
ஆங்கிலத்தில் அல்லது ஸ்பானிய மொழியில் இலக்கியக் கருத்தரங்குகளுக்குப் போகிறேன்.
பேச்சின் நடுவே “நீங்கள்தான் விடாப்பிடியாகத் தமிழில் எழுதுகிறீர்களே. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.
இப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறேன்.
ஆனால் அவர்களுக்கு இது போதவில்லை. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் சிறந்தவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் என்கிறார்கள்.
வாய்வார்த்தையாகக் கதைகளைச் சொல்கிறேன். ஆனால் அந்த எழுத்தாளர்கள் கதையின் கட்டமைப்பிலும், உரையாடலிலும், பயன்படுத்திய படிமங்களிலும்ம், சொல்லாட்சியிலும் செய்துள்ள புதுமைகளைச் சொல்ல முடியாமல் சில வாய்மொழியான அபிநயங்களால் மட்டும் விளக்க முயன்று முடிக்கிறேன்.
கேட்பவர்களுக்கு மட்டுமல்ல. இப்போது எனக்கும் ஏமாற்றம்.
ஆங்கில இலக்கியச் சூழலில் சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் அறியப்பட வேண்டும் என்றால் அவர்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அறியப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பையோ நூல் பட்டியலையோ மட்டும் பகிர்வது பயன் தராது.
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போது முதலில் நல்ல எழுத்தாளர்கள்மீது வெளிச்சம் விழும். அக்மத்தோவா, மாயகோவ்ஸ்கி போன்ற ஆரம்பக் கால ரஷ்யக் கவிஞர்களும், சீசர் அயிரா போன்ற சிறந்த லத்தீன் அமெரிக்கப் புனைவு எழுத்தாளர்கள் முதன்முதலாக அறியப்பட்டது அவர்கள் எழுத்துக்கள் இப்படி உதிரியாக மொழிபெயர்க்கப்பட்டதால்தான்
இப்படிப்பட்ட மொழிப்பெயர்ப்புக்கள் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களை உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும். இந்த எழுத்தாளர்களை மேலும் வாசிக்கத் தூண்டும்.
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை முன்னெடுக்க உறுதுணையாக இருக்கும்.
ஆங்கிலக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் என்னை மாதிரி ஆள்களுக்கு அனுகூலம்.
நேர்கோடு இதழும் அதன் ஆசிரியர் மணிமொழியும் முன்னெடுத்திருப்பது மிக நல்ல காரியம்.
மாதம் மூன்று சிறந்த தமிழ்ச் சிறுகதைகள், ஆங்கிலத்தில். 2020-இன் இறுதியில் இவற்றிலிருந்தும் சிறந்தவை ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பாக, எழுத்தாளர்களுக்கு அறிமுகமாக விளங்கக்கூடிய முன்னுரையோடு.
இந்தச் சிறுகதைகளை மொழிபெயர்க்கப் போகும் குழு மாமேதைகளோ மொழிப் பேரறிஞர்களோ அல்ல. ஆனால் நல்ல இலக்கிய ரசனையும் பரிச்சயமும் உள்ளவர்கள்.
எத்தனை நாள்தான் வேற்று மொழி இலக்கியத்தை மொழிபெயர்த்துப் பேசிக் கொண்டு இருப்பது.
நம் ஆட்களின் சரக்கையும் உலகத்துக்குக் காட்ட வேண்டியது அவசியம்.
அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும்தான்.
யார் கதைகளைச் சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்கிறார்கள்.
விருப்பு வெறுப்பு இருந்தால்தானே வரையறை வைத்துக் கொள்ள.
நல்ல சிறுகதைகள். எங்கிருந்தாலும்.