செக் நாட்டின் தலைசிறந்த பரீட்சார்த்த எழுத்தாளர் என்று கருதப்படும் போஹுமில் ஹ்ரபால்-இன் 1964 நாவலான “முதியவர்களுக்கான நடன வகுப்புகள்” (Dancing Lessons for the Advanced in Age) சுமார் 130 பக்கங்களும் ஒற்றை வாக்கியமாக எழுதப்பட்டிருக்ககின்றன.
நாவலின் பெயரில்லாத எழுபது வயது கதாநாயகன் சூரியக் குளியல் போடும் சில இளம்பெண்களைப் பார்த்த குஷியில் தனத் நீண்ட வாழ்க்கையை ஒரே மூச்சில் சொல்லி முடிப்பதாகக் கதை.
கிழவன் பெண்களிடம் தனது பழைய காதலியர்களைப் பற்றியும், தனது காம சாகசங்களைப் பற்றியும், தான் பங்கேற்று வீரதீரச் செயல்களைச் செய்த போர்கள், தான் குடித்த மதுவின் அளவு ஆகியவற்றைச் சொல்வதாகக் கதை. கிழவன் கொஞ்சம் உண்மையோடு நிறைய பொய்களையும் சேர்த்துச் சொல்கிறான் என்று வாசகர்கள் ஊகித்துக் கொள்ளும் விதமாக ஹ்ரபால் கதையை அமைத்திருக்கிறார்.
கோகோல், தஸ்தவ்யஸ்கி நாவல்களில் வருவதுபோலவே தத்துபித்தென்று கண்டதைப் பேசும் மடையனாகவே ஹ்ரபால் கிழவனைச் சித்தரித்திருந்தாலும் முன்னிரண்டு எழுத்தாளர்களைப் போலவே அந்தக் கிழவனின் சொற்களின் வழியாக மிகக் கூர்மையான சமூக விமர்சனங்களை முன்வைக்கிறார். தனது நீண்ட பேச்சின் இடையில் 1918-ஓடு அழிந்து போன ஹப்ஸ்பர்க் பேரரசின் பெருமைகளைப் பேசுகிறான். சர்வாதிகார ஆட்சியின் கீழ் எழுதப்பட்ட நாவலில் மன்னராட்சியின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறான். பண்டைய நாட்கள் கடுமையானவையாக இருந்தாலும் அந்த நாள்களில் ‘எல்லோரும் நிறைய பாடல்களைப் பாடினார்கள்’ என்கிறான். தன் கதையைக் கேட்கும் பெண்களுக்கு உங்கள் தலையில் யாரேனும் வெள்ளரிக்காய்களைக் கொட்டுவதுபோல் கனவு கண்டால் அவர்கள்தான் உங்களை உண்மையாகக் காதலிப்பவர்கள் என்று அறிவுரை சொல்கிறான்.
கிழக்கு ஐரோப்பிய இலக்கியத்தைப் பொறுத்தவரை ஹ்ரபாலும் மிலான் குண்டராவும் அமெரிக்க இலக்கியத்தில் கர்ட் வோனகுட், சார்லஸ் புக்கோவ்ஸ்கி இருவரும் மனதை அதிர வைக்கும் அவலங்கள், கொடுமைகள் ஆகியவற்றின் ஆழத்தை விவரிக்க நகைச்சுவையைப் பயன்படுத்தியவர்கள்.
இயல்பான வாழ்க்கையுடன் பொருந்தாத, கனிவான இதயம் கொண்ட, தம்மைப் பற்றிய அதீதமான சுய அபிப்பிராயம் கொண்ட, ஆனால் அதே சமயம் மனிதர்கள் விரும்பும் பெருமைகளை எட்ட முடியாமல் ஒரு படி தள்ளியே இருக்கும் கதாபாத்திரங்களின் வழியாக முன்னெடுக்கப்படும் முரண்சுவையாகவே இவர்களது நாவலில் வரும் நகைச்சுவை நிறைவேறுகிறது. ஹ்ரபால் போன்ற எழுத்தாளர்கள் படைத்துக் காட்டும் மனிதர்கள் நமது கேலிக்கு ஆளாகும் அதே சமயம் நமது பரிதாபத்துக்கும் உள்ளாகிறார்கள். அவர்களை வாழ்க்கையின் தர்க்க நியாயங்களுக்கு உட்படாத அபத்தங்களும் வன்முறையும் அலைக்கழிக்கின்றன.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஹ்ரபாலின் நாவலில் வரும் கதாபாத்திரம் நாம் ஒவ்வொருவரும்தான் என்று உணர அதிக நேரம் பிடிக்காது.
இந்த நாவலில் வரும் கிழவனை அவனுடைய முதுமை அலைக்கழிக்கிறது. பல வித அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் சீரழிக்கப்பட்ட தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் அவனுடைய இயலாமையையும் தோல்வியையும் தனது முதுமையிம் ரூபத்தில் அவன் சுய தரிசனம் செய்து கொள்கிறான்.
ஒற்றை வாக்கியத்தில் லேசாய் மூச்சிரைத்தபடியே அவன் தன்னைப் பற்றி இளமையின் உச்சத்தில் இருக்கும் பெண்களிடம் சொல்லிக் கொள்ளும் கதையும் தன் கைகளிலிருந்து மெல்ல நழுவிப் போகும் வாழ்க்கையையே குறிக்கும் குறியீடாகவே அமைந்து விடுகிறது.
மிலான் குண்டரா தனது ‘நாவல் கலை’ எந்ற கட்டுரையில் இத்தகைய காலாவதியான மனிதர்களின் கதைகளைக் கூறுவதே நாவலின் தலையாய நோக்கம் என்கிறார்.
ஹ்ரபாலின் “முதியவர்களுக்கான நடன வகுப்புகள்” என்ற நாவலும் அத்தகைய காலாவதியான ஒரு மனிதனின் கதைதான்.
முதியவர்களுக்காக எதற்கு நடன வகுப்புகள் என்று நாம் சிரிக்கக் கூடும்.
நமது வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் பல அபத்தங்கள் தோல்விகள் இவற்றினிடையே இதுவும் ஓர் அபத்தம் என்று வாழ்க்கை நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.
நாவல்கள் பல வகைகளில் விளிம்பு மனிதர்களின் அவலங்களின் கதைகளைட் சொல்வதைத் தாண்டி பெரும் வரலாற்றுப் பதிவுகளாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் காலக்கட்டத்தில் ஹ்ரபால் போன்றவர்களின் மனித இனத்தின் துன்பங்களின் மீது பெருங்கருணை காட்டும் நாவல்கள் இன்றியமையாதவை ஆகின்றன.