
அசாதாரணமான புறச்சூழ்நிலைகள் மிகச் சாதாரண மனிதர்களை அசாதாரணமான வகைகளில் செயல்பட வைக்கின்றன.
பாலகுமார் விஜயராமனின் “சிவப்புப் பணம்” (குறு)நாவல் இந்தியாவில் நடந்த பண மதிப்பிழப்பு சரவணன், பாண்டி, கிருபா ஆகிய மூன்று சாதாரணர்களின் வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகளைப் பேசுகிறது.
அசாதரணமான சூழ்நிலைகளில் பிழைத்துக் கொள்ள எளிமையான மனிதர்கள் புதுமையான வழிகளைத் தேடிக் கண்டு கொள்வார்கள் என்ற அடிப்படையைப் பாலகுமார் விஜயராமன் இந்நாவலில் பணத்தை மாற்றிக் கொள்ள மூவரும் பயன்படுத்தும் அருமையான உத்திகளின் வழியாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.
ஆனால் இத்தனை புத்திசாலித்தனமாகச் செயல்படக் கூடியவர்கள் முன்னேற வேறு வாய்ப்புக்கள் இல்லாமல் பணத்தையும் பெரிய இடத்துத் தொடர்புகளையும் வைத்து லாபம் பார்க்கும் புகழேந்தி போன்ற சில பேருடைய ஆட்டுவித்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது “சிவப்புப் பணம்” காட்டும் அவலம்.
அரசியல் திரில்லர் என்று இந்த நாவல் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எதிர்ப்பாராத சூழ்நிலையில் சிக்கிய எளிய மனிதர்களின் வாழ்வு போராட்டங்களைப் பேசுவதால் நாவல் திரில்லர் வகைமைக்கும் கொஞ்சம் மேலேறிப் போகிறது.
பாலகுமார் விஜயராமனுக்கு இட, நிகழ்வு வருணனைகள் அற்புதமாக வருகின்றன. நாவலின் தொடக்கத்தில் இராஜேஸ்வரி மட்டன் ஸ்டாலைச் சுற்றி நடக்கும் காட்சிகளும், மதிப்பிழந்த பணத்தை மாற்றிக் கொள்ள வங்கியின் முன்னால் மக்கள் தவித்து நிற்கும் காட்சிகளும் சிறப்பாய் அமைந்துள்ளன.
ஆங்கிலத்தில் ‘அட்மஸ்பியர்’ என்பார்கள், அந்தப் புறச்சூழ்நிலை வருணனைகளின் வழியாக மனிதர்களின் எண்ணங்களையும், அகச்சிக்கல்களையும் காட்டுவதில் பாலகுமார் விஜயராமன் சில உயர்ந்த இடங்களைத் தொடுகிறார்.
தோட்டம் ஒன்றைச் சொந்தமாக வாங்கிக் கொள்ளச் சரவணனுக்கு இருந்த பேராவலையும் நாவலின் முடிவில் அதற்குரிய வழி அவனுக்குத் திறக்கப்படுவதையும் காட்டுவதால் அவன் செய்யும் குற்றச் செயல்களை மீறியும் ஒரு மீட்சியை அடைவதாகக் காட்ட நினைத்திருப்பதும் சிறப்பு.
ஆனால் அந்த மூவரின் அகச்சிக்கல்களையும் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்தால் இந்நாவல் வேறு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கணிப்பு. திரில்லர் நாவல் என்பதாலோ என்னவோ இம்மூவருடைய அகச்சிக்கல்களும் சரியாகச் சித்தரிக்கப்படாமலே போய்விடுகிறது. இதனால் அவர்கள் – குறிப்பாக சரவணன் – அடையும் மீட்சி நீர்த்துப் போக வாய்ப்பிருக்கிறது.
பலமாக வந்திருக்க வேண்டிய சில கதாபாத்திரங்கள், குறிப்பாக வங்கியின் முன்னால் மஞ்சள் பையுடன் நின்று பரிதாபமாக நெரிசலில் மறைந்து போகும் வீரம்மாள், வளர்ச்சியடையாமலேயே போகின்றன.
எனினும் “சிவப்புப் பணம்” ஒரு சமுதாய நிகழ்வையும், அதனால் எளிய மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பதிவு செய்யும் சுவாரசியமான படைப்பு.
வாசகன் தாராளமாக அந்தச் சிக்கல் மிகுந்த நாட்களில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்துவிட்டு வரலாம்.
இதுவே பாலகுமார் விஜயராமனின் வெற்றியுமாகிறது.