எனக்கு வாய்த்த நண்பர்களின் தென்கிழக்காசிய இலக்கியங்களைத் தேடிப் போய் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு.
ஆங்கில, ஸ்பானிய, வட ஆசிய (ஜப்பானிய மொழி, கொஞ்சம் கொரியன்) புத்தகங்களில் மட்டுமே சரக்குள்ளது என்ற வெகுஜன நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் தென்கிழக்காசிய இலக்கியங்களைத் தேடிப் போய் வாசிக்கும் தமிழ் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஏ. நுஹ்மான் மலேசியக் கவிஞர் லத்தீஃப் மொஹிதீன் மற்றும் இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வரின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இது பல நேரங்களில் எனக்கு விநோதமாகத் தோன்றியிருக்கிறது. தமிழ்ப் பின்னணியிலிருந்து ஆங்கில, ஸ்பானிய, ரஷ்ய, ஜப்பான், கொரியப் பின்னணிகளைவிட தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரப் பின்னணி வெகு பரிச்சயமானதுதான்.
இந்தோனேசியா போன்ற நாடுகளில் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தீவிர இலக்கிய முன்னெடுப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்தோனேசிய எழுத்தாளர் நுரில் பஸ்ரியின் நாவல்கள் சமகால இந்தோனேசிய வாழ்க்கையின் சவால்களைச் சொல்பவை. இந்தச் சவால்களை வெறும் பெருநகர வாழ்க்கையின் சவால்களாக மட்டும் நாம் பார்ப்பதில் அர்த்தமில்லை.
இந்தோனேசியா உலகத்திலேயே அதிக முஸ்லீம்களைக் கொண்ட நாடு. அதே சமயம் அதன் இந்து பௌத்த கலாச்சாரப் பின்னணியும் இந்தோனேசியாவில் தோன்றி தென்கிழக்காசியாவில் கோலோச்சிய பேரரசுகளின் வீச்சும் மிகப் பெரியவை. இவற்றையும் மீறி நகரமயமாதல், உலகமயமாதல் ஆகியவற்றுக்கு இந்தோனேசியா தன்னைக் கணிசமான வகையில் ஒப்புக் கொடுத்துள்ளது.
இம்மூன்று வரலாற்று, கலாச்சார, சமகாலத் தாக்கங்களுக்கு இடையே ஏற்படக்கூடிய மிக நுண்ணிய அன்றாட சவால்களைப் பஸ்ரியின் நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
அவருடைய 2017 நாவலான Not a Virgin வித்தியாசமான பாலின இச்சைகள் உள்ளவர்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும், உடைமாற்றி அணிபவர்களும், மத அடிப்படைவாதிகளும் வாழும் ஒரு சூழலுள்ள இந்தோனேசிய நகரத்தைக் காட்டுகிறது. அந்த நகரத்தில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களான பெசாந்திரன்கள் இருக்கும் இடத்துக்கு வெகு அருகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் இரவு கேளிக்கை விடுதிகளும் இருக்கின்றன. இருவேறு துருவத்தவர்களான இந்நாவலின் மனிதர்கள் சந்திக்கும் சவால்களும், அவர்களுக்குள்ளே மூளும் சண்டைகளும் எது சரி என்பதன் அடிப்படையினாலன்றி எது வலியது என்பதன் அடிப்படையில் தீர்க்கப்படுகின்றன.
அண்மையில் வெளிவந்த Love, Lies and Indomee என்ற நாவலின் கதாநாயகியான ராத்து இந்தோனேசியாவில் இயங்கும் கொரிய தூதரகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிக்கு உதவியளாய் வேலை பார்க்கிறாள். பாலித் தீவில் உள்ள வெறி நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் வேலையைப் போன்ற வேலைகள் அவளுக்குத் தரப்படுகின்றன. குண்டாக இருக்கும் ராத்து தனக்குத் திருமணமே ஆகாது என்ற முடிவுக்கு வருகிறாள். ஒரு நாள் முகநூலில் ஹான்ஸ் என்ற பெயருடையவனைச் சந்திக்கிறாள். அவன் அழகானவன். அவளுடன் வெளியில் செல்ல சம்மதிக்கிறான். இருவருக்கும் ஒத்து வராது என்று புரிந்து கொண்டாலும் தனது பெற்றோர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தாமல் இருக்கவாவது ஹான்ஸ் தன் காதலனாய் நடிக்க வேண்டும் என்று ராத்து கெஞ்சிக் கேட்கிறாள்.
பஸ்ரியைப் புகழ்ப்பெற்ற இந்தோனேசிய எழுத்தாளர்களான ஏகா குர்னியவான் அல்லது ப்ரமோதயா ஆனந்த தோயர் ஆகியோரின் தரத்தில் எழுதும் எழுத்தாளர் என்று சொல்ல முடியாது. அவர் நாவல்கள் அந்தத் தரத்தில் இல்லை. குறிப்பாக தன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் சவால்களின் தீவிரத்தைக் காட்டும் வாய்ப்புகளைப் பஸ்ரி அழகியல் நோக்கில் தவறவிடுகிறார் என்றே படுகிறது.
ஆனால் சமகால இந்தோனேசிய நகரவாசிகள் மதத்துக்கும், அன்றாட கலாச்சாரத்துக்கும், உலகமயமாதலுக்கும் இடையே சிக்கி எதிர்கொள்ளும் விசித்திரமான சவால்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பஸ்ரியின் நாவல்கள் மிக நல்ல ஆரம்பம்.