை அறுக்கும்போது ஏற்படும் காயத்தால் ரத்தத்தில் விஷமேறிச் செத்துப் போகிறான். ரஷ்யச் சமூகத்தின் அக்காலத்து அமைப்பு எப்படி மேல்மட்டத்தினரிடையே போலித்தனங்களை வளர்த்ததென்பதையும், தகுதியுள்ளவர்கள் மேல்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாததால் அவர்களுக்கு வாய்ப்புக்கள் எப்படி மறுக்கப்பட்டன என்று சொல்லும் அற்புதமான நாவல். கதாபாத்திரங்களின் உள்ள நிலைப்பாடுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் உரையாடல்களைச் செதுக்குவதில் துர்கனேவ்வும் டால்ஸ்டாய் தஸ்தவ்யெஸ்கி ஆகியோருக்கு நிகரானவர் என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ள நாவல்.
7. A Hero of Our Time, மிக்காயில் லெர்மந்தோவ்
ரஷ்யாவின் முதல் உளவியல் நாவல் என்று அழைக்கப்படும் A Hero of Our Time ரஷ்ய நாவல் இலக்கியத்துக்கு முதன்முறையாக பெச்சோரின் என்ற “எதிர்க் கதாநாயகனை” அறிமுகப்படுத்தியது. நாவலின் தலைமைக் கதாநாயகனான பெச்சோரின் கதாநாயகர்களுக்கே உரிய வசீகரமும் அழகியல் அம்சங்களும் கொண்டவன் என்றாலும்கூட அவனுக்குள் ஆழப் பதிந்திருக்கும் நம்பிக்கையின்மையும் போதாமை உணர்வையும் அவனை அழிவுப் பாதையிலேயே செல்லத் தூண்டுகின்றன. பெலா என்ற சிர்காசிய இளவரசி உட்பட பெச்சோரின் பல பெண்களை அவர்களிடம் உண்மையாக இருக்கும் எண்ணம் எதுவும் இன்றியே அவர்களைக் காதலிப்பதுபோல் நடித்துக் கைவிடுகிறான். அவன் உண்மையிலேயே காதலிக்கும் ஒரே பெண்ணான வெராவைத் தேடிப் போகும் தருணத்தில் விதியே பெச்சோரின் நல்லவனாக மாறுவதைத் தடுக்கிறது. அவன் குதிரை தடுக்கி விழுகிறது. அதனோடு வெராவைத் தேடிச் செல்லும் எண்ணத்தைப் பெச்சோரின் கைவிடுகிறான். க்ருனிட்ஸ்கி என்பவனோடு சண்டைக்குப் போனபின் தாளாத மனச்சோர்வுக்குள் போனபின் காலப்போக்கில் பெச்சோரின் மரணமடைகிறான். எதிலும் நிறைவடையாத ஒருவகை பைரோனிய மனப்பான்மையால் சீரழிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குறியீடாகவே லெர்மந்தோவ் பெச்சோரினைச் சித்தரித்திருக்கிறார். ‘அந்நியன்’ குறுநாவலை எழுதிய ஆல்பர்ட் காம்யூவால் மிகவும் கொண்டாடப்பட்ட நாவல்களில் A Hero of Our Time நாவலும் ஒன்று. இந்நாவல் பெச்சோரினின் பன்முகமான குண இயல்புகளைக் காட்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய ஐந்து கதைகளாய் எழுதப்பட்டிருக்கிறது.
8. Dead Souls, நிக்கோலே கோகோல்
1842ல் வெளிவந்த Dead Souls நாவலை எழுதிய கோகோல் அதனை ‘உரைநடைக் காவியம்’ என்று தலைப்பட்டையில் வர்ணித்தார். சாசரின் கண்டஎபெர்ரி கதைகளைப் போலவே பாவெல் சிச்சிகோவ் என்ற நடுத்தர வர்க்க வணிகனின் பயணங்களையும் அந்நாளைய ரஷ்ய சமூகத்தில் அவன் சந்தித்த மனிதர்களையும் இந்நாவல் சித்தரிக்கிறது. சிச்சிகோவ் தான் யார் என்பதையோ எங்கிருந்து வருகிறான் என்பதையோ யாரிடமும் தெளிவாகச் சொல்லாமல் ஊர் ஊராகச் சென்று செத்துப்போன அடிமைகளை அவர்களுடைய எஜமானர்களிடமிருந்து சொற்பத் தொகைக்கு வாங்குகிறான். அப்போது ரஷ்யாவில் அடிமைகள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரபுவின் செல்வமும் அவர்கள் வைத்திருக்கும் அடிமைகளின் (‘ஆன்மா’க்களின்) எண்ணிக்கையைச் சேர்த்தே கணக்கிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு வரையிலும் அடிமைகளை வைத்திருக்கும் எஜமானர்கள் செத்துப்போன அடிமைகளுக்கும் வரி விதிக்க வேண்டும் என்ற சட்டம் நடப்பில் இருந்தது. சிச்சிகோவ்வுக்குத் தங்கள் அடிமைகளை விற்றுவிட்டால் அவர்களுக்காக வரி கட்டத் தேவையில்லை என்று எண்ணும் எஜமானர்கள் அவனிடம் செத்துப்போன அடிமைகளை விற்று விடுகிறார்கள். காலப்போக்கில் செத்துப்போனவர்களை சிச்சிகோவ் ஏன் வாங்குகிறான் என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். அவன் வெளிநாட்டினரின் ஒற்றனாக இருக்கக்கூடும் என்றும், மாறுவேடத்தில் நெப்போலியனே சிச்சிகோவாக வந்திருக்கிறான் என்றும் வதந்திகள் பரவுகின்றன. அதன் பின்னர்தான் சிச்சிகோவ் முன்னாள் அரசாங்க அதிகாரி என்பதும், தனக்கு இத்தனை அடிமைகள் இருக்கிறார்கள் என்று ஆவணங்களைக் காட்டி வங்கிகளை ஏமாற்றி அவன் பெரும் தொகையைக் கடனாக வாங்கித் தப்பித்துப் போக முடிவு செய்திருக்கிறான் என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது. சமுதாயத்தில் முன்னேற வழியில்லாத ஆனால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையும் அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் மிகக் கூர்மையான கதைகூறலின் வழியாகவும், நகைச்சுவை வழியாகவும் சொல்லும் அற்புதமான நாவல்.
9. ஓப்லமோவ், இவான் கோன்சாரோவ்
1859ல் வெளிவந்த இந்த நாவல் “ஓப்லமோவிஸம்” என்ற புதிய வார்த்தையை ரஷ்ய மொழிக்கு வழங்கியது. இந்த நாவலின் கதாநாயகனான ஓப்லமோவ் என்ற சிறு நிலச்சுவாந்தார் மிகுந்த சோம்பல் உள்ளவனாக இருக்கிறான். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அவன் படுக்கையிலேயே கழிக்கிறான். படுக்கையிலிருந்தபடியே தனது அன்றாட வேலைகளைச் செய்து முடிக்கிறான். நாவலின் தொடக்கத்தில் அவனுடைய பண்ணையில் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அவனுக்குக் கடிதம் வருகிறது. ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பல் எப்படிப்பட்டது என்றால் தனது பண்ணையில் உள்ள பிர்ச்சனைகளைத் தீர்ப்பதற்காக முயற்சியெடுக்கும் ஓபலமோவ் தனது படுக்கையிலிருந்து அதே அறையிலுள்ள நாற்காலிக்கு நகரவே நாவலின் முதல் அத்தியாயத்தின் பெரும் பகுதி தேவைப்படுகிறது.
ஓப்லமோவ் தனது சோம்பலால் சந்தித்த இழப்புக்கைன் பட்டியலாகவே நாவல் தொடர்கிறது. எதிலும் அக்கறையில்லாத ஓப்லமோவை அவனுடைய நண்பர்கள் ஏமாற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஓபலமோவ்-இன் பண்ணையிலிருந்து வரும் முழு வருமானத்தையும் அவர்களே கைப்பற்றியும் கொள்கிறார்கள். நண்பர்களின் சூழ்ச்சியாலும், சோம்பலால் தனது பண்ணையைச் சரிவர பராமரிக்காததாலும் பல முறை நொடித்துப் போகும் ஓப்லமோவ்-வை ரஷ்ய தந்தைக்கும் ஜெர்மன் அன்னைக்கும் பிறந்தவனான மிகுந்த உழைப்பாளியான அவனுடைய நண்பன் ஒருவன் மறுபடியும் மறுபடியும் காப்பாற்றி விடுகிறான். ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பல் அவனுடைய நண்பனின் அத்தனை முயற்சிகளையும் பயனற்றதாக்கி விடுகிறது. ஓப்லமோவ்-வை இந்த அசுரச் சோம்பலில் இருந்து எப்படியேனும் உலுக்கி எழும்பச் செய்ய நண்பன் அவனுக்கு ஓல்கா என்ற பெண்ணை அறிமுகப்படுத்துகிறான். ஓல்காவும் ஓப்லமோவ்-வும் காதலிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் அளவுக்கு இந்தக் காதல் முன்னேறுகிறது. ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பலையும் செயலாற்ற முடியாமல் அவனைத் தடுத்தபடியே இருக்கும் ஒரு வகையான அச்சத்தையும் கண்டு ஓல்கா கடைசி நிமிடத்தில் நிச்சயத்தை ரத்து செய்கிறாள். பின்பு ஓல்காவுக்கும் ஓப்லமோவ்-இன் நண்பனுக்குமே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
நாவலின் இறுதி கட்டத்தில் எப்படியேனும் ஒப்லமோவ்-ஐ அவனுடைய சோம்பலில் இருந்து எழுப்பிவிடுவது என்று ஓல்கா தனது கணவனுடன் அவன் வீட்டிற்குப் போகிறாள். பழைய பண்ணையை இழந்து கொஞ்சம் சிறிய பண்ணையில் வாழும் ஓப்லமோவ் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகனுக்கு நண்பனின் பெயரை வைத்திருக்கிறான்
அவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் இந்த நாவலின் மிக அற்புதமான பகுதிகளில் ஒன்று. ஓப்லமோவ் தன்னை உணர்ந்தவனாக தனது சோம்பலுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கிறான். தனது நிலைக்குக் காரணம் ‘ஓப்லமோவிடிஸ்’ என்ற வியாதி என்கிறான். அது கூட பிறந்தது. வெறும் மனித முயற்சிகளால் மாற்ற முடியாதது. ஓப்லமோவ் என்றுமே மாறமாட்டான் என்று ஓல்காவும் அவள் கணவனும் அறிந்து கொள்கிறார்கள். பிறகு ஓப்லமோவ் தூக்கத்தில் செத்துப் போகிறான்.
சோம்பலை மனிதனுக்குள் இருக்கும் ஒரு குறையாகக் கருதுவது நமது மரபு. சோம்பித் திரியேல் என்று அதற்கு நம்மிடையே செய்யுள்களாகவும், பாடல்களாகவும், வாய்மொழியாகவும் பல போதனைகள் உண்டு. ஆனால் ’ஓப்லமோவ்’ நாவலில் சோம்பல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்யச் சூழலில் பணக்கார வர்க்கத்தினரிடையே நிலவிய பெரும் சோர்வின் வெளிப்பாடாகவே காட்டப்படுகிறது. பண்ணையில் பொருளாதார நெருக்கடி என்று கடித்தத்தால் அறிந்து கொள்ளும் ஓப்லமோவ் படுக்கையிலிருந்து எழ முடியாமல் பலவகையான சிந்தனைகளாலும், பகற்கனவுகளாலும், தனக்குள் நடக்கும் உரையாடல்களாலும் தனக்குள் மூழ்கிக் கிடப்பதாக கோன்சாரோவ் காட்டுகிறார். அதன் பிறகு அவன் மீண்டும் தூங்குகிறான். அப்போது வரும் கனவில் அவன் பெற்றோர் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள் என்று அவனுக்குக் காட்டப்படுகிறது. பெரும் பணக்காரர்களான அவர்கள் ஓப்லமோவ்-ஐ எந்த வேலையையும் செய்ய விட்டதில்லை. உல்லாசப் பயணம் போகவும், வேறு அர்த்தமில்லாத காரணங்களுக்காகவும் ஓப்லமோவ்-ஐ அதிக்கடி பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும்கூட ஓப்லமோவ்-வின் சோம்பலை அவனுடைய பெற்றோர்களின் வளர்ப்பில் உள்ள குறை என்று மேம்போக்காக மட்டும் கோன்சாரோவ் சொல்லவில்லை. அந்தக் காலத்தில் பணக்காரர்கள் வீட்டு வேலைகள் செய்து தங்கள் கைகளை அசுத்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது முதற்கொண்டு மீறமுடியாத சின்னச் சின்ன விதிகள் இருந்தன. அவை எழுதப்படாதவை என்றாலும் அவற்றை மீற ஐரோப்பிய பிரபுக்கள் தயங்கினார்கள். ஏனெனில் சமுதாயத்தில் பிரபுக்களின் வேலை கட்டளையிடுவது, ஏழைகளுக்குத் தந்தையாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, தேவையென்றால் தண்டிப்பது. வேலைக்காரர்களின் வேலை சேவகம் செய்வது. கடவுளால் அமைக்கப்பட்ட இந்த முறைமையை மீறினால் இயற்கை தனது சமானத்தை இழந்து உலகம் தலைக்கீழாகிவிடும் என்று நம்பப்பட்டது
கண்ணுக்குத் தெரியாத, அசைக்கவே முடியாத இந்த விதிகளுக்கு உட்பட்டு ஓப்லமோவ் எதையும் சொந்தமாகச் செய்யும் ஆற்றல் இல்லாதவனாகவே மாறிவிடுகிறான். ரஷ்ய, கிரேக்க மொழிகளில் ‘பாவம்’ என்ற விஷயத்தைக் குறிக்கும் வார்த்தைகள் ‘அத்துமீறுதல்’ என்று அர்த்தம் தருவதில்லை. மாறாக ‘காயப்படுதல்’, ‘குறியைத் தவறவிடுதல்’ என்ற அர்த்த்ததையே தருகின்றன.
அவனைச் சோம்பேறியாக்கிய அவனுடைய சமூகச் சூழலால் காயப்பட்டவனாகவே கோன்சாரோவ் இந்த நாவலில் ஓப்லமோவ்-ஐச் சித்தரிக்கிறார். அவனுடைய சோம்பல் எவ்வளவுதான் வெறுக்கத் தகுந்தது என்றாலும் கடைசிவரை ஓப்லமோவ்-விடம் ஒருவகையான அப்பாவித்தனம் – தஸ்தவ்யெஸ்கி நாவல்களில் சொல்லப்படுவது போன்ற அசட்டுத்தனம் – ஒட்டி இருக்கிறது. அவன் ஓல்காவிடம் பேசும் காதல் பேச்சுக்கள் தந்திரமற்றவையாகவே இருக்கின்றன.
சமுதாயச் சூழல்களும் விதிகளும் அவன்மீது சுமத்திய கனத்தைத் தாங்க முடியாதவனாகவே ஓப்லமோவ் காண்பிக்கப்படுகிறான். கடைசியில் வாழ்க்கை முழுவதும் அவன் விரும்பிய தூக்கத்தின் போதே அவன் நிரந்தரமாகத் தூங்கப் போகிறான்.
சமுதாயம் ஒருவர்மீது விதிக்கும் அசைக்க முடியாத விதிகளால் நாம் எப்போதேனும் திகைத்து நின்றிருக்கிறோம் எனில் நாம் எல்லோரும் ஓப்லமோவ்களே.
கோன்சாரோவ்-இன் ‘ஓப்லமோவ்’ நிறைய பேரால் அறியப்படாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ரஷ்ய நாவல்.
10. தாய், மாக்ஸிம் கார்க்கி
வெறும் பரப்புரை நாவலாகக் கருதப்படக்கூடிய அபாயம் இதற்கு இருக்கிறது என்றாலும்கூட, 1906ல் வெளிவந்த தாய் நாவலை மீட்டெடுக்கும் அம்சங்கள் இல்லாமல் இல்லை. ரஷ்யப் புரட்சிக்கு முந்திய தொழிலாளர்களின் வாழ்க்கையை அழகியல் உணர்வோடு பதிவு செய்வதில் கார்க்கி வெற்றி பெறுகிறார். தொழிற்சாலை ஒன்றில் சொல்ல முடியாத ஏழ்மைக்கும் அன்றாட சித்திரவதைகளுக்கும் இடையில் நாவலின் தலைமைக் கதாபாத்திரமான பெலாகியா வ்ளாசோவா சாதாரணத் தொழிலாளியாக வேலை செய்கிறாள். குடிகாரனான அவள் கணவன் அவர்களுடைய மகனை வளர்க்கும் பொறுப்பை அவளிடமே விட்டுவிடுகிறான். அவளையும் அடித்துத் துன்புறுத்துகிறான். அப்பனைப் போலவே முதலில் குடிகாரனாகவும் திக்குவாயனாகசும் வளரும் மகன் புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு மனம் திரும்புகிறான். அடிப்படை படிப்பறிவே இல்லாதவள் என்றாலும்கூட புரட்சிக் கருத்துகளில் ஆர்வம் ஏற்பட்டு பெலாகியா புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். முதலில் சொன்னதுபோல் இந்நாவலை வெறும் சோசலிச பரப்புரை என்று தள்ளிவிடுவது எளிது. ஆனால் கார்க்கியின் வர்ணனைகளும் கதை சொல்லும் பாங்கும் அழகியலும் நாவலை அந்த அபாயத்திலிருந்து தூக்கி நிறுத்தி விடுகின்றன.