சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் என்றைக்குமே ஒற்றை அடையாளமுடையதாக இருந்ததில்லை. ஆரம்பக் காலம் தொடங்கி குறைந்தபட்சம் மூன்று வகையான சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புக்கள் இருந்திருப்பதாகக் கருத இடமுண்டு.
(1) சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எழுதுவது; (2) இடைக்காலத்தில் சிங்கப்பூருக்கு வந்து நிரந்தரவாசிகளானவர்கள் எழுதுவது; (3) சிங்கப்பூருக்குக் குறுகிய காலப் பயணமாக வந்து செல்பவர்கள் எழுதுவது.
நான்காவதாக ஒரு வகைமையும் பின்னாளில் வரக் கூடும்: சிங்கப்பூரில் பிறந்து வாலர்ந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போகும் தமிழர்கள் எழுதக் கூடியது. இதுவரைக்கும் நான்காவது வகையான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளதாக என் கவனத்துக்கு வரவில்லை.
மாலன் அண்மைய கல்கி தீபாவளி மலருக்காக ‘களவு’ என்ற ஒரு சிறுகதை எழுதியுள்ளார். குறுகிய காலப் பணிக்காகச் சிங்கப்பூர் வந்து போகும் தமிழகத் தமிழர் ஒருவரின் கதை. மாலனும் சிங்கப்பூருக்கு வந்து போகிறவரே அன்றிப் பல வருடங்கள் வாழ்ந்தவர் அல்ல. ஆனால் நான் வாசித்த அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களின் சிங்கப்பூர்க் கதைகளைவிடவும் மாலனின் கதை சிங்கப்பூர் என்ற இடம் தனக்குள் வசிப்பவர்களின்மீது கொண்டிருக்கும் தாக்கத்தை இவர் கதை மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்கிறது.
மாலனின் கதையில் சிங்கப்பூரும் நிலமும் சிங்கப்பூரின் மழையுமே கதாநாயகர்கள். கதையின் உள்ளடக்கம் சுவாரசியமானது. சிங்கப்பூருக்கு மூன்று மாதப் பணியொன்றுக்காக வரும் தமிழக மென்பொருள் பொறியிலாளனின் அற்புதமான யோசனை அவன் அதிகாரிகளால் திருடப்படுகிறது. அதன் பலனாக அவன் தானும் திருடனானால்தான் பிழைக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறான். மழை நாளில் அலுவலகக் கட்டட முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குடைகளில் ஒன்றைத் திருடித் தன் திருட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஆனால் அதன் பின் குற்ற உணர்வால் அந்தக் குடையை எப்படியாவது அப்புறப்படுத்திவிட அவன் பல வகைகளில் முயலும்போது சிங்கப்பூர்ச் சூழல் அவனை அப்படிச் செய்யவிடாமல் தடுக்கிறது. பல காரணங்களுக்காக அவன் தொலைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் குடை மீண்டும் மீண்டும் அவன் கைகளுக்கே வந்துவிடுகிறது.
கதை முழுவதும் சிங்கப்பூர் மழை. சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிங்கப்பூரர்களுக்கும் இந்நாட்டு மழைக்கும் இடையில் உள்ள விநோத உறவை அறிவார்கள். 1980கள் வரையில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது சாதாரண விஷயம். அப்போதெல்லாம் திறந்த நிலையில் இருக்கும் சாக்கடைகளில் சிறுவர்கள் மழை ஓய்ந்தவுடன் கப்பி மீன்களைப் பழைய ஜாம் ஜாடிகளில் பிடிப்பார்கள். கடந்த முப்பதாண்டுகளில் இன்னும் பல கட்டடங்களும், சுரங்க ரயிலும் கட்டப்பட்டு, சாக்கடைகள் மறைக்கப்பட்ட பிறகு சிங்கப்பூரர்களுக்கு மழையோடு தொடர்பு கொள்ள அவ்வளவாக வாய்ப்புக்கள் அமைவதில்லை. லேசாய் மழை பெய்தாலே சிங்கப்பூரின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் கலக்கமடைவது இன்றுவரை உள்ள சுவாரஸ்யம்.
நான் பல கதைகளில் சிங்கப்பூர் வெயிலைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் சிங்கப்பூர் மழையைக் கதைக்குள் கொண்டுவந்தது மாலனின் சாமர்த்தியம்.
அதோடு கூட சிங்கப்பூர் மொத்தமும் வலைப்பின்னலாய் விரிந்திருக்கும் பொதுப் போக்குவரத்து மற்றும் சிறு கடைகளைப் பற்றிய மிகத் துல்லியமான விவரிப்புக்கள் இக்கதையில் இருக்கின்றன. வாகனங்களின் விலைகள் கட்டடங்களின் உயரத்தைப்போலவே வானத்தை முட்டும் இந்தத் தீவில் பொதுப் போக்குவரத்துப் பல சிங்கப்பூரர்களின் வாழ்க்கையின் அத்தியாவசியப் பகுதியாக மாறியிருக்கிறது. சராசரி சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான சாரமிக்கக் கணங்கள் பொதுப் போக்குவரத்தில் கழிகின்றன. அதனால் அன்றாட வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளும் துன்பங்களும் கோபங்களும் சிங்கப்பூரர்களுக்குப் பொதுப் போக்குவரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
கதையின் நாயகனும் இதை உணர்வதுபோல் காட்டியிருப்பது மிகச் சிறப்பு.
செவன் இலெவன் கடையில் குடை வாங்கப் போகும் கதாநாயகன் கடை உதவியாளருடன் நடத்தும் உரையாடலை மிகவும் ரசித்தேன். ஒரு குறிப்பிட்ட கல்வித் தகுதியை உடைய உள்ளூர்க் கடை வேலையாள் அப்படித்தான் பேசுவார். (ஆனால் ஒன்று சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறம், அரச நிறம் அல்ல. மஞ்சள்தான் சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்களின் அரச நிறம்).
இடம் என்பதும் சூழல் என்பதும் மனிதர்களின் குணாதிசய வெளிப்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் எண்ணம். சிங்கப்பூர்த் தீவு தனக்குள் வருபவர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கங்களை விவரிக்கும் மாலனின் ‘களவு’ மிக அற்புதமான கதை.