இலக்கிய விமர்சனக் கட்டுரைகளைவிட இலக்கிய விமர்சனப் பேச்சுகள் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றன.
வாரத்துக்கு ஒரு முறையாவது எங்கேனும் இலக்கியம் தொடர்பான பேச்சுக்கள் கேட்க முடிகிறது. ‘காத்திரம்’, ‘தீவிரம்’, ‘கனகச்சிதம்’ என்ற அர்த்தமில்லாத வார்த்தைகளைத் தள்ளிவிட்டால் எல்லா இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் மிக ஜோராகவே இருக்கின்றன.
இன்றைய விமர்சனக் கட்டுரைகளை விசுவாசத்தோடு ஒருவன் படித்துவிட்டால் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்நாளில் வெளிவரும் படைப்புகளின் தரத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ என்ற தத்துவத்தை யார் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ நான் கடந்த ஒரு மாதமாகப் படித்த விமர்சகர்கள் எல்லோரும் பின்பற்றுகிறார்கள்.
நிறைய வாசியுங்கள் என்று ஏன் பாவப்பட்ட எழுத்தாளர்களைத் துன்பப்படுத்துகிறோம் என்றே தெரியவில்லை. அதற்குப் பதிலாக விமர்சகர்கள் என்று சொல்லிக் கொள்வோரை வற்புறுத்தலாம். ஒரு புத்தகத்தைப் பற்றி வேறெந்த இலக்கியப் பரிச்சயமும் இல்லாமல் 500லிருந்து 1000 வார்த்தைவரை வெறும் சாரமற்ற வார்த்தைகளாகவே இவர்களால் எழுத முடிகிறது.
அதில் 80% கதையையோ கவிதையையோ மறுபடி சொல்வதில் போய் விடுகிறது.
மற்றவர்கள் ஓரிரு வரிகளில் பஞ்ச் லைனாகவே எழுதி கோமாளித்தனம் செய்கிறார்கள். நான் பெயர்க் குறிப்பிட விரும்பாத மற்ற விமர்சகர்கள் எதிர்மறையான விமர்சனம் என்றால் என்ன புத்தகம் எந்த எழுத்தாளர் என்று மறந்தும் பெயர் குறிப்பிடாமல் ஆயிரம் வார்த்தைகளையும் முடித்துவிடுகிறார்கள்.
இதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் விமர்சகர்களாக மாரிவிடுவார்கள். இலக்கியம் வளரவில்லையே என்று அப்புறம் முறையிடக் கூடாது.
அதனால்தான் ஹாரல்ட் ப்ளூமைவிட நபோகோவ்வும் ஜோசப் ப்ராட்ஸ்கியும் நல்ல விமர்சகர்கள் என்று நான் கருதுகிறேன்.
ப்ளூம் இரண்டு வகைகளில் குறையுள்ளவராகத் தெரிகிறார். ஒன்று, அவர் சில முன்முடிவுகளோடுதான் எப்போதும் தனது இலக்கியம் குறித்த விமர்சனங்களை அவர் முன் வைப்பதாக எனக்குத் தோன்றும். அவர் மிக அதிகம் வாசித்தவர், ஆழமாக வாசித்தவர் என்பதால் அவர் கருத்துகளும் ஆழமானவையாக, பல நேரங்களில் பயனுள்ளவையாக இருக்கும் போதிலும் முன்முடிவுகள், முன்முடிவுகள் தானே?
இரண்டு, அவர் விமர்சனங்கள் அமெரிக்க, பிரிட்டானிய படைப்புகளுக்குப் பாரபட்சமானவை. ப்ராட்ஸ்கியும், நபோகோவ்வும் ஐரோப்பிய படைப்புகளுக்குப் பாரபட்சம் காட்டவில்லையா என்று கேட்பதில் அர்த்தமில்லை. அமெரிக்காவில் தாமஸ் பிங்கோன்னைத் தவிர வேறெந்த எழுத்தாளர் செவ்விலக்கியத் தகுதிக்கு உரியவர் என்று எனக்குத் தெரியவில்லை.
பிரிட்டனில் உள்ள எழுத்தாளர்களில் அதுகூட என்னால் சொல்ல முடியவில்லை. ஜான் பான்வில் ஐரிஷ்காரர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
விமர்சனங்களில் ப்ராட்ஸ்கியும் நபோகோவ்வும் வரலாற்று் மற்றும் கலாச்சார நகர்வுகளை ஆராய்ந்து ஒரு படைப்பை ஒரு குறிப்பிட்ட சூழலின் வெளிப்பாடாக விமர்சனம் செய்வது எனக்குச் சிறப்பாகப் படுகிறது. அது போலவே ஒரு தத்துவ தரிசனத்தின் அடிப்படையில் செய்யப்படும் அவர்களது விமர்சனமும். இவை அனைத்தும் ஒரு படைப்பை வெறும் ஒற்றை வெளிப்பாடாக அணுகாமல அவற்றுக்கு ஸ்திரமான ஒரு contextஐ தருகின்றன.
ப்ளூமும் இத்தகைய contextஐத் தருகிறார் என்றாலும் நபோகோவ்வும் ப்ராட்ஸிகியும் தரும் பரந்த பார்வை அவருடைய எல்லாக் கட்டுரைகளிலும் உள்ளதா என்பது கேள்விக்குறி.
நம் காலத்து விமர்சகர்களுக்கு வருவோம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு படைப்பை விமர்சனம் செய்வதைக் காட்டிலும் அது பிறந்த சூழலை, அது பங்கு கொள்ளும் இலக்கிய பாரம்பரியத்தை, அதன் தத்துவ தரிசனத்தை ஆராய்ந்து சொல்லும் விமர்சனங்களே என்னைப் பொறுத்தவரை சிறப்பாகப் படுகின்றன.
ஏன் இந்தத் திடீர் விமர்சனம் என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மையில் இது விமர்சனமல்ல. பல பேர் இப்போது எழுதுவது போன்று வெறும் வாசிப்பு அனுபவம்தான்.