
எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் இருக்கட்டும். மொழிபெயர்ப்பு என்பது உயரத்தின் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின்மேல் நடப்பதற்குச் சமானம்.
நடக்கப்போகும் மிச்ச கயிற்றையும் (மூலப் படைப்பின் முழுமை) பார்க்க வேண்டும், எடுத்து வைக்க வேண்டிய அடுத்த ஓரடியையும் (அந்தக் கணத்தில் மொழிபெயர்க்கும் சொல் அல்லது வாக்கியம்) கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஓரக்கண்ணில் தெரியும் தரையும் (மொழிபெயர்ப்பு மொத்தமும்) பயமுறுத்தும்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தடுமாற்றம் நிகழ்ந்தாலும் மொழிபெயர்ப்பு அதோகதிதான்.
பைபிளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த புனித ஜெரோம் என்பவரைப் பற்றி ஒரு கதை உள்ளது. பைபிளின் புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிசேஷ வரிகளை மொழிபெயர்க்கும் நேரத்தில் கிரேக்க வார்த்தையான “metanoite” என்ற வார்த்தையை அவர் மொழிபெயர்க்க வேண்டியதிருந்தது. இந்த வார்த்தைக்கு “மனத்தை (முழுவதுமாகப் பாவத்திலிருந்து) திருப்பிக் கொள்ளுங்கள்” என்று அர்த்தம். இந்த வார்த்தை எபிரேய மொழி வார்த்தையான ” teshuvah” என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு. எபிரேய வார்த்தையின் பொருளை அப்படியே கிரேக்க மொழியில் தருவது.
ஆனால் ஜெரோம் லத்தீன் மொழியில் ஜெரோம் இந்த metanoite என்ற வார்த்தையை மொழிபெயர்த்தபோது அதன் இடத்தில் “poenitentiate” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். Poenitentiate என்ற வார்த்தை “பாவத்திலிருந்து திரும்பும் வகையில் உடலை வருத்திக் கொள்ளுங்கள்” என்ற பொருள் தரக்கூடியது. இன்றுவரை ஸ்பானிய, இத்தாலிய மொழிகளில் pena என்ற வார்த்தை வலியைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் இந்த வார்த்தைதான் pain ஆனது. பழைய ஆங்கலத்தில் penitentiary என்றால் சிறைச்சாலை.
மனத்தால் இறைவனிடம் திரும்புதல் என்ற தத்துவம் உடலை வருத்திக் கொள்ளுதல் என்று பின்னாளில் ஆனதற்கு இந்த மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். ஜெரோம் மிகப் பெரிய அறிஞர். உண்மையான பக்தர். ஆனால் மூலப்படைப்பின் மொத்த செய்தியிடமிருந்து ஒரு சின்ன நொடி மொழிபெயர்ப்புத் தடுமாறியதால் ஏற்பட்ட விளைவு இது.
லதா அருணாச்சலம் தனது மொழிபெயர்ப்புகளில் இந்தத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்று மிகக் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது.
அண்மையில் விருது பெற்ற “தீக்கொன்றை மலரும் பருவம்” என்ற அவருடைய மொழிபெயர்ப்பு நூலையும், கனலியில் வெளியான ரெபெக்கா லீயின் “உயரே ஒரு நிலம்” என்ற மொழிபெயர்ப்புக் கதையையும் வாசித்தேன். ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கில் மேற்கூறிய மொழிபெயர்ப்புகளையும் அவருடைய மற்ற மொழிபெயர்ப்புகளையும் அவற்றின் மூலப் படைப்புகளையும் ஒரு முறை வாசித்தேன்.
ஆங்கிலத்தில் cadence என்பார்கள். ஒரு படைப்பிலுள்ள மொழியின் சந்தம் அல்லது அது செல்லும் வேகம் எனலாம். இது எழுத்தாளருக்கு எழுத்தாளர் வேறுபடும். பயன்படுத்தும் சொற்களையும், வாக்கியங்களின் அமைப்பைத் தாண்டியும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக இருப்பது இந்த cadenceதான்.
சொற்களின் மொழிபெயர்ப்புத் துல்லியத்தை மீறியும் லதா தனது மொழிபெயர்ப்புகளில் மூலக்கதையின் இந்த cadenceஐத் தமிழின் தன்மைக்குப்.பங்கம் ஏற்படுத்தாமல் கொண்டு வருவதில் வெற்றி பெறுகிறார்.
இது சாதாரண விஷயமல்ல. ஆங்கில cadenceஐ அப்படியே மொழிபெயர்ப்புக்குள் கொண்டு வந்திருந்தால் படைப்பு தமிழ் வாசகருக்கு அந்நியப்பட்டுப் போயிருக்கும். மொழிபெயர்ப்பு என்று அப்பட்டமாகத் தெரியும்படி செயற்கைத்தனமாகவும் தோன்றியிருக்கும்.
அதே சமயம், முழுக்கத் தமிழ் cadenceஇல் மொழிபெயர்த்தால் இந்தக் கதையை எழுதியது யார் நம்மூர்க்காரரா என்று வாசகர்கள் கேட்டிருப்பார்கள்.
லதாவின் வெற்றி இந்த இரண்டு அபாயங்களிலும் சிக்காமல் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் அவர் வெற்றி அடங்கியிருக்கிறது.
அவருடைய அடுத்த பலம் மூலக்கதையிலுள்ள உரையாடல்களை வெகு துல்லியமாகத் தமிழுக்குக் கொண்டு வரும் அவரது ஆற்றல். இது நுணுக்கமான காரியம். மிகப் பல மொழிப்பெயர்ப்பாளர்கள் சறுக்கும் இடம்.
லதா அருணாச்சலம் தமிழில் குறிப்பிடத்தக்க மொழிப்பெயர்ப்பாளராக மேலும் வளர்வார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
ஆனால் இதற்கு அவர் மொழிபெயர்ப்பதற்காகத் தொடர்ந்து சிறந்த இலக்கியப் படைப்புக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரெபெக்கா லீயின் கதை ஓரளவுக்கு நல்ல கதைதான். ஆனால் மொழிப்பெயர்த்தே ஆக வேண்டிய கதை என்று சொல்ல மாட்டேன்.
ஒரு படைப்பு மொழிபெயர்க்கப்பட்டதால் மட்டுமே அது சிறந்த படைப்பு ஆகிவிடாதல்லவா?