செஸ்லோஃப் மிலோஷ் – வரலாற்றில் கவிஞன்

செஸ்லோஃப் மிலோஷ் போலந்து நாட்டில் பெரும் கவிஞராக அறியப்பட்டபோதும் அவர் வாழ்க்கை ஓயாத பயணங்களால் நிரம்பியதாக இருந்தது.

1911ல் லித்துவேனியாவில் பிறந்த மிலோஷ் அங்கு நிலவிய அரசியல், சமூக குழப்பங்களால் சிறு வயதிலேயே போலந்துக்குக் குடும்பத்துடன் குடிபெயர்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் போலந்தின் கம்யூனிஸ அரசாங்கத்தின் ஊழியரானவர் பிரான்சுக்குத் தூதரக அதிகாரியாக அனுப்பப்படுகிறார். பிரான்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே அந்நாட்டில் அரசியல் அடைக்கலம் தேடிக் கொண்டவர் அங்கு சில காலம் வேலை பார்த்த பிறகு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து 2004ல் அவர் மரணமடையும்வரை அமெரிக்காவிலேயே வாழ்கிறார்.

மிலோஷின் பயணங்கள் வெறும் இட மாறுதல்களாக மட்டுமில்லாமல் பலவீனமான ஜனநாயக அரசாங்கம், சர்வாதிகாரம், கட்டவிழ்க்கப்பட்ட பணநாயகம் என்ற தத்துவ வெளிகளின் ஊடான பயணங்களாகவும் அமைந்தன. அதே சமயம், அரசியல் பொருளாதார ரீதியிலும் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் சோர்ந்துபோன, சீர்குலைந்த நில வெளிகளுக்கு ஊடே நடந்த பயணங்களுமாகும்.

மிலோஷின் கவிதைகள் மனிதர்களின் உள்ளார்ந்த அற உலகின்மீது வரலாற்றுப் பூர்வமான சீர்குலைவுகள் நிகழ்த்தும் மாற்றங்களைப் பதிவு செய்கின்றன. 

மிலோஷின் கருத்துப்படி மனிதர்களின் அற உணர்வு புற உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்நியமானதல்ல. புற உலகில் நடக்கும் சீர்கேடுகளோடு மனிதர்களின் அற உணர்வுக்கும் மனிதர்களின் அடிப்படை அடையாளத்துக்குமேகூட பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு.

கவிஞன் என்பவன் புற உலகின் சீர்கேடுகளுக்கு எதிராக மனிதன் நடத்தும் அறவயமான போராட்டத்திற்குச் சாட்சியாகவும் அரசியல் பொருளாதார இடிபாடுகளை மீறியும் மீந்திருக்கும் மனிதர்களின் ஆன்மீக உணர்வுகளின் பிரதியாகவும் இருக்கிறான்.

1932ல் அவருடைய 21வது வயதில் அவர் வெளியிட்ட ‘பனியில் உறைந்த காலத்தின் கவிதைகள்’ என்ற தொகுப்பின் தலைப்பும், 1953ல் அவர் வெளியிட்ட ‘சிறைப்பட்ட புத்தி’ என்ற தொகுப்பின் தலைப்பும் புற உலக மாற்றங்களால் மனிதனின் அடிப்படை அற உணர்வுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களையே பிரதிபலிக்கின்றன.

இரண்டாவது தொகுப்பைப் பற்றிக் கருத்துரைத்த விமர்சகர் கார்ல் ஜாஸ்பர்ஸ் அதில் சேர்க்கப்பட்ட கவிதைகளை ‘ பேரழிவு ஏற்படும் என்ற ஓயாத மிரட்டலுக்கும் வரலாற்றின் நகர்வுகளின்மீது அத்தியாவசியமான நம்பிக்கைக்கும் இடையே சிக்கிய மனிதர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் அதி முக்கியமாக வரலாற்று ஆவணம்’ என்கிறார்.

மிலோஷ் தான் வசித்த இடங்களையெல்லாம் இவ்வெளிப்புறத் தாக்கங்களின் குறியீடுகளாகக் காண்கிறார். அவர் கவிதைகள் முழுக்கக் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி எழுதப்பட்டவையாக இருக்கின்றன. தனது அமெரிக்க வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளவும் மிலோஷுக்குக் கவிதையே உதவுகிறது.

அமெரிக்காவுக்கு வந்த பிறகு அவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘சான் பிரான்ஸிஸ்கோ பே தரிசனங்கள்’.

வெளிப்புறச் சீர்குலைவுகளுக்கு ஊடாக மிலோஷ் நடத்திய பயணங்களின் இடையிலும் அவரது சுய அடையாளத்தையும் அற உணர்வையும் தக்க வைத்துக் கொள்ள அவருக்குக் கவிதையே உதவுகிறது.

‘எழுபதில் கவிஞன்’ என்ற நூலிலுள்ள குறிப்பில் மிலோஷ் ஒழுங்கும், சந்தமும், வடிவக் கட்டமைப்பும் மனிதர்களுக்குள் உள்ள பெயரிடப்படாத தேவை ஒன்றை பூர்த்தி செய்வதாகச் சொல்கிறார். இவை மூன்றுமே மனிதர்களைப் பயமுறுத்தும் குழப்பத்துக்கும் வெறுமைக்கும் எதிரான அரண்களாக இருக்கின்றன.

வரலாற்று நிகழ்வுகள் மனிதனின் அற வாழ்வைப் பலமாகப் பாதிக்கின்றன. அவன் இயல்பை மாற்றவும் செய்கின்றன. வரலாறு நமக்கு முன்னால் கொண்டு வரக்கூடிய பேரழிவின் காலங்களிலும், சீர்குலைவுகளுக்கிடையிலும் ஒழுங்கும், சந்தமும் வடிவக் கட்டமைப்புமே மனிதர்களை உள்ளார்ந்த வாழ்வையும் சுய மதிப்பையும் காப்பாறக்கூடியவை என்று மிலோஷ் கருதுகிறார்.

இவை மூன்றும் கவிதையின் மிகச் சிறப்பான அம்சங்கள்.

தனது ‘போலந்து இலக்கிய வரலாறு’ என்ற நூலில் மிலோஷே சொல்வதுபோல் “கவிதை எழுதுவதே (மனிதர்கள் மீதும் அவர்களின் அற உணர்வின்மீதும்) நம்பிக்கையை வைக்கும் செயலாகும்”.

மிலோஷுக்கு 1980 இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s