சங்கீத ஸீஸன் போல இது இலக்கிய விமர்சன ஸீசன்.
நிறைய பேர் விமர்சனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விமர்சனம் மட்டும் அர்த்தமுள்ளதாக, நேர்மையானதாக இருந்தால் இலக்கியம் எங்கேயோ போய்விடும் என்று சொல்கிறார்கள்.
இலக்கியக் குழுக்கள் விமர்சனத்துக்குக் கணிசமான நேரத்தை ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றன.
இதனால் என்ன பயன் என்பது நல்ல கேள்வி.
அப்படி இலக்கியத்தை உயர்த்தக்கூடிய விமர்சனமும் எப்படி இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.
முதலில், இலக்கியம் உயர்வதற்கு விமர்சனம் மட்டும் போதுமானது என்று நான் கருதவில்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு.
முதலாவதாக, தரமுள்ள இலக்கியம் உருவாவதற்கு விமர்சனம் மட்டும் போதாது.
எழுத்தாளரின் பரந்த இலக்கிய மற்றும் தத்துவம் சார்ந்த வாசிப்பு, மொழி வளம், ஒரு தனது சிறிய வட்டத்துக்குள் இருந்து வெளியேறி இலக்கிய “ரிஸ்கு” களை எடுக்கும் தைரியம், நல்ல எடிட்டரின் உதவி, அக்கறையுள்ள வாசகர்கள் ஆகிய அனைத்துமே நல்ல விமர்சனம் போலவே தரமான இலக்கியம் உருவாதற்கு அவசியம்.
படைப்பின் கடைசி வடிவத்தை மட்டுமே பெரும்பாலான விமர்சனங்கள் சீர்தூக்கிப் பார்க்கின்றன. அதாவது தேர்வுத்தாளைத் திருத்தும் ஆசிரியர் பாஸா ஃபெயிலா என்று சொல்வது போலத்தான் இது. தப்பு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று வேண்டுமானால் எழுத்தாளர் இதனால் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை நிவர்த்திச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது விமர்சனத்தால் ஆகாத காரியம். இது விமர்சனத்தின் வேலையும் அல்ல.
இலக்கியம் உயர்வதற்கெல்லாம் இது பத்தாது.
மேற்குலகிலும் ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் எழுத்தாளர்கள் எப்படி தமது படைப்புகளை எழுதினார்கள், அவர்களது படைப்புகளின் சமுதாய மற்றும், தத்துவார்த்த அடிப்படைகள் என்பதை விவரிக்கும் வகையில் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களும், அவர்கள் எழுதிய கடிதங்களும், படைப்புகளை அவர் திட்டமிடும்போது பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்களும் அச்சாகி வருகின்றன.
இவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் கட்டுரைகளும், நேர்காணல்களும் வெளிவருகின்றன எழுத்தை எடிட்டிங் எப்படிச் செய்வது என்று உதாரணங்களோடு புத்தகங்கள் வருகின்றன.
இவை தமிழில் இல்லவே இல்லை என்று சொல்ல வரவில்லை. விமர்சனத்தில் செலுத்தும் கவனத்தோடு இந்த விஷயங்களிலும் சிற்றிதழ்களும், இணைய இதழ்களும் கவனம் செலுத்தலாம். இலக்கியத் தரம் உயர்வதில் அக்கறையுள்ள இலக்கிய அமைப்புக்கள் இப்படிப்பட்ட விஷயங்களை முன்னெடுக்கலாம்.
முதலில், தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் இலக்கியங்களை முக்கியமாகக் கொண்டு அவர்களடைய வாழ்க்கைச் சரித்திரங்கள் எழுதப்படுவது பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தில் இதற்கு literary biography என்று பெயர்.
நேர்காணல்களில் எழுத்தாளர்களிடம் சமகால இலக்கியம் எப்படி இருக்கிறது, உங்கள் படைப்புகளின் நோக்கம் என்ன, சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றிய உங்கள் கருத்தென்ன என்று கேட்பது ஒரு வகை கேள்வி.
நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள், உங்கள் எழுத்தின் தத்துவ அடிப்படை என்ன, நீங்கள் எப்படி ஒரு வாக்கியத்தை அமைக்கிறீர்கள், எப்படி மெய்ப்புப் பார்க்கிறீர்கள் என்று கேட்பதும், அந்தப் பதில்களைக் கட்டுரைகளிலும், கலந்துரையாடல்களிலும் ஆராய்வதும் வேறு வகை கேள்வி.
முதல் வகை கேள்வி இலக்கியத்தை மதிப்பெண்களுக்குரிய பொருளாக மட்டும் பார்ப்பதாக என் கருத்து. இத்தகைய கேள்வியால் எழுத்தாளர் எல்லாம் அறிந்தவராகவும், எழுத்தாற்றல் என்பது சிலருக்கே வழங்கப்பட்ட அருள்கொடை போலவும் சித்தரிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
இரண்டாம் வகை கேள்வி இலக்கியத்தை உழைப்பினால் மேம்படுத்த வேண்டிய ஒரு வித்தையாக, craftஆக பார்க்கிறது.
முதலாம் வகை கேள்விகளே வேண்டாம் என்று சொல்லவில்லை. இரண்டாம் வகை கேள்விகளும் வேண்டும் என்கிறேன்.
இலக்கியத்தை முடிந்த முடிவாக இல்லாமல், மெருகேற்றப்படக்கூடிய வித்தையாகவும் craftஆகவும் பார்ப்பதுதான் எழுத்தாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நல்லது என்று ஹேரால்ட் ப்ளூம் சொன்னதாக ஞாபகம்.
