ஜலால் உத்-தீன் ரூமியின் ‘மஸ்நவி’ என்ற நீண்ட நெடிய கவிதையிலிருந்து 55 சிறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் ‘தமிழ் அலை பதிப்பகம்’ இசாக் கவிதைகளாக எழுதியிருக்கிறார். சிங்கப்பூர் முனைவர் ஹெச். எம். சலீமின் மொழிபெயர்ப்போடு அந்தக் கவிதைகள் ‘மஸ்நவி துளிகள்’ என்ற பெயரில் சிங்கப்பூர் இளம்பிறை பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
நூலில் அறிமுக நிகழ்வு இன்று நடந்தது. என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.
‘மஸ்நவி எ மாநவி’ என்ற முழுப்பெயருடைய மூல நூலை 1206ல் பிறந்த ரூமி தனது வாழ்க்கையின் கடைசி பகுதியில் – 1253ல் – தொடர்ந்து ஆறு தொகுதிகளாக எழுதினார். 1273ல் நிகழ்ந்த அவருடைய மரணத்தினால் ஆறாம் தொகுதி முற்றுப் பெறாமலேயே நிற்கிறது.
மஸ்நவி என்பது பாரசீகத்திலும் ஆப்கானஸ்தான் மத்திய ஆசிய ஆகிய பகுதிகளிலும் அந்நாளில் இருந்த கவிதை வடிவம். இவ்வடிவத்தில் கவிதை இரண்டிரண்டு வரிகளுடைய கண்ணிகளாக ஒவ்வொரு வரியின் ஈற்றுச் சீரிலும் மோனை வரும்படி rhyming couplets -ஆக எழுதப்படும்.
மஸ்நவி வடிவத்தை ரூமிக்கு முன்னே சூஃபி பெருங்கவிஞர்களாகக் கருதப்பட்ட சானாய், ‘பறவைகளின் மாநாடு’ என்ற நூலை எழுதிய அத்தர் ஆகியோர் கையாண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ரூமி அந்த வடிவத்தை உள்ளட்டக்கத்தின் சிறப்பாலும் கவிதை மொழியாலும் இன்னும் உச்சத்துக்கு எடுத்துச் சென்றார்.
மஸ்நவி எ மாநவி என்றால் ஆன்மீகக் கண்ணிகள் என்று பொருள்.
ரூமியின் மஸ்நவியில் 25000 கண்ணிகள் இருக்கின்றன. கதைகள், திருமறை குரான் நபிகள் பெருமானாரின் ஹதீஸ்களைக் குறித்த தியானங்கள், ஆன்மீகப் போதனைகள் ஆகியவற்றை அவருடைய இந்த நெடுங்கவிதை உள்ளடக்கியிருக்கிறது.
வெளிப்படையாகப் பார்க்கும்போது அவை வெறும் கதைகளாகவும் போதனைகளாகவும் தெரிந்தாலும் அவற்றின் உண்மையான நோக்கம் வாசகர்களிடையே இறைவன் மீது காதலையும் மனிதர்கள்மீது பேரன்பையும் உருவாக்குவது.
இந்தக் காதலையும் மனிதர்மேல் இந்தப் பேரன்பையும் பெற்றுக் கொள்ள ரூமி கொடுத்த விலை அதிகம்.
இன்றைய தாஜிகிஸ்தான் பகுதியில் பிறந்த ரூமி தன் வாழ்நாள் முழுவதும் எந்த இடத்துக்கும் மொழிக்கும் சொந்தம் கொண்டாட முடியாமல் அந்நியராகவும் யாத்திரிகராகவுமே வாழ்ந்து முடித்தார். 6 வயதில் தன் பிறந்த ஊரான மத்திய ஆசியாவிலிருக்கும் பால்க் நகரை விட்டுப் பிரிந்த ரூமி பின்னர் மத்திய ஆசியாவின் புக்காரா, சமர்கண்ட், உஸ்பெக்கிஸ்தான், ஈராக், அரேபியா, சிரியா, கடைசியில் துருக்கியின் கோன்யா நகரம் என்று ஓயாமல் பயணித்தார். தன் சொந்த ஊரையும் பிரதேசத்தையும் விட்டுப் பிரிந்த பிறகு அந்நகரமும் ராஜ்ஜியமும் கென்கிஸ் கானின் மோங்கோல் படைகளிடம் போனதால் ரூமி மீண்டும் தனது தாய்நாட்டைப் பார்க்கவே இல்லை.
நித்திய யாத்திரை என்பது ஆன்மீக நிலை. எதிலும் பற்றில்லாதவராக வாழ இந்தப் புறச்சூழல் ரூமியைப் பழக்கியது. ஊரும் மொழியும் மாறிக் கொண்டே இருக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளான ரூமிக்குப் பெயரும் சொந்தமாக இருக்கவில்லை. இப்போது நாமெல்லோரும் அவரை அழைக்கும் ரூமி என்ற பெயர்கூட அவர் ரோம சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதியாகக் கருதப்பட்ட துருக்கியில் வாழ்ந்த காரணத்தால் ‘ரூமிலிருந்து வந்தவன்’ என்ற பொருளில் அவர் ரூமி என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
உண்மையில் அவர் இயற்பெயர்கள் ஜலால் உத் தீன் (மார்க்கத்தின் பிரகாசம்) மற்றும் முஹம்மது.
இறைவனைத் தவிர ரூமிக்கு சொந்த ஊரோ, மொழியோ, பெயரோகூட இருக்கக் கூடாது என்பது இறைவனின் விருப்பம் போலும்.
மஸ்நவியில் உள்ள இரண்டு கவிதைகள் இப்படிச் சொல்கின்றன (இசாக்கின் மொழிபெயர்ப்பில்):
“நான் என்னைப் பற்றியே
அறியாமையொ இருக்கிறேன்
என்னுடைய இருப்பின்
ஒரு கடுகளவு அறிகுறியும்
என்னிடம் இல்லாமல் இருக்கிறேன்”
“அந்தரங்கமான இந்த இசையை
வெளிப்புறச் செவிகளால்
கேட்க முடியாது
ஏனெனில் வெளிப்புறச் செவிகள்
ஒழுங்கீனச் சொற்களால் அசிங்கப்பட்டுவிட்டன”
ரூமி தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு எந்த அளவுக்கு அந்நியராய் இருந்தார் என்று விளக்குவதற்குச் சுவையான ஒரு கதை உண்டு. 1273ல் கோன்யா நகரில் ரூமி காலமான போது அவர் உடலை அடக்கம் செய்ய மன்னன் அலாவுதீன் கய்யோபாத் ரூமியின் தந்தையை அடக்கம் செய்த அதே ரோஜா தோட்டத்தில் இடம் ஒதுக்கியிருந்தான். ரூமியின் உடல் அடக்கத்தைக் காண வந்த எராக்கி என்ற சூஃபி கவிஞரிடம் ரூமியைப் பற்றிக் கேட்ட போது அவர் இப்படிச் சொன்னார்:
“யாரும் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் அந்நியராகவே உலகத்துக்குள் வந்தார், அந்நியராகவே கிளம்பிப் போனார்.”
இஸ்லாமிய மார்க்க அறிஞராக இருந்த தன் தந்தையான பாஹா வாலாத்-தைப்போலவே ரூமியும் அறிஞரானார். ஆனால் சிறு வயதிலிருந்தே அவருக்குப் புத்தகப் படிப்பினால் மட்டும் இறைவனின் அன்பைப் பெற முடியாது என்ற எண்ணம் மனதில் குடி கொண்டு விட்டிருந்தது. 10 வயது ரூமியின் வாழ்வில் மற்றுமொரு சுவையான சம்பவம்.
துருக்கியிலிருந்த மால்தாயா நகரத்தைச் சென்று சேர்ந்த வாலாத்-தும் ரூமியும் அங்கு வசித்து வந்த இஸ்லாமியப் பேரறிஞரான இப்னு அரபியைக் காணச் செல்கிறார்கள். இப்னு அரபி அந்தத் தலைமுறையின் மிகப் பிரசித்தி பெற்ற அறிஞர். இஸ்லாமிய இறையியல் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் பல முக்கிய நூல்களை எழுதியவர். ரூமி தன் தந்தையோடு அவரைப் பார்க்கப் போனபோது இப்னு அரபி தனது மாணவர்களோடு தான் எழுதிய புத்தகங்களிலிருந்து சில விஷயங்களை ஆழமாக விவாதித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஸாகி என்ற பாடகன் விவாதம் நடக்கும் அறைக்குள் நுழைந்து மிகுந்த மகிழ்ச்சியான பாடல் ஒன்றைப் பாடினானாம். அதைப் பார்த்த ரூமி
“என்ன விசித்திரம்! இப்னு அரபியின் தத்துவத்தைவிட ஸாகியின் தத்துவம் சிறப்பாக இருக்கிறது” என்றாராம்.
தனது தந்தை முன்னால் போக ரூமி அவருக்குப் பின்னால் போவதைக் கண்ட இப்னு அரபி தனது பங்குக்கு “குளம் முன்னால் போகிறது. அதற்குப் பின்னால் சமுத்திரம் போகிறது” என்று சொன்னதாகச் சொல்வார்கள்.
ரூமி ஸாகியின் பாடலைப் பாராட்டியதில் காரணம் இருந்தது. அரபி மொழியில் இதயம் என்பதற்கு ‘கல்ப்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இங்கு கல்ப் என்பது வெறும் தசைக்கோளம் அல்ல. மனிதனின் அடிப்படை ஆதாரம். இறை நேசம் என்னும் நெருப்பால் அதை முழுக்க உருமாற்றி பற்றி எரியவிடுவதுதான் மனிதனின் குறிக்கோளாக இருக்க முடியும். அந்த இறைநேச நெருப்பின் வெளிப்பாடே இன்றுவரை சூஃபிக்கள் பின்பற்றும் பாட்டும் நடனமும்.
இதயம் உருமாற வேண்டியதின் தேவையை ரூமி மஸ்நவியில் இப்படிச் சொல்கிறார்:
“மனம் ஒன்றாமல்
ஆன்மாவைத் தொடாமல்
உதடுகளிலே தவழும்
வார்த்தைகள் எல்லாம்
குப்பைக் கூளங்களிலே முளைக்கும்
பசுமை போன்றவை”
புத்தக அறிஞராக இருந்த ரூமி கோஞாவில் ஷாம்ஸ் எ தப்ரீஸ் என்ற சூஃபி ஞானியின் பரிச்சயம் கிடைத்த பின்பு முற்றிலும் மாறினார். கனிந்து இறைநேசராக உருவெடுத்தார்.
ஆனால் இத்தகைய கனிவு எளிதில் கைவரப் பெறாதது. இறைவனின் கட்டளைகளை குறைவில்லாமல் நிறைவேற்றுவதிலும், இரவில் தூங்காமல் இறைவனைத் துதிப்பதிலும், நோன்பு வைப்பதிலும் ரூமி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
“மிகவும் செல்லமாக வளர்ந்த சிலர்
ரோஜா இதழ் போன்ற கன்னங்களும்
நிலவைப் போன்ற முகமும் கொண்ட
அழகியின் காதலுக்காக
முட்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்”
ரூமி புல்லாங்குழல் என்ற படிமத்தை அதிகம் பயன்படுத்துவதற்கும் இதுவே காரணம். மூங்கில் உடைக்கப்பட்டு, துளையிடப்பட்டு துன்பம் அனுபவித்துத்தான் இனிய இசையைத் தருகிறது.
கவிதைகளை எழுதியதை மீறியும் கவிஞர் இசாக், முனைவர் சலீம் ஆகியோரது வெற்றி மஸ்நவி என்ற பெருங்கடலில் இருந்து வரிகளை எப்படியோ பொறுக்கியெடுக்காமல் இப்படி ரூமியின் ஆன்மீக ரகசியங்களைக் காட்டும் வரிகளைப் பொறுக்கியெடுத்ததில்தான் இருக்கிறது.
நல்ல முயற்சி. மஸ்நவியின் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் பதிப்பகத்தாரும் 2009இலும் 2016இலும் ‘கிதாபுல் மஸ்நவி’ என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்கள்.