ரஷ்ய நாவல்களில் இயேசு

லத்தீன் கிறித்தவம் என்று அழைக்கப்படும் மேற்கு ஐரோப்பிய கிறித்துவத்துக்கும் கிரேக்கக் கிறித்துவத்தின் வழி வந்த ரஷ்ய கிறித்துவத்துக்கும் இடையே கோட்பாடுகளில் மிகத் தெளிவான வேறுபாடுகள் உள்ளன.

இந்த வேறுபாடுகள் கிறித்துவ இறையியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஓரளவுக்கு அக்காலத்திய ரோமப் பேரரசின் அரசியலும் இவற்றுக்குக் காரணமாக அமைந்தன.

கோகோல், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய், புல்காகோவ் ஆகியோரது நாவல்களைப் புரிந்து கொள்ள ரஷ்ய கிறித்துவத்தின் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியம்.

கி.பி. 280ம் ஆண்டில் சாதாரண ரோமப் படைத்தளபதி ஒருவருக்கும் மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து தோன்றிய ஹெலீனா என்ற பெண்ணுக்கும் பிறந்த கான்ஸ்டண்டைன் ரோமப் பேரரசனாக ஆவதற்காக மில்வியன் பாலத்தில் 312ம் ஆண்டு போர் செய்கிறான்.

அப்படி அவர் போர் செய்து கொண்டிருக்கும் போதே ரோமப் பேரரசு ரோமாபுரியைத் தலைநகராகக் கொண்ட மேற்குப் பேரரசு என்றும் கிரேக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்குப் பேரரசாகவும் பிளவு பட்டிருந்தது. மில்வியன் பாலத்தின் போரின் போது வானத்தில் தோன்றிய ஒரு சிலுவையையும் அதற்கடியில் ‘இந்த குறியால் வெல்வாயாக’ (in hoc signo vinces) என்ற வாசகத்தையும் கான்ஸ்டண்டைன் காண்கிறான். அதன்பிறகு தன் படைவீரர்களிடம் அவர்களுடைய கவசங்களில் சிலுவையைத் தீட்டிக் கொள்ளாச் சொல்கிறான்.

போரில் வெற்றி கிடைத்ததும் கிறித்துவக் கடவுள்தான் தனக்கு வெற்றியைத் தந்தார் என்று முடிவுக்கு வருகிறான். 313ல் மிலான் பிரகடனத்தின் வழியாக கிறித்துவத்தை ரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக அறிவிக்கிறான். அதன் பின்னர் 316க்குப் பிறகு கிழக்குப் பேரரசனாக இருந்த லிசினியஸைக் காண்ஸ்டண்டைன் தோற்கடித்த பிறகு கிறித்துவம் ரோமப் பேரரசு முழுமைக்குமே அதிகாரப்பூர்வ மதமாகிறது. 

அந்நாள் வரைக்கும் ரோமக் கடவுளர்களுக்குக் எதிரானதாகவும் தேச விரோதமாகவும் கிறித்துவம் கருதப்பட்டிருந்தது. ரோம, கிரேக்க மதக் கொள்கைப்படி பேரரசர்களே கடவுள் அம்சமாகக் கருதப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கென்று தனியாக cultus என்றழைக்கப்பட்ட வழிபாடும் நடந்து வந்தது. ஓரிறைக் கொள்கையாளர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்ட கிறித்துவர்கள் பேரரசர்களின் சிலைகளை வணங்க மறுத்த போது ரோமப் பேரரசின் நிர்வாக இயந்திரத்தால் கிறிற்றுவத்தை நிராகரிக்கும்படியும் பழைய மதத்தை மீண்டும் தழுவிக் கொள்ளும்படியும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். பல லட்சம் கிறித்துவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பொது அரங்குகளில் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

ஆனால் காண்ஸ்டண்டைன் மதம் மாறிய நொடியிலிருந்து நிலைமை தலைகீழாக மாறியது. கிறித்துவத்துக்குச் சலுகைகள் வழங்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய மதங்கள் தடைக்கு உள்ளாயின. பழைய கிரேக்க ரோமக் கடவுளர்களின் கோயில்கள் இடிக்கப்பட்டன. கிறித்துவை மறுத்த யூதர்களும் இன்னல்களுக்கு உள்ளானார்கள்.

330ம் ஆண்டு காண்ஸ்டண்டைன் கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடையே பாஸ்பரஸ் நதிக்கரையில் புதிதாக காண்ஸ்டண்டினோபில் (‘காண்ஸ்டண்டைனின் நகரம்’) என்று புதிய தலைநகரத்தை நிறுவினான்.

இதன்பிறகு கிறித்துவத்தின் தலைமை பீடம் பழைய ரோம் நகரமா அல்லது புதிய காண்ஸ்டண்டினோபிலா என்ற சர்ச்சை எழுந்தது. இதன் அரசியலுக்குள் நாம் புகத் தேவையில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பழைய ரோம் நகரத்தின் கிறித்துவத் தலைவர்களாக இருந்த ரோம் நகர பிஷப்புகள் (இன்று போப்பாண்டவர் என்று அழைக்கப்படுபவர்கள்) இயேசுவின் தலைமைச் சீடரான புனித பேதுருவின் வழி வந்த தாங்களே கிறித்துவத்தின் தலைவர்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதற்கு மாறாக கான்ஸ்டண்டினோபில் நகரத்தின் பிஷப்புகள் பேரரசர் இருக்கும் நகரத்தின் பிஷப்புகளுக்குத்தான் அந்த உரிமை என்று வாதாடினார்கள். 1453ல் காண்ஸ்டண்டினோபில் முஸ்லீம்களின் கைவசமானபோது இந்நகரத்தின் பிஷப்புகளின் அதிகாரம் குன்ற ஆரம்பித்தது. மேற்கில் போப்பாண்டவர்களின் அதிகாரம் 16ம் நூற்றாண்டில் நடந்த புரோடஸ்டண்டு புரட்சி, 18ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி, 19ம் நூற்றாண்டின் இத்தாலிய விடுதலைப் போராட்டம் வரை நீடித்தது. இன்றும் போப்பாண்டவர்களின் கையில் ரோம் நகரத்தின் ஒரு பகுதி வாத்திகன் என்ற பெயரில் சுதந்திர நாடாக இருக்கிறது.

ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே ரஷ்யா கிரேக்கத் துறவிகளான புனித கிரில் மற்றும் மெத்தோடியஸ் வழியாகக் கிறித்துவத்தை ஏற்றிருந்தது. காண்ஸ்டண்டினோபில் வீழ்ந்ததற்குப் பிறகு ரஷ்யப் பேரரசரின் தலைநகரமான மாஸ்கோ நகரமே கிறித்துவத்தின் புதிய தலைமையிடமான மூன்றாம் ரோமாபுரி என்று ரஷ்யர்கள் அறிவித்தார்கள். இத்தாலியில் இருக்கும் முதல் ரோமாபுரி பதவி மோகமுடைய ரோமாபுரி பிஷப்புகளின் கையில். இரண்டாம் ரோமாபுரியான காண்ஸ்டண்டினோபில் முஸ்லீம் படைகளின் கையில். மூன்றாம் ரோமாபுரி மாஸ்கோவில்.

1918ல் பதவி பறிபோகும் வரைக்கும் ரஷ்யப்.பேரரசர்களான ஜார்கள் காண்ஸ்டண்டினோபில் பேரரசர்களின் சின்னமான இரட்டைத் தலைக் கழுகுச் சின்னத்தையே தங்கள் சின்னமாகவும் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்கத் திருச்சபை என்று அழைக்கப்பட்ட லத்தீன் கிறித்துவத்துக்கும் ஆர்த்ததாக்ஸ் சபை என்று அழைக்கப்பட்ட கிரேக்க/ரஷ்ய திருச்சபைக்கும் இடையே சில முக்கியமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இவை அடிப்படையில் கிறித்துவ வேதாகமத்தின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடுகள். முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்த சுவிசேஷங்கள் மிகப் பிந்திய காலத்தில் (நான்காம் நூற்றாண்டில்தான்) லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அதுவரை ரோமப் பேரரசு முழுவதிலும் சாமானிய மக்களால் கிரேக்கம் பேசப்பட்டது. பேரரசு பிளவுபட்டுப் போக மேற்கில் லத்தீனும் கிழக்கில் கிரேக்க மொழியும் கோலோச்ச ஆரம்பித்தன. பரஸ்பர புரிதல் இல்லாமல் ஆனது.

கத்தோலிக்கச் சபை, ஆர்த்ததாக்ஸ் சபை ஆகிய இரண்டு திருச்சபைகளுக்கும் மனிதர்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கத்தான் இயேசு மனிதராக அவதரித்தார் என்று திடமாக நம்பின. ஆனால், பாவம் என்பது என்ன என்பதில்தான் இரண்டு சபைகளும் வேறுபட்டன.

கிரேக்க மொழியில் பாவத்திற்கு ‘hamartia’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நேரடி பொருள் ‘குறிக்கோளைத் தவறவிடுதல்’. தேவனின் சாயலாக (‘icon’) படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய உண்மை இயல்யினை மறந்து செய்யும் செயல்கள்தான் பாவங்கள் என்ற கருத்து கிரேக்கச் சபையில் வேரூன்றியது. கிரேக்க மத அறிஞர்களைப் பொறுத்தவரையில் பாவம் என்பது மனிதனை மனிதனாக இருக்க விடாமல் தடுக்கும் ஆதி நோய், அல்லது ஆதாம் ஏவாளின் ஆதி பாவத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயம். கடுமையான ஜுரமோ, ரத்தக் கொதிப்போ எப்படி ஒருவனை விரும்பியபடி செயல் செய்யவிடாமல் தடுக்குமோ அது போலவே பாவமும் மனிதர்களை நற்செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கிறது.

மாறாக, லத்தீன் மொழியில் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தபபட்ட transgressio  என்ற வார்த்தை ‘ (சட்டத்திற்கு எதிரான) அத்துமீறல்’ என்ற பொருள் கொடுத்தது. நோய் என்பது குணமாக்கப்பட வேண்டியது என்றால், அத்துமீறல் தண்டனைக்கு உள்ளாக வேண்டியது.

துர்கனேவ், தஸ்தவஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரது  நாவல்களில் வரும் ரஸ்கோலிகோவ் போன்ற தவறு செய்பவர்கள் (தஸ்தவ்யிஸ்கி, குற்றமும் தண்டனையும்) கண நேரத்தில் எழுந்து விஸ்வரூபம் எடுக்கும் உணர்ச்சிகளால் உந்தப்படுகிறவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

அத்துமீறல் என்றால் அதன் பின்னால் தெளிவான திட்டமிடலும், காரண காரியங்களும் இருக்கும். நோய் என்பது அத்தகைய தெளிவான படிகளில் நகராது. நோயில் அசைவுகளும், விளைவுகளும் துல்லியமில்லாதவை. ரஷ்யக் கதாசிரியர்களின் பார்வையில் பாவம் என்பது திட்டமிடப்பட்ட அத்துமீறல் இல்லை என்பதால், அவர்கள் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களும் அவ்வப்போது நற்குணங்களை வெளிப்படுத்தக் கூடியவர்கள்தான் என்றாலும் பாவம் என்னும் ஆதி காயத்தால் தாக்குண்டவர்களாக, தாங்களே புரிந்து கொள்ளா முடியாத ஆழமான உணர்வுந்துதல்களால் இயக்கப்பட்டவர்களாகக் குற்றங்களைச் செய்து தங்களையே அழித்துக் கொள்ளத் தலைப்படுகிறார்கள். தன்னை அறியாமல் தன்னையே அழித்துக் கொள்ளும் இச்செயலுக்குக் குறியீடாகப் பல ரஷ்ய நாவல்களில் மதுபோதை பயன்படுகிறது.

மேலும் அத்துமீறல் என்றால் ஏதோ ஒரு வகையில் அபராதம் கட்டியோ பிராயச்சித்தம் செய்தோ மீண்டும் பரிசுத்தமாகி விடலாம். நோய் அப்படியல்ல. நோயிலிருந்து குணமானாலும்கூட நோய்கண்ட மனிதனிடம் அந்தப் பலவீனம் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும்.

ஆங்கில, ஜெர்மானிய நாவல்களில் வரும் தலைமைக் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுகையில் ரஷ்ய நாவல்களில் வரும் தலைமைக் கதாபாத்திரங்கள் எப்போதும் முழுமையான விடுதலையோ, மீட்போ அடையாததற்கு இதுவும் ஒரு காரணம்.

மேற்கு இலக்கியம் மனிதனைப் பெரும்பாலும் அத்துமீறாதவன், அத்துமீறியவன், அத்துமீறி மீட்புக்குள்ளானவன் என்ற படிநிலைகளிலேயே பார்க்கையில், ரஷ்ய நாவல்கள் அவனைப் பாவம் என்னும் நோயில் விழ எப்போதும் சித்தமாய் இருப்பவன் என்றாலும் மனித குணத்தின் உன்னதங்களையும் வெளிப்படுத்தவும் கூடியவன் என்ற நிலையில்தான் பார்க்கின்றன.

ரஷ்ய நாவல்களில் வரும் ரஸ்கோல்நிகோவ், திமித்ரி காரமசோவ், அனதோல் குராகின் (போரும் அமைதியும்), ரோகோசின் (அசடன்), பாஸாரோவ் (தந்தைகளும் மகன்களும்) போன்ற பாத்திரங்களின் வசீகரத்துக்கு இந்தப் அடிப்படையே காரணமாக இருக்கிறது.

முழுமையாக மீட்படைய முடிய முடியாது என்றால் இத்தகைய கதாபாத்திரங்களுக்கு விடிவுதான் என்ன?

இயேசுவின் நிபந்தனையற்ற அன்போடு, சுய தியாகத்தோடும், பரிசுத்தத்தோடும் வரும் கதாபாத்திரங்களோடு ஏற்படும் தொடர்பால் இத்தகைய கதாபாத்திரங்கள் தங்கள் வீழ்ந்த நிலைமையை உணர்ந்து கொண்டு மீட்சியைத் தேடி நகர்கின்றன.

குற்றமும் தண்டனையிலும் சோனியா, அசடனின் மிஸ்கின்,  தந்தையரும் மகன்களிலும் ஆர்காடி மணந்து கொள்ளும் காத்யா ஆகிய கதாபாத்திரங்கள் இத்தகைய பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

உண்மையில் சோனியா, மிஸ்கின் போன்ற பாத்திரங்கள் மனிதர்களிடையே அவதரித்து அவர்களை நல்வழிப்படுத்தி ரட்சித்த இயேசுவவின் சாயலில் படைக்கப்பட்ட பாத்திரங்களே. ரஷ்ய நாவல்களில் இத்தகைய பாத்திரங்கள் எதிர்நோக்கிம் இன்னல்களும், ஏளனமும் நிராகரிப்புகளும் இயேசுவின் பாடுகளையும் அவர் பட்ட அவமானங்களையும் பிரதிபலிப்பவையே.

ரஷ்ய  நாவல்களின் நோக்கில் இயேசு தூரத்தில் அமர்ந்து தீர்ப்பெழுதும் நீதிபதியாக மட்டும் இல்லாமல் மனிதர்களிடையே உழன்று அவர்களது பலவீனங்களைத் தாங்கிக் கொள்ளும் மீட்பராகவே சித்தரிக்கப்படுகிறார்.

மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஆதிநோயான பாவத்தின் விளைவுகளுக்கும் இயேசு உலகுக்கு வழங்குவதாய் நம்பப்படும்  இந்த மீட்சிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களின் விமர்சனமாக எழுதப்பட்டவைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகத்தான ரஷ்ய நாவல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s