
கெ ஃபெய்-யின் சீன நாவலை மொழிபெயர்த்து முடிந்தவுடன் பதிப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
சீன இலக்கியத்தின் அடிப்படை வேர்களைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. சீனச் சிந்தனை மரபில் முப்பெரும் நகர்வுகள் இருப்பதாகப் பேசிக் கொண்டோம்.
முதலாவது, தாவோயிச மரபு. தாவோ என்ற சீன வார்த்தைக்கு வழி என்று பொருள். வழி என்பது ‘செல்ல வேண்டிய பாதை’, ‘கோட்பாடுகள்’ என்று பொருள் தரும் என்றாலும் அந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் அதுவல்ல.
பிரபஞ்ச சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்கள் ஒன்றோடொன்றும், மனிதர்களின் உடல்களோடும் உறவு கொள்ளும் முறைகளைத் தீர்க்கமாக ஆராய்ந்து அறிந்து அந்த முறைகளின் வழியாகவே வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தாவோ சித்தாந்தத்தின் அடிப்படை.
பிரபஞ்ச நகர்வுகள் – அல்லது இயற்கையின் செயல்களுக்கு – எதிராக அல்லாமல் இயைந்தே வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது முழுமையான வாழ்வுக்குத் திறவுகோலாகக் கருதப்பட்டது.
தாவோ மதத்தின் தோற்றத்தை விளக்கும் சுவாரசியமான கதை உண்டு. கிறிஸ்துவுக்கு சுமார் 3,300 ஆண்டுகள் முன்னால் மஞ்சள் நதியின் சமவெளியில் ஹுவாய் யாங் என்ற முதல் சீனத் தலைநகரை அமைத்த ஃப்பூ ஹ்சி என்ற மன்னன் தாவோவின் அடிப்படை சித்தாந்தங்களைக் கண்டுபிடித்ததாக சீனர்களின் பழைய வரலாறு சொல்கிறது.
ஃப்பூ ஹ்சி-க்கு உடலின் மேல்பாகம் மனிதர்களைப் போலவும், கீழ்ப் பகுதி ராட்சசப் பாம்பைப் போலவும் இருக்குமாம். ஒரு நாள், வானத்தை உற்றுப் பார்த்த ஃப்பூ ஹ்சி பிரபஞ்சத்தின் நகர்வுகளையும் அவை உலகத்தின் மீதும் மனிதர்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களையும் உன்னிப்பாக கண்டு அறிந்தானாம். ஃப்பூ ஹ்சியின் மனைவி நூ வா ஆதி சீனர்களை பெரும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றினாளாம். [கிறித்துவர்களின் வேதத்தில் வரும் நோவா என்ற கிழவனும் இப்படித்தான் பெருவெள்ளத்திலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றினான் என்ற கதை உள்ளது.]
ஃப்பூ ஹ்சி கண்டறிந்த பிரபஞ்ச ரகசியமான தாவோவின் வழியாகத்தான் ஆதி சீனர்களின் அரசியல், விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், ஜோதிடம் ஆகியவை அமைந்திருந்தன.
தாவோ மதச் சித்தாந்தங்களைப் பின்னர் வந்த லாவோ த்ஸு, சுவாங் த்சு போன்றவர்கள் வளர்த்தார்கள். இவர்களும் ஹுவாய் யாங் பெரு வெளியில் வாழ்ந்தவர்கள்.
லாவோ த்சுவுக்குச் சற்றுப் பின்னால் வந்த கன்ஃபூசியஸ் மனிதர்கள் ஒருவரோடொருவர் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும், சமூகம் அரசியல் அமைப்புகளோடு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் எடுத்துச் சொன்னார். மனிதர்கள் சமூகத்தோடு வைத்துக் கொள்ள வேண்டிய சீரிய உறவுகளின் பிரதிபலிப்பாகக் கன்ஃபூசியஸின் போதனைகளில் முன்னோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன.
பிரபஞ்சத்தோடும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடும் மற்றும் நின்று போயிருந்த சீனச் சிந்தனை மரபு கன்ஃபூசியஸின் போதனைகளால் பெரும் சமுதாய வாழ்வைப் பேசும் நிலைக்கு விரிவடைந்தது.
ஆயினும் தாவோ சித்தாந்தமும், கன்ஃபூசியஸின் போதனைகளும் மனிதனின் புற உலகை மட்டுமே பேசின. மனிதனின் உள்ளார்ந்த மனம் தொடர்பான வாழ்க்கையையும் மனதால் ஏற்படும் சிக்கல்களைத் தாண்டிப் போகும் வழிகளையும் அவை பேசவில்லை.
இந்தியாவிலிருந்து சாக்கிய புத்தரின் போதனைகள் சீனாவைச் சென்று அடைந்தபோது சீனர்கள் தாவோவோடும், கன்ஃபூசியஸின் போதனைகளோடும் பௌத்தத்தையும் தங்களது சிந்தனை மரபின் மூன்றாவது இழையாக ஏற்றுக் கொண்டார்கள்.
வலுவான ஓரிறைக் கொள்கை கொண்ட பல மதங்களைக் கொண்ட சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் சீனாவில் தாவோ, கன்ஃபூசியஸ் சித்தாந்தம், பௌத்தம் ஆகியவை ஒன்றோடொன்று சுமுகமான உறவையே கொண்டிருந்தன.
பின்னாளில் கிறித்தவம், மார்க்சியம் போன்ற மிக வலிமையான சிந்தனை மரபுகள் சீனாவுக்குள் வந்த போதும் சீன சமுதாயத்தில் தாவோ, கன்ஃபூசியஸ், பௌத்தம் கலந்த இந்தச் சிந்தனை மரபின் ஆணிவேரை அவற்றால் அசைக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.
இதற்குக் காரணம் இம்மூன்று சிந்தனைகளின் பிணைப்பும் மனிதர்களின் உடல், சமூக உறவுகள், மனம் ஆகிய முப்பெரும் சிக்கல்களுக்கு ஒரு சேர முழுமையான பதில்களைத் தந்ததுதான் என்றாலும் மிகையாகாது.