போர்ஹெஸ் – கலை கலைக்காகவே

ஹொர்கே லூயிஸ் போர்ஹெஸ் தனது ஆரம்ப நாட்களில் முன்னெடுத்த ஸ்பானிய அல்ட்ராயிஸம் என்ற அழகியல் கோட்பாடு ‘பழமையை விலக்கிப் புதுமையைப் புகுத்துவோம்’ என்ற முழக்கத்தை அடிநாதமாகக் கொண்டிருந்தது.

ஆனால் ஸ்பானிய அல்ட்ராயிஸம் பொதுவாக எல்லாப் பழமைகளையும் எதிர்க்கவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு முன்னால் தோன்றிய  ரோமாண்டிஸம் மற்றும் குறியீட்டியல் படைப்புகளின் கட்டுப்பாடில்லாத உணர்ச்சி வெளிப்பாடுகளையும் வெற்று அலங்காரங்களையும் அது குறிப்பாக எதிர்த்தது.

போர்ஹெஸ் அல்ட்ராயிஸத்தின் அடிப்படைகளை விளக்குவதற்காக 1921ல் “அல்ட்ரா அறிக்கை” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.  அதை ஜாக்கோபோ சுரேதா, ஃபோர்டுனியோ போனாநோவா, ஹுவான் அலோமார் ஆகிய மூவர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இந்தக் கட்டுரையில்தான் ஸ்பானிய அல்ட்ராக்களின் அடிப்படை முழக்கவரியான “படைப்பு படைப்புக்காகவே” என்ற வாசகம் கையாளப்படுகிறது.

இலக்கியப் படைப்பு என்பது சுற்றியிருக்கும் சூழ்நிலைகளையோ ஒரு மனிதனின் உள்ளத்தின் உணர்வுகளையோ தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் நிலைக்கண்ணாடியோ, ஊரையோ மனிதர்களையோ திருத்தப் பயன்படும் ஊடகமோ அல்ல என்று போர்ஹெஸ் சொல்கிறார்.

மோசமான கவிதைகளையும் கதைகளையும் எழுதுபவர்கள் – போர்ஹெஸின் கூற்றுப்படி – வெறும் நிலைக்கண்ணாடிகளைப்போல் சுற்றியிருக்கும் பொருள்கள் மற்றும் மனிதர்களின் மனவோட்டங்களையும் துல்லியமாகச் சித்தரித்துக் காட்டிவிட்டுச் சிறந்த படைப்புகளைத் தந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

அல்லது படைப்பில் வாசகர்களுக்கு ஏதேனும் படிப்பினை இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசிரியர் கூற்றாகவோ கதாபாத்திரங்களின் கூற்றாகவோ வலிய போய் படைப்புக்குள் போதனைகளைப் புகுத்துகிறார்கள்.

அல்ட்ராயிஸக் கொள்கைப்படி சிறந்த இலக்கியம் முப்பட்டைக் கண்ணாடியைப் போன்று சுற்றியிருக்கும் சூழலையும் மனிதர்களின் போக்குகளையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றை அழகியல் அம்சங்கள் நிறைந்த படைப்புகளாய் வெளியிடுகிறது.

படைப்பில் தென்படும் அழகியல் அம்சங்களை மெருகேற்றுவதே அல்ட்ராயிஸக் கொள்கையின் குறிக்கோள்.

விமர்சனம் என்பது அழகியல் அளவில் படைப்பு வெற்றிப் பெற்றுள்ளதா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே அன்றி ரோமாண்டிஸக் கொள்கையின் அடிப்படையில் படைப்பாளியின் எண்ணத்தின் தூய்மையையோ, நோக்கத்தின் பெருமையையோ, படைப்புக்காகப் படைப்பாளி பட்ட பாடுகளையோ கௌரவிப்பதாக இருக்கக் கூடாது.

அதாவது இலக்கியம் என்பது எல்லா வித்தைகளையும் போலவே செய்து முடித்த வேலையின் தரத்தின் அடிப்படையில் அலசப்பட வேண்டும் என்கிறது அல்ட்ராயிஸம்.

படைப்பில் ‘தொழில் சுத்தத்தை’ எட்டிப் பிடிக்க போர்ஹெஸ்-சும் அவருடைய சக அல்ட்ராயிஸ்டுகளும் நான்கு விதிகளை முன்மொழிந்தார்கள்:

(1) சந்தக் கவிதையை அதன் ஆதி வடிவமான உருவகத்துக்குக் கொண்டு போவது

(2) முக்கிய வார்த்தைகளுக்கு இடையே உள்ள இணைக்கும் சொற்கள் மற்றும் சொற்றொடர்களை ஒழித்துக் கட்டுவது

(3) படைப்பில் எல்லா அலங்காரங்களையும், சுய விவரிப்புகளையும் முற்றாக ஒழிப்பது

(4) படைப்பில் வரும் ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களை ஒன்று சேர்த்துப் படிமங்கள் தரக்கூடிய பொருளை விரிவு படுத்துவது

போர்ஹெஸ் 1920களில் எழுதிய ஆரம்பக் காலச் சிறுகதைகளும் கவிதைகளும் இந்த அல்ட்ராயிஸக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த முயன்றன.

ஆனால் பின்னாளில் போர்ஹெஸ் அல்ட்ராயிஸ அழகியலை நிராகரித்துவிட்டு ‘ஆலெஃப்’, ‘சிட்டி ஆஃப் தி இம்மோர்டல்ஸ்’ போன்ற சிறுகதைகளில் வரும் மாய யதார்த்த வகை எழுத்தில் கவனத்தைச் செலுத்தினார்.

கொள்கை என்ற வகையில் நிராகரிக்கப்பட்டாலும் அல்ட்ராயிஸத்தின் அடிப்படை விதிகள் இன்றும் வெற்று உணர்ச்சிக் கோலாகலங்களில் சிக்கியிருக்கும் சமூக வலைதளப் படைப்புகளுக்கும் விமர்னங்களுக்கும்  எதிராக நல்ல பாதுகாப்பாகவே இருந்து வருகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s