கார்மன் மரியா மாச்சாதோ – அவள் உடம்பும் மற்ற கொண்டாட்டங்களும்

யாரும் லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் பெண்களின் உடம்பும் அதன் இயற்கையான செயல்பாடுகளும் பல ஆண்கள்களுக்கும் (பல பெண்களுகளுக்கும்கூட) தீராத மர்மமாகவும், அருவருப்பும், அச்சமும் ஏற்படுத்துபவையாகவும் இருக்கத்தான் செய்கின்றன.
இதை ஒப்புக்கொள்ள பல ஆண்களின் வறட்டுக் கௌரவமும், பல பெண்களின் பிடிவாத குணமும் தடுக்கும்.
பெண்களின் உடலையும் காமத்தையும் வைத்தே பேய்க்கதைகளின் பாணியில் திகிலூட்டும் கதைகளை எழுதினால் எப்படி இருக்கும்?
கார்மன் மரியா மாச்சாதோ தனது Her Body and Other Parties என்ற 2017ம் ஆண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்பில் இப்படிப்பட்ட எட்டுக் கதைகளை எழுதியிருக்கிறார்.
இக்கதைகளில் பெண்ணின் உடம்பும் அதன் செயல்களும் இச்சைகளுமே பெண்களுக்கெதிரான ஆயுதங்களாக ஆண்களாலும், பிற பெண்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. சில கதைகளில் வரும் பெண்களுக்குத் தங்கள் உடலே எதிரியாகிறது.
The Husband Stitch என்ற கதையில் பிள்ளை பெற்றுக் கொண்ட தனது மனைவியை அறுவை சிகிச்சை மூலம் தனது பிறப்புறுப்பை தைத்துக் கொள்ளும்படி கணவன் வற்புறுத்துகிறான். பிள்ளைப் பேறுக்குப் பிறகு பெண்ணின் பிறப்புறுப்புத் தளர்வடைவதால் இல்லற சுகம் கெட்டுப் போய்விடும் என்பதால் அதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. மனைவி கணவனின் நச்சரிப்பைத் தவிர்த்து வந்தாலும் அவளிடமும் ஒரு ரகசியம் இருக்கிறது. அவள் கழுத்தில் ஒரு பச்சை ரிப்பனோடு அவள் பிறந்திருக்கிறாள். ஆனால் அவள் பிறப்புறுப்பைப் பற்றிக் கவலைபடும் கணவன் அவள் கழுத்தில் எப்போதும் அணிந்திருக்கும் ரிப்பனைப் பற்றி மட்டும் கேட்பதே இல்லை. கடைசியில் மகன் பிறந்து அவன் கல்லூரிக்கெல்லாம் போய்விட்ட பிறகு கணவன் ஒரு நாள் அவளிடம் ரிப்பனைப் பற்றிக் கேட்டு நச்சரிக்கிறான். ரிப்பனைக் கழற்ற அவனை அவள் அனுமதிக்கிறாள். ரிப்பன் கழற்றப்படும்போது அவள் தலை கழன்று விழுகிறது.
இந்தக் கதை கணவர்களுக்குத் தங்கள் உடல்களை முழுக்க ஒப்புக்கொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்களைப் பற்றிய கதை. கணவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றால் உடம்பில் – அது பெண்ணுறுப்பாக இருந்த போதும் – பெண் தையல் போட்டுக் கொள்ளலாம் (அதனால்தான் stitch). அவன் விருப்பப்பட்டால் தன் தலையைக்கூடக் கொடுக்கலாம் என்ற அவல நிலை. இந்தக் கதையில் வரும் ஓர் உரையாடலில் கழுத்தில் இருக்கும் ரிப்பனைக் கழற்ற வற்புறுத்தும் கணவன் ‘தம்பதிகளுக்குள்ளே எந்த வித ரகசியமும் இருக்கக் கூடாது’ என்கிறான்.
பழைய பழமொழி ஆதிக்கத்தை வளர்க்க எப்படியெல்லாம் பயன்படுகிறது!
The Inventory என்ற கதையில் பெண் ஒருத்தி தனது காம அனுபவங்களை டைரியில் எழுதுகிறாள். அவள் எழுத எழுத வெளியே பரவும் வைரஸ் நோயால் அவளுக்கு வேண்டியவர்கள் மாண்டு போகிறார்கள். ஆக, வைரஸ் நோய் போல் பெண்களின் காமம் எளிதில் பரவக் கூடியது. அசுத்தமானது. அதாவது கட்டுப்படுத்தப்பட வேண்டியது.
Real Women Have Bodies என்ற கதையில் பெண்களுக்கான ஆடைகளை விற்கும் கடையில் வேலை பார்க்கும் பெண் அந்தக் கடையில் வாங்கும் ஆடைகளை வாங்கும் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ஒன்றுமில்லாமல் போவதைப் பார்க்கிறாள். ஆனால் அவர்களுடைய உடைகள் உயிரோடிருக்கின்றன. இதற்குக் காரணம் உடைகளில் புகுந்துள்ள பெண்களின் ஆவிகள் என்று தெரிய வருகிறது. Eight Bites என்ற கதையில் வரும் பெண்கள் உடம்பைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் எடையை அப்படியே வைத்திருக்க எட்டுக் கவளம் உணவுதான் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதையாக நான் கருதும் கதையான Difficult at Parties கதையில் பார்ட்டிக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அவள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் வேளையில் அவள் காதலன் அவளிடம் நீலப்படங்களைக் காட்டுகிறாள். அந்தப் படங்களைக் காணும்போது அதில் நடித்த நடிக நடிகைகளின் எண்ணங்கள் அவளால் உணர முடிவதைக் கண்டு கொள்கிறாள். தனது காதலனின் எண்ணங்களையும் தனது எண்ணங்களையும் அறிந்து கொள்ள அந்தப் பெண் அவர்கள் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்வதை வீடியோ படம் எடுத்து அதைப் போட்டுப் பார்க்க முடிவு செய்கிறாள்.
நல்ல விஷயங்களைச் சொல்கிறேன் என்று வார்த்தை அலங்காரங்களை அடுக்கி வைத்துப் பல்லிளித்து நிற்காமல் நம்மைச் சுற்றி நடக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதுவதற்கு பெருங்கருணை வேண்டும்.
பெண்களின் உடம்பே அவர்களை எப்படி வதைக்கிறது என்று பெருங்கருணையுடன் சொல்லக்கூடிய கதைகள் மாச்சாதோவின் கதைகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s