இடிக்கப்பட வேண்டிய பழைய ஹோட்டல் கட்டடம். அதற்குள் இருக்கும் அமானுஷ்யங்கள். மாந்திரீக விஷயங்களிலும் அறிவியலிலும் நல்ல பரிச்சயமுள்ள கதாநாயகன். அவனைக் காதலிக்கும் (அவன் மனைவியையும் சேர்த்து) கதையோடு தொடர்புடைய பல பெண்கள்.
கதாநாயகன் தன் கதையைத் தானே சொல்வது போன்ற கதையமைப்பு.
பிராம் ஸ்டோக்கர், மேரி ஷெல்லியிலிருந்து இந்நாள் அமெரிக்க ‘பி-கிரேட்’ சினிமாக்காரர்கள் வரை பயன்படுத்தும் அம்சங்கள்தான் என்றாலும் இந்த இலக்கியக் கட்டமைப்புக்குக் குறைந்தபட்சம் 18ம் நூற்றாண்டிலிருந்து ஒரு வம்சாவளி உண்டு.
‘ஷாந்தினி சொர்க்கம்’ என்ன இலக்கிய வகை என்று வாசகர் ஒருவர் எழுத்தாளர் குணசீலனிடம் கேட்டாராம்.

‘ஷாந்தினி சொர்க்கம்’ தமிழில் வந்துள்ள காத்திக் (Gothic) நாவல்.
ஃபிராங்கன்ஸ்டைன், டிராகுலா, ப்ராண்டே சகோதரிகளின் கதைகளைப்போல் அமானுஷ்யத்துக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள மயங்கிய வெளியில் ‘ஷாந்தினி சொர்க்கம்’ கதை நடக்கிறது.
காத்திக் கதைகள் உருவான காலம் ஐரோப்பாவில் தொழில் புரட்சியும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மிகக் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்ட காலம். அமானுஷ்யம் தொடர்பான பழைய நம்பிக்கைகளை இந்த வளர்ச்சிகள் பலமாகப் பாதித்தன. அறிவியலுக்கும் பழைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான தத்துவார்த்த போராட்டங்களின் வடிவமே காத்திக் கதைகள்.
மனிதர்களின் அடிமனதில் குடியிருக்கும் மிகத் தொன்மையான நம்பிக்கைகளும் பயங்களும் அறிவியலோடு மோதும்போது நடக்கும் அகப்போராட்டங்களை இந்நாவலில் குணசீலன் காட்டுகிறார்.
இந்த இருவேறு தத்துவார்த்த அடிப்படைகளின் பிரதிநிதிகளாக நாவலில் கதாநாயகனின் மானசீக ஜோதிட ஆசான், கிளி ஜோதிடன், நாவலின் இறுதியில் வரும் மாந்திரீகர் மற்றும் மனோவியல் மருத்துவர் மகாதேவன், கட்டடத்தை உடைக்க வரும் வல்லுநுர்கள் ஆகியோரை அமைத்திருப்பது சிறப்பு.
தத்தமது துறைகளின் ரகசியங்களை உணர்ந்தவர்களாகவும் அவற்றின் அதிகார மையங்களாகவும் இவர்கள் இயங்குகிறார்கள். பேய்களைப் பற்றியும் அமானுஷ்யங்களைப் பற்றியும் இந்நாவல் முன்னெடுக்கும் விவாதத்தை இவர்களின் உரையாடல்கள் பேய்க்கதையை மீறியும் வேறொரு தளத்துக்கு நகர்த்துகின்றன.
நாவலின் கதாநாயகன் இவ்விருவேறு உலகங்களின் கால்களை வைத்திருக்கும் renaissance மனிதனாகக் காட்டப்படுகிறான்.
ஆனால் கிராமத்தில் பிறந்து முரடனாகவும் ஓரளவுக்குக் குடிகாரனாகவும் வளர்ந்த அவன் மருத்துவம், கழிவுநீர் சுத்திகரிப்பு, கட்டடங்கள் இடிப்பது, வைர வியாபாரம் ஆகிய அனைத்திலும் எப்படி முப்பது வயதுக்குள் இத்தகைய பரந்துபட்ட அறிவைப் பெற்றான் என்பதை நாவல் இன்னும் பலமாக நிறுவியிருந்தால் கதை இன்னும் பலம் பெற்றிருக்கும்.
மேலும் அப்பழுக்கில்லாத முகத்தில் மச்சம் இருந்தால் அழகு கூடும் என்ற அழகியல் கோட்பாட்டிற்கு இணங்கக் கதாநாயகன் எல்லாத் துறைகளிலும் துறைபோனவனாகவும் எல்லாச் சிக்கல்களுக்கும் அவனே தீர்வுகளைச் சொல்பவனாகவும் அமைவது கொஞ்சம் சலிப்பூட்டத்தான் செய்கிறது.
கதையின் விவரங்கள், உரையாடல்கள் சிலவற்றில் நிச்சயம் எடிட்டிங் கத்தரிக்கோல் தேவை.
இத்தகைய காத்திக் பின்னணியைக் கொண்ட கதையில் கிராமப் பின்னணி வருவது நிச்சயம் சுவாரஸ்யம்தான். அதிலும் கதை சொல்வதில் சின்னச் சின்ன மர்ம முடிச்சுகளை வைத்துப் பின்னொரு சந்தர்ப்பத்தில் அதை எழுத்தாளர் அவிழ்ப்பது நல்ல உத்தி. முதல் அத்தியாயங்களில் கதாநாயகனின் அறிமுகமும், அவன் பெயர் காரணம் விளக்கப்படுவதும் அட்டகாசம்.
ஆனால் கதாநாயகனின் விரிவான கிராமப் பின்னணி கதைக்குச் சில இடங்களில் ஒட்டாமல் இருப்பது போலவும் குறுக்குத் திசையில் பயணிப்பது போலவும் ஏற்படும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.
இவற்றையெல்லாம் மீறியும் கதைகூறலாலும் சம்பவச் செறிவாலும் ‘ஷாந்தினி சொர்க்கம்’ தத்துவக் கனம் கொண்ட அமானுஷ்யக் கதை. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் அமானுஷ்யங்களைப் பற்றிய நாவல் வடிவில் ஒரு நல்ல விவாதம்.