ஆங்கிலச் சிறுகதைகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களில் பெரும்பாலோர் எர்னஸ்ட் ஹெமிங்வேயைக் கொண்டாடுவார்கள்.
கதை கட்டமைப்பில், காட்சி விவரிப்பில், சொற்களின் சிக்கனத்தில் ஹெமிங்வேயின் கதைகள் சிறுகதை இலக்கியத்தின் உச்சமாகக் கருதப்படுகின்றன.
‘ஹெமிங்வே பாணி’ என்று சொல்லும் அளவுக்கு ஆங்கிலத்தில் ஒரு எழுத்து நடையை ஹெமிங்வே உருவாக்கினார்.
(1)கதாபாத்திரங்களின் மனதில் எழும் உணர்ச்சிகளை உள்ளிருந்து பார்ப்பதுபோல் எழுத்தாளன் விவரிக்காமல் கதாபாத்திரங்களின் செயல்கள், முகபாவனைகள் மூலமாகவே அவற்றை விவரிப்பது,
(2) இரண்டு அசைகளுக்குமேல் நீளமாக உள்ள வார்த்தைகளை அல்லது கடினமான, பிறமொழி வார்த்தைகளைக் கதைகளில் தவிர்ப்பது;
(3) சொல் அலங்காரங்களை அறவே தவிர்த்தல்;
(4) நான்கைந்து வார்த்தைகளுக்கு மேல் போகாத வாக்கியங்கள்;
(5) அப்பட்டமான உணர்ச்சி, மாய யதார்த்த அல்லது ஆன்மீகக் கூறுகள் எதையும் கதைக்குள் அனுமதிக்காமல் இயல்பான தினசரி நிகழ்ச்சிகளின் விவரிப்பு வழியாகவே கதையில் ஆழமான உண்மைகளைப் பேசுவது
என்பவை ஹெமிங்வே பாணி எழுத்தின் முக்கிய ஐந்து அம்சங்கள்.
இந்த எழுத்துப் பாணியைச் சில விமர்சகர்கள் “பனிக்கட்டி கோட்பாடு” என்று அழைக்கிறார்கள். பனிக்கட்டியின் மிகச் சிறு பகுதியே தண்ணீருக்கு மேல் தெரியும். அதன் மிகப் பெரும் பகுதி தண்ணீருக்குக் கீழேதான் இருக்கும்.
அதுபோல் ஹெமிங்வேயின் கதைகளில் வெளிப்படையாகச் சொல்லப்படும் விவரிப்புக்கள் மிக சொற்பமானவை. அவற்றின் வழியாகச் சொல்லப்படும் உண்மைகளும், வலியும் மிகப் பெரியவை என்பது இவர்கள் கருத்து.
ஆரம்ப காலத்தில் செய்தித்தாள் நிருபராக Kansas City Star என்ற பத்திரிகையில் ஹெமிங்வே வேலை செய்த நேரத்தில்தான் அவர் தனது எழுத்து பாணியை உருவாக்கிக் கொண்டார். இது தொழில் நிமித்தமாக அவருக்கு ஏற்பட்ட தேவை.
நீட்டி முழக்காமல், அலங்காரங்கள் இல்லாத மிகச் சில எளிய வார்த்தைகளில் நிருபர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாசகர்களிடம் கொண்டு போக வேண்டும் என்று பத்திரிகை ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
அதே சமயம், சொல்லப்படும் விஷயத்தின் முழுமையான விவரங்களும் வாசகர்களைச் சென்று சேர வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஐந்து டபிள்யூக்களும் (Ws), ஒரு எச்-உம் (H) என்பார்கள்.
ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதும் நிருபர் எத்தனை குறைவான சொற்களில் முடியுமோ அத்தனைக் குறைவான சொற்களில் யார், எது, எங்கே, எப்போது, ஏன், எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். Who, what, where, when, why, how.
ஹெமிங்வேயின் எழுத்தில் கடைசிவரை அவருடைய பத்திரிகை பயிற்சி துணை வந்ததை அவருடைய ‘கிழவனும் கடலும்’ குறுநாவலின் முதல் வாக்கியத்திலேயே காணலாம்.
அந்த ஒற்றை வாக்கியத்தில் கிழவன் கடலில் எங்கிருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், அவன் படகு எப்படிப்பட்டது, கதை தொடங்கும்போது அவனுடைய நிலை என்ன என்பதை எல்லாம் ஹெமிங்வே தெளிவாகச் சொல்லி விடுகிறார்.
ஹெமிங்வேயின் பாணியில் பின்னாளில் வந்த பலரும் எழுத முயன்றாலும்கூட அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் சிலரே. அவர்களில் முக்கியமானவஎ ரேமண்ட் கார்வர்.
ஹெமிங்வேயின் பாணியைப் பிடிக்காத விமர்சகர்கள் அதை ‘பத்திரிகை பாணி’ அல்லது newspaperese என்று விமர்சித்தார்கள்.
ஆனால் ஹெமிங்வேயின் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருந்த வில்லியம் ஃபால்க்னர் போன்றவர்களின் சொல் அலங்காரங்கள் மிகுந்த, மிக நீண்ட வாக்கியங்களோடு அமைந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படிப்பவர்களுக்கும் ஹெமிங்வே பாணி எழுத்தின் வசீகரம் புரியும்.
ஹெமிங்வே எழுதிய சிறுகதைகளில் ‘The Short, Happy Life of Francis Maccomber’, ‘Indian Camp’, ‘Fifty Grand”, ‘The Snows of Kilimanjaro’, ‘An Alpine Idyll’, ‘The Battler’, ‘Up in Michigan’, ‘Big, Two Hearted River’ மிகச் சிறந்தவை.
இவற்றில் 10 கதைகளைக் குறிப்புகளோடு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
பவாவின் டொமினிக் ஆங்கிலத்தில் வந்த பிறகு ஏப்ரலில் இந்தத் தொகுப்பு வெளிவரும். பதிப்பாளர் சிக்கும் பட்சத்தில்.
