உருது தேர்வுக்குப் படிப்பதில் ஏழு நாட்கள் ஓடிவிட்டன. இத்தனைக்கும் தெரிந்த இந்திதான். இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் ஆடம்பரமான அலங்காரங்கள் மிகுதியாகவுள்ள இந்தி. உருதுவில் பெரிய பிரச்சனையே எழுத்து வடிவம்தான். மெனக்கெட்டு மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். மற்றபடி இப்படி மனப்பாடம் செய்வதால் பயன்கள் இல்லாமல் இல்லை. அர்த்தம் புரியாவிட்டாலும் அரபியும் பாரசீகமும் வாசித்துவிடலாம். கொஞ்சம்போல் தென்கிழக்காசிய வட்டாரங்களில் வழக்கத்திலிருந்து ஜாவி மொழியையும்.
அதற்குள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. நண்பர் ஒருவர் கவிதைத் தொகுப்புக் கொண்டு வரப்போகிறேன் என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அடுத்த வருடம் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை அதிகமாக இருப்பதால் இத்தகைய புத்தகங்கள் புறப்படுவது இயல்வுதான்.
வெய்யிலில் கொஞ்சம், இசையில் கொஞ்சம், நரனில் கொஞ்சம் பிய்த்துப் போட்ட கவிதைகள். பேண்ட் போட்டுப் பழகாதவன் பேண்ட்-ஐ வயிறு வரை தூக்கி அணியும்போது காலில் உள்ள சாக்ஸும் தெரிவதுபோல் இடையிடையே அப்துல் ரகுமானும், வைரமுத்துவும் எட்டிப் பார்த்தார்கள். கொடுமை என்னவென்றால் சில கவிதைகளில் நால்வரின் சாயலும் மாறி மாறி வந்திருந்தது.
நவீனக் கவிதைகளின் பலவீனமே பல நேரங்களில் அது யார் எழுதியது என்று தெரியாமல் போவதுதான். நண்பர் எழுதிய கவிதைகளில் அந்தச் சிக்கல் இல்லை. குறிப்பிட்ட வரிகளை வெய்யில், தேவதேவன், இசை எழுதினார்கள் என்று சொல்லியே விடலாம். ஆனால் மொத்தமாக இந்தத் தொகுப்பை நண்பர்தான் எழுதினார் என்று சொல்ல முடியாது.
விஸ்லாவா சிம்போர்ஸ்கா ஆரம்ப நாள்களில் அளித்த பேட்டி ஒன்றில் மிஸ்கிதவிட்ஸ், ஸ்லோவாக்கி தொடங்கி மிலோஷ், யாகலியூஸ்கி வரை சிறந்த கவிஞர்கள் நிரம்பியுள்ள போலந்து கவிதை சூழலில் தனது சொந்தக் குரலைத் தீர்மானிக்க அவர் பட்ட சிரமங்களைச் சொல்கிறார்.
கைரேகைபோலவே ஒவ்வொரு கவிஞரின் கவிதை உள்ளடக்கமும் படிமங்களும் மொழியும் இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார் என்று ஞாபகம்.
புனைவெழுத்தில் ஒருவர் மொழியை அப்பட்டமாகப் பின்பற்ற முயன்றாலும் அது பெரும்பாலும் நிறைவேறுவதில்லை என்றே நினைக்கிறேன். படைப்பின் நீளமே அத்தகைய முயற்சிகளை முறியடித்து நீர்த்துப்போக வைத்து விடுகிறது.
ஆனால் கவிதை வெளித் தாக்கங்களை அப்பட்டமாய்க் கொண்டு வருவதற்கும், ஒன்றைப் போல் மற்றொரு கவிதை இருப்பதற்கும் சாத்தியங்களை ஏற்படுத்தித் தருமளவுக்கு லகுவான வடிவமுடையது.
இதில் தலையாய சிக்கல் வாசிப்பு அதிகமாகியிருக்கிறது என்பதுதான். இது நல்ல விஷயம் என்றாலும்கூட ஒன்றை வாசித்துவிட்டு மற்றொன்றை எழுதும்போது முந்தியதின் சாயல் வராமல் இருக்க நிறைய முயற்சி எடுத்துத்தான் ஆக வேண்டும்.
இந்த முயற்சிக்கு இரண்டு விஷயங்கள் உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒன்று, என்னை நேரடியாகப் பாதித்த விஷயங்களையே கவிதையாக்குவேன் என்று முடிவு செய்வது.
இரண்டு, என்னைச் சுற்றியிருக்கும் சூழல்களையும் பொருள்களையும் மொழி வழக்குகளையும் மட்டுமே என் கவிதைக்குள் கொண்டு வருவேன் என்று முடிவு செய்வது.
சிங்கப்பூரில் அமர்ந்து கொண்டு உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்தும்படி கவிதை எழுதுவேன் என்ற எண்ணம் சிறப்புத்தான் என்றாலும் அது எவ்வகையில் தனித்தன்மையான இலக்கியம் உருவாக உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.
நண்பர் நல்ல ரசிகர். போல இருப்பதுதான் போலி என்று அவர் உணராமலா போய் விடுவார்?