ஆத்மார்த்தி – ஈர்ப்பு என்னும் பெரும்வேதனை

மிக நெருக்கமான உறவு எங்கிருக்கிறதோ அங்குதான் மிக ஆழமான வன்முறைகளும், அபத்தங்களும், தந்திரங்களும் நிகழ்த்தப்படுகின்றன என்பது நியதி.

ஆத்மார்த்தியின் முதல் நாவலான “ஏந்திழை” மனிதர்களிடையே ஏற்படும் அசாத்தியமான பாலின ஈர்ப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் ஆராய்கிறது.

நாவல் ஒரு வாகன விபத்தோடு தொடங்குகிறது. நாவலின் (கடைசிவரை) பெயரில்லாத கதாநாயகன் வேகமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு வரும் வேளையில் சாலையில் நிற்கும் ஒரு பெண்ணின்மீதும் அவள் தந்தையின்மீதும் மோதாமல் இருக்க வண்டியை வளைக்கிறான். வண்டி புரண்டு திரும்பியதில் அவனுக்குப் பலத்த காயம். மருத்துவமனையில் இருக்கும்போது அவன் மோதவிருந்தது தனது மென்பொருள் நிறுவனத்தின் உச்ச அதிகாரியாக இருக்கும் இளம்பெண்மீது என்று தெரிய வருகிறது. மருத்துவமனையில் அவனை நலம் விசாரிக்க வருபவள் அவன் மீது முதலில் நன்றி பாராட்டுகிறாள். பின்பு காதல் வயப்பட்டு அவன் குணமானதும் அவனுக்குப் பதவி உயர்வு தந்து அவனைத் தனது உதவியாளனாய் உயர்த்தித் தனது காதலனாகவுமாக்கிக் கொள்கிறாள்.

ஆனால் கதாநாயகனுக்கு ஒரு கதை உண்டு. முன்பொரு நாள் எதேச்சையாகப் பார்த்த பேரழகியான இளம்பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறான். அவள் அன்பைப் பெற வேண்டி தனது அலுவலகத்திலேயே அவளுக்கு வேலை ஏற்பாடு செய்து தந்திருக்கிறான். அவன் தனது விருப்பத்தை அவளிடம் சொல்லும்போது அவள் மறுக்கிறாள். அவளை மறக்க முடியாமல் இருக்கும் அவன் அவளோடு எப்படியும் நெருங்கி இருந்தால் போதும் என்ற பேராவலில் அவளுக்கு அடிமைபோலவே மாறிவிடுகிறான். அவனை அவள் எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும்கூட அவனால் அவளைப் பிரிய முடியவில்லை. மும்பையில் இருக்கும் அவள் ஆண் நண்பனைப் பார்க்க அழைத்துப் போகும்வரை அவளிடம் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பு அவனை நடத்திச் செல்கிறது.

அங்கிருந்து அவன் தன்னை லக்ஷத்தீவுகளுக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அங்கே அவர்கள் தங்கும் ஹோட்டல் அறையில் கிடைக்கும் புத்தகம் ஒன்றில் 1915ல் வாழ்ந்த ஏந்திழை என்பவளின் கதை சொல்லப்படுகிறது. பேரழகியான ஏந்திழையிடம் ஏற்பட்ட ஈர்ப்பினால் அவளை மணக்க விரும்பும் வெள்ளைக்காரத் துரை ஒருவன் அவளுக்காக மலைமீது ஒரு மாளிகையைக் கட்டுகிறான். ஆனால் அவன் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது அவிழ்த்துவிடும் வன்கொடுமை அவனுக்கு எதிராகத் திரும்புகிறது. இந்தக் கதையின் நாவலின் நடுப்பகுதியில் வருகிறது.

கதைக்குள் கதை என்ற முறையில் நாவலில் மூன்று கதைகளையும் இன்னும் பல உபகதைகளையும் இணைத்து மனிதர்களிடையே ஏற்படும் பாலின ஈர்ப்பின் விளைவுகளின் மீதான நீண்ட தியானமாக ஆத்மார்த்தி இந்த நாவலை எழுதியுள்ளார் என்றே தோன்றுகிறது.

மனிதர்களிடையே ஏற்படும் பாலின ஈர்ப்புத் தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. அது இயல்பில் மிகச் சாதாரணமான, தினசரி துர்க்குணங்களையுடைய மனிதர்களை அசாதாரணமான செயல்களைச் செய்ய வைக்கிறதை ஆத்மார்த்தி மிகத் திறம்படக் காட்டுகிறார். சாதாரண பெண்லோலனாகத் தோன்றும் கதாநாயகன் தன்னை ஈர்த்த பெண்ணுக்காக அடிமைக் கோலத்தை ஏற்றுக் கொள்கிறான். ஏந்திழையிடம் ஏற்பட்ட ஈர்ப்பினால் வன்முறைப் பிரியனாகவுன் அதிகார வெறியனாகவும் காட்டப்படும் ஷெனாய் துரை காலனித்துவ ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்தியப் பெண்ணை மணந்து அவள் குடும்பத்தாரையும் நெருங்கிய உறவுகளாக ஏற்றுக் கொள்ளாத் துணிகிறான்.

கதாநாயகன் வாகனத்தால் மோதாமல் ‘காப்பாற்றிய’ பெண் அதிகாரியின் ஈர்ப்பை முழுமையாகச் சொல்லாமல் கதாநாயகனை உயர்த்தியதை மட்டும் சொல்லி நாவலை முடித்தது ரசிக்கத்தக்கது. ஈர்ப்பு என்றாலே அழிவு அல்லது துன்பம் என்று கதாநாயகனிம் முந்திய காதல் கதையும் ஷெனாய் துரையின் கதையும் முடிந்திருக்க இவள் ஈர்ப்பு மட்டும் எப்படி வெற்றிகரமாகத் தொடரும் என்ற கேள்வியை வாசகர்களின் மனதில் மிகத் திறமையாக விதைத்துவிட்டுப் போகிறார் ஆத்மார்த்தி. நாவலின் இறுதியில் கதாநாயகனின் வார்த்தைகளும் அவள் ஈர்ப்பு தோல்வியடையக்கூடும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன.

ஆத்மார்த்தியின் பெரும் பலம் அவருடைய கதை மொழி. (இவர் எழுத்து மொழி தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது). எந்தெந்த கதாபாத்திரத்துக்கு எந்தெந்த மொழி சரியாக வருமென்று மனிதன் துல்லியமாகக் கணித்து வெற்றி பெறுகிறார். சுகமான நடை. சரசத்தைச் சொன்னாலும் வன்முறையைச் சொன்னாலும் சரியாகப் பொருந்திப் போகும் மொழிநடை.

இந்த நாவலின் அடுத்த பலம் 1915ல் நடக்கும் கதைக்காக ஆத்மார்த்தி சித்தரிக்கும் வித்தியாசமான வரலாற்றுச் சூழலும், அந்தக் காலத்து வன்முறை, வெள்ளைக்காரர்களுக்கும்-இந்தியர்களுக்கும், இந்தியர்களுக்கும்-இந்தியர்களுக்கும் இடையே உள்ள சமூக உறவுகளும் சிக்கல்களும்தான்.

வாசகனை வசீகரிக்கும் வகையில் வருணனைகள். இருநூறு பக்கங்களே உள்ள நாவலுக்குள் உலவும் பரிதி, சுந்தரேச ஐயர், சொக்கர் நம்பி, வள்ளி, ஜெசிக்கா என்று நினைவில் தங்கும்படி பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், அவர்களின் கதைகள். அனைத்தும் மூலக்கதைக்குத் தொடர்புடையதாகவே இருக்கும் வகையில்.

இது ஒன்றே போதும் ஆத்மார்த்தியின் கதை யாக்கும் திறமையைச் சொல்வதற்கு. எந்த இடத்திலும் சொதப்பாத, துல்லியமான கதாபாத்திரத் திட்டமிடல்.

கதையைச் சுமார் ஆயிரம் வார்த்தைகள் மட்டுமே உடைய சிறு சிறு அத்தியாயங்களாகப் பிரித்திருப்பது நல்ல உத்தி. நீளமாக இல்லாமல் குறைந்த வார்த்தைகளே இருக்கும் 43 அத்தியாயங்கள் வாசிக்கும் ஆர்வத்தை நிச்சயம் கூட்டுகின்றன. அதுபோலவே சில அத்தியாயத் தலைப்புகள் அற்புதம்.

ஆனால் சில தலைப்புகளால் என்ன நடக்கப் போகிறது என்று வாசகனுக்குத் தெரிந்த் விடுவது பலவீனமாகத்தான் தோன்றுகிறது. உதாரணத்துக்கு 37 – “தகர்த்தல்” மற்றும் 38 – “விடாதே ஷெனாய்”. கதையை வாசிப்பவர்கள் இந்தத் தலைப்புகளைப் படித்தவுடனேயே அடுத்த நான்கைந்து பக்கங்களில் என்ன சொல்லப் போகிறது என்று ஊகித்துக் கொள்வார்கள். இந்தத் தலைப்புகள் நிச்சயம் ஸ்பாய்லர்களே.

ஆண்களின் காமத்தை வியக்கும் வகையில் “தனித்த மலர்” என்று வர்ணித்து அத்தியாயத் தலைப்பாக்கியவர் இந்த அத்தியாயத் தலைப்புகளையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

குறையென்றால் இரண்டுதான்.

(1) என்னதான் ஆசைப்படும் வெள்ளைக்காரன் அந்தஸ்தில் உயர்ந்தவனாக இருந்தாலும் மற்ற வெள்ளைக்காரர்கள் காலனியத் திமிர் உச்சத்தில் இருந்த காலத்தில் தங்களில் ஒருவன் இந்தியப் பெண்ணைக் கட்டிக் கொள்வதை ஒப்புக் கொள்வார்களா? மதராஸ் ஆங்கிலக் கிளப்பில் பெண்ணின் சொந்தக்காரப் பையனுக்கு நுழையவும் வெள்ளைக்காரர்களோடு வேட்டையாடவும் அனுமதிப்பார்களா?

(2) இது குறையல்ல. ஆதங்கம். ஆத்மார்த்தியை யாரேனும் 200 பக்கங்களுக்குள் நாவலை முடிக்கச் சொன்னார்களா தெரியவில்லை. ஷெனாய்-ஏந்திழை கதையை இன்னும் பல நுணுக்கங்களோடு விரித்து எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவ்வளவு நன்றாகப் போய்க் கொண்டிருந்த கதை சட்டென்று முடிவதுபோல் தோன்றுவது வருந்தத்தக்கது.

அதுபோல் பொன்னியின் கதை என்ன ஆனது? அதுபோலவே துபாய்க்காரன் கதையும், வள்ளியின் கதையும் முழுமை பெறாமல் போனதாகவே தோன்றுகிறது. அவ்வளவு வலுவான கதாபாத்திரமாக தொடங்கிய பரிதி ஏன் இவ்வளவு லகுவாகச் சாகடிக்கப்பட்டான்? மொத்தத்தில் நாவல் அவசரத்தில் முடிக்கப்பட்டதோ என்ற எண்ணத்தை என்னால் கடக்க முடியவில்லை. இது மேற்கூறிய காதாபாத்திரப் படைப்புகளின் வலிமையால் எனக்குள் ஏற்பட்ட அதிகமான எதிர்ப்பார்ப்பாகக் கூட இருக்கலாம்.

மொத்தத்தில் ஆத்மார்த்தியின் ‘ஏந்திழை’ மிகத் திறமையாக, வாசகனை உள்ளிழுத்துச் சிரமமே இல்லாமல் அழைத்துச் செல்லும் மொழியாற்றலோடும் கதை சுவாரஸ்யங்களோடும் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல்.

நிச்சயம் வாசித்துப் பாருங்கள்.
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s