
நெடுங்காலமாக “இலக்கணச் சுத்தமான” நாவல் என்பது உரைநடையில் எழுதப்பட்டது, குறைந்தது 50,000 வார்த்தைகள் கொண்டது என்ற வரையறை இருந்து வருகிறது.
ஆயினும் இந்த வரையறைகள் வெறும் வடிவ இலக்கணம் தொடர்புடையவையே. வார்த்தை எண்ணிக்கையை மையமாகக் கொண்ட நாவல் வரையறை மிகப் பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளது.
டல்ஸ்டாயின் “போரும் அமைதியும்” நிச்சயம் 50,000 வார்த்தைகளைவிட பல மடங்கு நீளமானது. ஆனால் அது நாவல் என்றே கருதப்படுகிறது. காம்யூவின் அந்நியன், சீசர் அயிரா, யோகோ தாவாதாவின் தற்கால நாவல்களில் சில (“மணமகன் நாயாய் இருந்தான்”) 50,000 வார்த்தைகளை எட்டாதவை. ஆனால் அவைகூட நாவல்கள் என்றே கருதப்படுகின்றன.
உரைநடையைப் பொறுத்தவரை இதே கதைதான். உதாரணத்துக்கு சீன மொழியில் நாவல்கள் என்று கருதப்படும் பல படைப்புக்கள் நீளமான கவிதைப் பகுதிகளைக் கொண்டவை.
அப்படியென்றால், நாவல் வடிவத்தின் உண்மையான ‘இலக்கணம்’ என்ன?
நாவல் வடிவத்தின் முன்னோடிகளாக மூன்று ஆங்கில நாவல்கள் கருதப்படுகின்றன. 1719ல் வெளிவந்த டானியல் டீஃபோவின் “ராபின்சன் குரூஸோ”, 1722ல் வெளிவந்த அதே எழுத்தாளரின் ” மோல் ஃபிளாண்டர்ஸ்” மற்றும் 1741ல் சாமுவல் ரிச்சர்ட்சன் எழுதிய “பாமலா”.
இந்த மூன்று நாவல்களை ஆராய்ந்தால் நாவல் வடிவம் பிறப்பதற்கு எத்தகைய காரணிகள் ஆதாரமாக இருந்தன என்பதை அறியலாம்.
முதலாவதாக, இம்மூன்று நாவல்களுக்கும் அந்நாளைய லண்டன் நகரத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பு பெற்றிருந்த குற்றவாளிகளின் விபச்சாரப் பெண்களின் சுயசரிதை நூல்கள் முக்கிய முன்னோடிகளாக இருந்தன. மலிவு விலை பதிப்பாக வெளிவந்த இச்சுயசரிதைகள் குற்றவாளிகள் விபச்சாரப் பெண்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் சந்தித்த போராட்டங்களையும், அவர்கள் செய்த குற்றங்களையும், ஒழுங்கீனமான காரியங்களையும் வாசகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டும் வகையில் எடுத்துரைத்தன.
அந்நாளைய ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றிருந்த கிறித்துவத் திருச்சபையின் கண்டனத்தைப் பெறாதபடிக்கு நூலின் முடிவில் சுயசரிதையின் கதாநாயகர்கள் மனம் திரும்புவதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
ஆங்கில இலக்கியத்தின் முதல் மூன்று நாவல்களாகக் கருதப்படும் மேற்கூறிய மூன்று நாவல்களும் இந்தச் சுயசரிதைகளின் பாணியிலேயே எழுதப்பட்டவை.
ராபின்சன் குரூஸோ என்ற நாவல் கண்காணாத தீவொன்றில் கரை ஒதுங்கிய மாலுமி ஒருவனின் அனுபவங்களை அவன் வாய் மொழியிலேயே சொல்வது. தனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாகப் பல்கலைக் கழகப் படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மாலுமியாகக் கடலுக்குப் போகிற கதாநாயகன் கப்பல் சூறாவளியில் சிக்கி மூழ்கிய பின் ஆள் நடமாட்டமே இல்லாத தீவில் கரையொதுங்கிறான். நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகள், ஆப்ரிக்கர்களை அடிமைகளாகத் துடிக்கும் பணத்தாசையுடைய வியாபாரிகள், காட்டு விலங்குகள் என்ற அபாயங்களையெல்லாம் தாண்டியும் அவன் பயிர் செய்யவும், தச்சுத் தொழில் செய்து தனக்கு வேண்டிய கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், வேட்டையாடவும் தானே கற்றுக் கொள்கிறான். கப்பலிலிருந்து தன்னுடம் எடுத்து வந்த பைபிளை வாசித்துக் கடவுளிடம் உண்மையான விசுவாசத்தை அடைகிறான். பல இன்னல்களைக் கடந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு ஊர் சேர்கிறான்.
மோல் ஃபிளாண்டர்ஸ் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணைப் பற்றிய கதை. அவளே தன் கதையைச் சொல்வது போல அமைந்திருக்கிறது.
இந்நாவலின் கதாநாயகி லண்டனின் புகழ்ப்பெற்ற நியூகேட் சிறைச்சாலையில் பிறக்கிறாள். சிறு வயதிலேயே தனது தாயிடமிருந்து பிரிகிறாள். தன் தாய் எப்படி இருப்பாள் என்பது அவளுக்குத் தெரியாது. வளர்ந்த பின்னர் சமூக ஒழுக்கத்துக்கு எதிராக பணத்துக்காகவும் வசதிக்காகவும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறாள். இந்த உறவுகளின் பலனாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறாள். தான் தொடர்பு வைத்திருக்கும் ஆண்களில் ஒருவன் தனது தாய்க்கு வேறொரு ஆணின் மூலமாகப் பிறந்தவன் என்று அறிந்து கொள்கிறாள். அவனுடன் பெற்றுக் கொண்ட மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு வேறு ஆண்களைத் தேடிப் போகிறாள். வயதானவுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுச் சிறைக்குப் போகிறாள். சிறையில் மனம் திரும்புகிறாள். சிறையிலிருந்து விடுதலையானபின் 69 வயதில் தான் முன்னர் காதலித்த ஆண்களில் ஒருவனோடு அமைதியான வாழ்க்கை வாழ முடிவு செய்கிறாள்.
சாமுவேல் ரிச்சர்ட்சனின் பாமலா நாவல் ஏழைப் பெண் ஒருத்தியின் வாழ்வைப் பற்றியது. அவள் தன் பெற்றோருக்கு எழுதும் கடிதங்களின் மூலமாகவும் அவளுடைய டைரிக் குறிப்புகளின் வழியாகவும் நாவலின் கதை சொல்லப்படுகிறது. பாமலாவின் கற்பைப் பல ஆண்கள் எப்படியெல்லாம் சூறையாட முயன்றார்கள், அவள் அந்த முயற்சிகளையெல்லாம் எப்படி தன்னுடைய நன்னடத்தையால் முறியடித்தால் என்பது நாவலின் கதை. கடைசியில் பாமலாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கிறது.
பழைய ஐரோப்பிய நெடுங்கதைகளைப்போல் சம்பவங்களின் தொகுதியாக மட்டுமல்லாமல் டானியல் டீஃபோவின் நாவல்களும் சாமுவேல் ரிச்சர்ட்சனின் பாமலாவும் தனிமனிதர்களின் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களையும் அப்போராட்டங்களின் வழியாக அந்தத் தனிமனிதர்கள் கண்டடைந்த ஆன்மீக, உளவியல் மற்றும் சமூக மீட்சியையும் எடுத்துரைத்தன.
தனிமனிதர்களின் உள்ளே நடக்கும் அகப்போராட்டங்களை எடுத்துக் காட்ட அவர்கள் கதைகளைச் சுயசரிதை, கடிதம், டைரிக் குறிப்பு ஆகிய உத்திகள் ஆரம்ப நாவல்களில் கையாளப்பட்டன. ஒப்புநோக்க பழைய ஐரோப்பிய நெடுங்கதைகள் பெரும்பாலும் சம்பவங்களின் தொகுப்பாகவே மட்டுமிருந்ததால் அவற்றில் கதாநாயகர்களின் அகச்சிக்கல்கள் விவாதிக்கப்படாமலேயே இருந்தன.
ஆங்கில மொழியின் முதல் மூன்று நாவல்களுக்குத் தனிமனிதர்களின் பெயர்களே தலைப்பாகச் சூட்டப்பட்டிருப்பதிலிருந்து ஆரம்பக் காலத்திலிருந்தே தனிமனிதர்களின் சமூகப் போராட்டங்களையும், அவற்றால் அவர்கள் எதிர்கொண்ட அகச்சிக்கல்களையும், அவற்றினூடாக அவர்கள் கண்டுகொண்ட மீட்சியையும் எடுத்துரைப்பதே நாவல் வடிவத்தின் தலையாய நோக்கமாகக் கருதப்பட்டதைக் காணலாம்.
இதன் அடிப்படையில் சம்பவங்களின் சுவாரசியத்தைவிட, மொழியாடலின் சிறப்பைவிட வெளியுலக நிகழ்வுகளால் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களிலும் பாத்திர வார்ப்பிலும் ஏற்படக்கூடிய நுணுக்கமான மாற்றங்களை எடுத்துரைப்பதிலேயே நாவலின் வெற்றி அடங்கியிருப்பதாக இலக்கணம் உருவானது.
இந்த இலக்கணத்தின்படிதான் பின்னாளைய ஜெர்மானிய, ரஷ்ய நாவலாசிரியர்கள் நாவல் வடிவத்தை உன்னதமான நிலைக்குக் கொண்டு போனார்கள்.
(நாவல் வடிவத்தைப் பற்றிய பதிவுகள் தொடரும்)