
இலக்கிய விமர்சனம் – இலக்கியத்துக்கு நிகர நஷ்டம் –
இலக்கிய விமர்சனங்களைப் பற்றி இன்றைய என் வலைப்பூ பதிவுக்குத் தனது கருத்தாக க. விக்னேஷ்வரன் எழுதியிருக்கிறார். சுட்டி இந்தப் பதிவுக்குக் கீழே தரப்பட்டுள்ளது.
ஆழமான, நிச்சயம் சிந்திக்க வைக்கும் பதிவு.
அவர் சொல்வதன் சாராம்சம்:
1. இலக்கிய விமர்சனங்கள் முன்புபோல் தீவிரமானவையாக இல்லை.
2. விமர்சனங்களை விமர்சனங்களாக ஏற்றுக் கொள்ளாமல் தனிமனித தாக்குதல்களாகச் சித்தரிப்பதால் நிறைய பேர் விமர்சனம் செய்யத் தயங்குகிறார்கள்.
3. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியும் அதில் ஏற்படுத்தித் தரும் மனித உறவுகளும் இந்தத் தயக்கத்தை மேலும் வலுவாக்கிறது.
4. இதனால் நிகர நஷ்டம் இலக்கியத்துக்கே.
இதில் எனக்கு அனுபவமே உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னால் வேறோர் இடத்தில் உள்ள கவிதைத் தொகுப்பைப் பற்றி என் கருத்தைப் பதியப் போக, சிங்கப்பூரிலும் சேர்த்து மற்ற சிலரும் வாலண்டியராக வந்து நான் அவர்களைத்தான் சொன்னேன் என்று திட்டிவிட்டுப் போனார்கள்.
அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். இனிமேல் மற்றவர் எண்ணம் புண்படுமே என்று பொதுப்படையாகப் பதிவுகளைப் போடக் கூடாது. பெயர்களையும் விவரங்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். We shall name names.
ஆனால் இது விக்னேஷ்வரன் கேட்ட கேள்விக்குப் பதிலாகாது. இலக்கியம் அநாதையாக இருக்கிறது என்கிறார்.
உண்மைதான். இலக்கிய விமர்சனமும் உரையாடலும் நலிவடையும்போது இலக்கியத் தரமும் நலிவடையத்தான் செய்யும்.
ஆனால் விமர்சனம் மட்டுமே இலக்கியத்தை வாழ வைத்துவிடும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கு வேறு காரணிகளும் அவசியம். அதைத்தான் காலையில் சொன்னேன்.
விமர்சனத்தைப் பொறுத்தவரை விக்னேஷ் சொல்வதற்கு ஒரே தீர்வுதான் உண்டு.
எது வந்தாலும் வராவிட்டாலும், ஒரு படைப்பைப் பற்றிய நேர்மையான கருத்தை சாதகங்களுக்கோ பாதகங்களுக்கோ அஞ்சாமல் பதிவிடுவது.
அதற்கு வரும் எதிர்வினைகளை மதிப்பு தந்து ஏற்றுக் கொள்வது.
எதிர்க்கருத்தில் சொல்லப்பட்டிருப்பதை ஆராய்வது. தவறிருந்தால் சுட்டிக் காட்டுவது. சரியென்றால் ஏற்றுக் கொள்வது.
இதனால் தனிமனித எதிர்ப்பு வராமல் இருக்குமா? நிச்சயம் வரத்தான் செய்யும்.
ஆனால் இலக்கியத்தின்மீது அக்கறையிருந்தால் நம் தலைமுறைக்கு நாம் என்ன விட்டுச் செல்கிறோம் என்பதன் மீது அக்கறை இருந்தால் இந்த எதிர்ப்புகளை கடந்து வரலாம்.
நல்ல விமர்சனத்துக்கு அக்கறைதான் அடிப்படை. அக்கறைதான் அடிநாதம்.
அக்கறையில்லாத விமர்சனங்கள் வெறும் ஆர்ப்பாட்டங்கள். அவை ஒன்று, வெறும் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட கத்திக்குத்துகளாக அமையும். அல்லது, வெறும் பாராட்டு மழையாகத் திகட்டும்.
நண்பர் விக்னேஷ் ஜெயமோகன் போன்றவர்களின் விமர்சனங்களைக் குறிப்பிடுகிறார்.
ஜெயமோகனின் பதிவுகளிலும் அவரைப் போன்றவர்களின் பதிவுகளிலும் நான் காண்பது சமகால இலக்கியத்தின் மீதான அக்கறையைத்தான்.
நமக்கும் தேவை அதே அக்கறைதான்.
இது ஒன்றுதான் இலக்கியம் அநாதையாகி விடாமலும் தடுக்கும்.
https://m.facebook.com/story.php?story_fbid=2765581420168464&id=100001499004580