எழுத்தின் ரகசியம்: ஏர்னஸ்ட் ஹெமிங்வேயுடனான நேர்காணல்கள்

டி பாரிஸ் ரிவ்யூவுவில் ஹெமிங்வேயுடன் ஜார்ஜ் பிளிம்ப்டன் நடத்திய நேர்காணலின் எனது மொழிபெயர்ப்பு. மே 1954 இதழில் வெளிவந்தது. பிளிம்ப்டன் அக்காலத்தில் புகழ்ப்பெற்ற அமெரிக்க நிருபராகத் திகழ்ந்தவர். விளையாட்டுப் போட்டிகள் பற்றிய வருணனைகளுக்காக பிளிம்ப்டனின் எழுத்துப் பிரபலமாக இருந்தது.

ஜார்ஜ் பிளிம்ப்டன்:  எழுதும் செயலில் ஈடுபட்டிருக்கும் நேரம் உங்களுக்குச் சந்தோஷம் தருகின்றதா?

ஹெமிங்வே: ரொம்பவும்.

ஜா.பி,: எழுதுவதில் செலவழிக்கும் நேரத்தைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா? எப்போதெல்லாம் எழுதுகிறீர்கள்? இதற்கென்று ஏதேனும் தினசரி அட்டவணை போட்டு அதன்படி எழுதுகிறீர்களா?

 ஹெ:  ஒரு புத்தகத்தையோ கதையையோ எழுதும்போது விடியற்காலையில் முதல் வேலையாக எழுது ஆரம்பிப்பேன். அந்த நேரத்தில் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். குளுமையாகவோ குளிராகவோ இருக்கும். எழுத வந்த பிறகு உங்களுக்குச் சூடேறும். எழுதியதை ஒரு தரம் படித்துப் பார்ப்பேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கும் இடத்தில்தான் முதல் நாள் என் எழுத்தை நிறுத்தியிருப்பேன் என்பதால் அதிலிருந்து தொடர்வேன். கற்பனை தீர்ந்துபோகிற வரைக்கும் எழுதக்கூடாது. அடுத்ததாக என்ன எழுத வேண்டும் என்று தெளிவாகத் தெரியும்போதே எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் மறுநாள் காலை எழுத ஆரம்பிக்கும்வரை மிச்சமிருக்கும் நாளை வேறு விஷயங்களில் கவனம் செலுத்தியபடி வாழ முயலவேண்டும். காலை ஆறு மணிக்கு ஆரம்பித்திருப்பேன். எழுதி முடிக்க நண்பகலோ, அதற்குக் கொஞ்சம் முன்னாலோ ஆகும் அந்த நாளைக்குரிய எழுத்தை நிறுத்தும்போது காலியாகியிருப்பேன். அதே சமயம் வெறுமையாக அல்ல, எல்லா நேரமும் நான் நிரம்பியபடி, காதலிக்கும் ஒருவரோடு உடலுறவைப் பூர்த்தி செய்யும் நேரத்தில் ஏற்படும் உணர்வைப்போல. அந்த நேரத்தில் எதுவும் உங்களைக் காயப்படுத்த முடியாது, எதுவும் நடக்காமல் இருப்பதுபோலவே தோன்றும், அடுத்த நாள் மீண்டும் எழுதத் தொடங்கும்வரை எதுவும் அர்த்தமுள்ளதாக இருக்காது. அடுத்த நாள்வரை காத்திருப்பதுதான் கடினமானது.

ஜா.பி.: டைப்ரைட்டரை விட்டு எழுந்தவுடன் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதை உங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்துவிட முடியுமா என்ன?

ஹெ: நிச்சயமாக. ஆனால் இதைச் செய்ய மனப்பயிற்சி தேவைப்படும். மனப்பயிற்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஜா.பி.: முந்தைய நாள் எழுதியதைப் படிக்கும்போதே திருத்தங்களைச் செய்வீர்களா? அல்லது படைப்பை மொத்தமாக முடித்த பிறகுதான் திருத்தங்கள் வருமா?

ஹெ: ஒவ்வொரு நாளும் எந்த இடத்தில் முடிக்கிருக்கிறேனோ அதுவரை திருத்தி எழுதுவேன். மொத்தமாக முடித்த பிறகு, இயல்பாகவே மீண்டும் ஒரு முறை படித்துப் பார்ப்பேன். எழுதியதை இன்னொருவர் தட்டச்சுச் செய்து சுத்தமான பிரதியாகத் தரும்போது மீண்டும் ஒரு முறை திருத்தம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். கடைசியாக அச்சுக்குப் போகும் முன்னால் ஃப்ரூப் பார்க்கும்போது. இந்த வாய்ப்புகளுக்கள் கிடைக்கிறதே என்று நன்றியோடு இருக்க வேண்டும்.

ஜா.பி.: எத்தனை முறைகள் திருத்தி எழுதுவீர்கள்?

ஹெ: அது திருத்தி எழுதும் பகுதியைப் பொருத்திருக்கிறது. ­A Farewell to Arms என்ற நாவலின் முடிவை முப்பத்தொன்பது முறை திருத்தி எழுதினேன்.

ஜா.பி.: அந்த முடிவுப் பகுதியில் அப்படியென்ன டெக்னிகலான பிரச்சனை இருந்தது? ஏன் இத்தனை முறைகள் எழுத வேண்டியதாயிற்று?

ஹெ: சரியான வார்த்தைகளுக்காக பிரயாசைப்பட வேண்டியதாக இருந்தது.

ஜா.பி : முந்தைய நாள் எழுதியதை மீண்டும் வாசிப்பதுதான் எழுதும் உற்சாகத்தைத் தருகிறதா?

ஹெ: எழுதியதைத் திரும்ப வாசிப்பது நிச்சயம் தொடர்ந்து எழுதியே ஆக வேண்டும் என்ற இடத்துக்கு உங்களைக் கூட்டிப் போகிறது. இதுவரை ஓரளவுக்கு எழுதிவிட்டோம் என்பது நம்பிக்கையைத் தருகிறது. எதிலாவது உற்சாகம் ஏற்பட்டு விடுகிறது.

ஜா.பி.: ஆனால் சில நேரங்களில் எழுதவே உற்சாகம் இருப்பதில்லை அல்லவா?

ஹெ: நிச்சயமாக. ஆனால் அடுத்ததாகக் கதையில் என்ன நடக்கப் போகிறது என்ற இடத்தில் நிறுத்தியிருப்பதால் தொடர்ந்து எழுத முடிகிறது. இப்படித் தடங்கல் இல்லாமல் தொடங்க முடிந்தால் கவலை இல்லை. உற்சாகம் வந்துவிடும்.

[நாளை தொடரும்]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s