
சார்லஸ் புக்கோவ்ஸ்கி மிகச் சிறப்பான கவிதைகளை எழுதியிருக்கிறார். மிக மிக மோசமான கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.
இந்தக் கருத்து அவருடைய நாவல்களுக்கு ஓரளவுக்குப் பொருந்தும். அவர் சிறுகதைகளுக்கு மிகவும் பொருந்தும்.
மோசமான கவிதைகளுக்கு ஒரு காரணம் அவற்றில் பலவற்றைப் புக்கோவ்ஸ்கி குடி போதையில் எழுதியது. இதை அவரே சொல்லியிருக்கிறார்.
ஆனால் குடிபோதையை அவருடைய மிகச் சிறப்பான கவிதைகளுக்குக் காரணமாகக் காட்டமுடியாது.
புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் (1) உரையாடல் பாணியில், அன்றாட மொழியில் அமைந்துள்ளதையும், (2) உடலுறவு, மதுபானக் கொண்டாட்டங்கள், நகர வாழ்வின் அவலங்களை தனிமைகளை மையமாகக் கொண்டுள்ளதையும், (3) நகர வாழ்வின் சூழலில் இருந்தே அவர் கவிதைகள் சேர்த்துக் கொள்ளப்படும் படிமங்களையும் குறியீடுகளையும் கொண்டு அவர் கவிதைகள் கொண்டாடப்படுகின்றன.
ஆனால் புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் உன்னதமானவை என்று கொண்டாடப் பயன்படும் இதே மூன்று கூறுகள் அவர் சிறுகதைகளிலும், நாவல்களிலும் உள்ளன.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால், புக்கோவ்ஸ்கியின் கவிதையில் உள்ள உரையாடல், மொழிநடையாலோ, நகரச் சூழலிலிருந்து எழும் பிரச்சனைகள், படிமங்களாலோ அவர் கவிதைகளின் கவிதைத்தன்மை இல்லை என்பது என் கணிப்பு.
அப்படி இருந்திருந்தால் இரண்டு விஷயங்கள் சாத்தியமாகி இருக்கும். ஒன்று, புக்கோவ்ஸ்கியின் உரைநடைகளில் பலவற்றையும் கவிதைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும். இரண்டு, பாப்புலர் கவிஞர்களின் கவிதைகளின் மூலக் கூறுகளை மட்டும் பிரித்துக் கவிதை எழுதும் மாதிரிக் கவிஞர்களின் படைப்பு அனைத்தையுமே நல்ல கவிஞர்களாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக வேண்டியதிருக்கும்.
புக்கோவ்ஸ்கியின் கவிதைகளில் உள்ள இரண்டு வேறு முக்கியக் கூறுகளால்தான் அவற்றில் ‘கவிதை நிகழ்கிறது’ எனக் கூற வாய்ப்புண்டு.
புக்கோவ்ஸ்கியின் கவிதைகளுக்கும் அவை பிறந்த சூழலுக்கும், இடத்துக்கும் இடையே உள்ள மிகச் சத்தியமான, தீவிரமான பிணைப்பு குறிப்பிடத்தக்கது. புக்கோவ்ஸ்கியின் கவிதைகளைப் பற்றி என்ன சொல்ல முடியுமோ முடியாதோ, மொழியாலும், படிமத்தாலும், கருப்பொருளாலும் அவை அனைத்தும் புக்கோவ்ஸ்கியின் அமெரிக்க உழைக்கும் வர்க்கச் சூழலையும் ஆத்மார்த்தத்தையும்விட்டுக் கொஞ்சமும் விலகாதவை.
கவிதைகள் அவற்றின் சூழலுக்குச் சத்தியமாக இருப்பதில் அப்படி என்ன பிரமாதம் என்று கேட்பவர்கள் இருக்கலாம். இப்படிக் கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கவிதைத் தொகுப்புக்களைப் பரவலாக வாசிக்காதவர்களுக்கே இத்தகைய மகிழ்ச்சிகள் கைகூடும்.
புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் அவற்றின் சூழலுக்கும் இடத்துக்கும் மிக உண்மையானவை.
ஆனால் இதனால்கூட புக்கோவ்ஸ்கியின் கவிதைகளுக்குக் ‘கவிதைத்துவம்’ சித்திப்பதாக நான் எண்ணவில்லை.
மிக மோசமான சூழ்நிலைகளைச் சித்தரிக்கும் அதே வேளையில் புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் ஒவ்வொன்றும் அன்றாட வாழ்க்கையின் அல்பத்தனத்தினிடையிலும் மனிதர்களை மீட்கக் கூடிய சிறு சிறு கூறுகளை எடுத்துக் காட்டுவதில் அவற்றின் வெற்றி அமைந்துள்ளது.
புக்கோவ்ஸ்கியின் கவிதைகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக நான் கருதும் “340 டாலர் குதிரையும், 100 டாலர் விபச்சாரியும்” என்ற சற்று நீண்ட கவிதை இந்தக் கருத்துக்கு உதாரணமாக அமைகிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் மட்டும் கீழே:
“அந்த இரவு என்னால் அவளை அழிக்க முடியவில்லை
ஊற்றுகள் பொறிகளை உமிழ்ந்து
அவை சுவர்களை மோதிய போதும்
பின்பு அவள் உள்ளாடை மட்டும் அணிந்தபடி அங்கு அமர்ந்திருந்தாள்
விஸ்கி குடித்துக்கொண்டு
உன்னைப்போன்ற ஒருவன்
இந்த மாதிரி மோசமான இடத்தில்
என்ன செய்கிறாய் என்று கேட்டாள்
நான் சொன்னேன்
நான் ஒரு கவிஞன்
அவள் அழகிய தலையைப் பின்னால் சாய்த்துச் சிரித்தாள்
நீ? நீ…கவிஞனா?
நீ சொல்வது சரிதான், என்றேன். நீ சொல்வது சரிதான்.
ஆனால் என் பார்வைக்கு அழகானவளாகத்தான் இருந்தாள்.
அழகானவள்தான்.
இந்தக் கவிதையை எழுதிய அவலட்சணமான குதிரையின்
புண்ணியத்தால்.”
[சார்லஸ் புக்கோவ்ஸ்கி, “340 டாலர் குதிரையும், 100 டாலர் விபச்சாரியும்”]
அன்றாட வாழ்க்கையின் அல்பத்தனங்களை மீறியும் மனிதனின் மீட்சி என்பது ஒரு வகையான பார்வை. மிகச் சாதாரணமானதுகூட.
அன்றாட வாழ்க்கையின் அல்பத்தனங்களுக்கு ஊடாக மீட்சி என்பது மாபெரும் தத்துவ தரிசனம்.
இந்தத் தத்தவத் தரிசனத்தால் புக்கோவ்ஸ்கியின் மோசமான கவிதைகள்கூட வர்த்தக ரீதியிலான செக்ஸைப் பேசினாலும், மதுவைப் பேசினாலும், மனிதக் குப்பைகளைப் பேசினாலும் ஒளிமிகுந்தவையாக இருக்கின்றன.
இந்தத் தரிசனத்தையும் பார்வையையும் கவிதைக்குத் தந்தது புக்கோவ்ஸ்கியின் மிகப் பெரிய பங்களிப்பு. தீர்க்கதரிசனமும்கூட.
இந்த வகையில் புக்கோவ்ஸ்கி நல்ல கவிஞன்தான்.