‘விலங்குப் பண்ணை’, ‘1984’ நாவல்களால் மட்டும் ஜார்ஜ் ஆர்வெல்-ஐ (இயற்பெயர்: எரிக் ஆர்தர் ப்ளேர்) அறிந்தவர்கள் அவருடைய முதல் நாவலான ‘பர்மிய நாள்களை’ வாசிப்பதும் அவசியம்.
அதிகம் பேசப்படும் முன் குறிப்பிட்ட இரண்டு நாவல்களைவிட 1934ல் வெளிவந்த ‘பர்மிய நாள்கள்’-இல் ஆர்வெல்லின் கதைகூறலும், ஆங்கில உரைநடையும் சிறப்பாக இருக்கின்றன என்பது என் கருத்து.
என்னைப் பொறுத்தவரை ‘விலங்குப் பண்ணை’, ‘1984’ இரண்டும் அடிப்படையில் சர்வாதிகரத்துக்கு எதிரான ஆர்வெலின் அரசியல் கருத்துகளுக்குப் பிரச்சார வாகனங்களாகவே திகழ்கின்றன.
நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க வரிகளை கொண்டிருப்பதாலும் (‘நான்கு கால்கள் நல்லது, இரண்டு கால்கள் கெட்டது’, ‘பிக் பிரதர்’) சர்வாதிகார அரசியலமைப்பை அதன் வன்முறையோடும் ஆழ வேரூன்றிய கள்ளத்தனங்கள், பொய்ப் பிரச்சாங்களோடும் முழுமையாக வாசகர்கள் முன் கொண்டு வரும் இயல்பினால் ‘விலங்குப் பண்ணை’ மற்றும் ‘1984’ பெரும் வெற்றியைப் பெற்றன.
ஆனால் ‘பர்மிய நாள்கள்’ இந்தியாவிலும் பர்மாவிலும் நடந்தேறிய வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரப் போக்கையும் வன்முறையையும் இன்னமும் நுணுக்கத்தோடும் அழகியல் நாசூக்கோடும் வர்ணிப்பது.
கதை 1920-30கள் பர்மாவில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. தேக்கு மர வியாபாரியான ஜான் ஃப்ளோரி பிரிட்டிஷாரின் ஆட்சியில் இருக்கும் பர்மாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் வந்து சேர்கிறான். அங்கு பர்மியத் தமிழரான டாக்டர் வீராசாமியோடு அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அந்நகரத்தில் நீதிபதியாக இருக்கும் பர்மியனான ஊ போ கியின் இந்தியரான டாக்டர் வீராசாமியை வெறுக்கிறான். அவரை எப்படியேனும் நகரத்தை விட்டுத் துரத்த பல வகைகளிலும் சூழ்ச்சி செய்கிறான். வெள்ளைத் துரையான ப்ளோரியுடனான நட்பு தன்னைப் பாதுகாக்கும் என்று டாக்டர் வீராசாமி நம்புகிறார். தன் நிலையை இன்னமும் பலமாக்கிக் கொள்ள அந்நகரத்தின் வெள்ளைக்காரக் கிளப்பின் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரே ஆசிய உறுப்பினராக படாத பாடு படுகிறார்.
ப்ளோரி டாக்டர் வீராசாமியையும் மற்ற ஆசியர்களையும் சமமாக நடத்துவதையும், பர்மிய ஆசைநாயகி ஒருத்தியை வைத்திருப்பதையும் பார்த்து மற்ற ஆங்கிலேயர்கள் அவனை வெறுக்கிறார்கள். போ கியினின் தூண்டுதலால் ஆசை நாயகி விவகாரம் அம்பலத்துக்கு வர ப்ளோரியின் வெள்ளைக்காரக் காதலி அவனை விட்டுப் போகிறாள். ப்ளோரி கடைசியில் தனது நாயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்டு சாகிறான். டாக்டர் வீராசாமி பதவியிறக்கம் செய்யப்படுகிறார். போ கியின் வெள்ளைக்காரக் கிளப்பில் உறுப்பினன் ஆகிறான்.
1930களில் காலனியக் காலத்துப் பர்மாவைப் பற்றிய மிக அருமையான வருணனைகள் இந்த நாவலில் உள்ளன. பெரும்பாலான ஆங்கிலேயர்கள் இந்தியர்களையும் பர்மியர்களையும் எந்த அளவுக்கு கேவலமாக நடத்தினார்கள் என்பதையும் வந்தேறிகளாகக் கருதப்பட்ட தமிழர்களுக்கும் பர்மியர்களுக்கும் இடையே நிலவிய சிக்கலான உறவுகளையும் மிக நுணுக்கமான விவரிப்புக்களால், சிறுச் சிறு பதிவுகளால் பிரச்சார நெடியில்லாத வகையில் விவரிப்பதில் ஆர்வெல் வெற்றி பெறுகிறார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பதன் மாபெரும் பித்தலாட்டத்தையும் அதனால் ஏற்பட்ட நூற்றாண்டு அயர்ச்சியையும் விவரிப்பதில் ஆர்வெல்லில் தெளிந்த, துல்லியமான உரைநடை வெற்றி பெறுகிறது.
ஆர்வெல் வங்காளத்தில் பிறந்து இங்கிலாந்தில் பல்கலைக் கழகப் படிப்புக்குப் பின் பர்மாவில் காவல்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார். அப்படி இருந்த காலத்தில் நாவலின் கதாபாத்திரமான ப்ளோரியைப் போலவே ஆசியர்களோடு நட்புடன் பழகியதால் மற்ற வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டிருக்கிறார்.
ஆர்வெல் பின்னாளில் குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சகராகத் திகழ்ந்தார்.
வாழ்நாள் முழுவதும் துல்லியமான எளிமையான வகையிலேதான் ஆங்கில உரைநடை எழுதப்பட வேண்டும் என்று வாதிட்ட ஆர்வெல் 1946ல் எழுதிய ஒரு கட்டுரையில் எழுத்தாளர்களுக்குக் கீழ்வரும் 6 கட்டளைகளை விட்டுச் சென்றிருக்கிறார்:
1. அச்சில் அடிக்கடி காணக்கூடிய உவமையையோ, உருவகத்தையோ, பேச்சு வழக்கையோ எக்காரணம் கொண்டும் உங்கள் எழுத்தில் பயன்படுத்தாதீர்கள்.
2. சின்ன வார்த்தையைப் பயன்படுத்த முடிந்த இடத்தில் பெரிய வார்த்தையைப் போட்டு வைக்காதீர்கள்..
3. ஒரு வார்த்தையை அகற்றிவிட முடியுமென்றால், அவசியம் அகற்றிவிடுங்கள்.
4. செயற்பாட்டுவினை வாக்கியங்களைத் தவிர்த்து (“அவனால் செய்யப்பட்டது”) செய்வினை வாக்கியங்களையே எப்போதும் பயன்படுத்துங்கள் (“அவன் செய்தான்”)
5. ஒரு பொருளை விவரிக்க சொந்த மொழியில் அன்றாடம் பயன்படுத்தும் சொல் இருக்கும்போது பிற மொழிச் சொற்களையோ, விஞ்ஞானச் சொற்களையோ, நிபுணத்துவச் சொற்களையோ பயன்படுத்தாதீர்கள்.
6. மேற்கூறிய விதிகளைப் பின்பற்றுவதால் உங்கள் எழுத்து ரசனை இல்லாததாக மாறும் அபாயம் உள்ளது என்றால் மேற்கூறிய எந்த விதியையும் மீறத் தயங்காதீர்கள்.