நண்பர் ஒருவர் “விமர்சனம் என்ற பேரில் உண்மையைச் சொல்லிவிட்டு நண்பர்கள் எல்லோரையும் இழந்துவிட வேண்டுமா?” என்று கேட்டு நேற்று முகநூல் உள்பெட்டியில் வந்திருக்கிறார்.
அவர் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் மட்டுமே நண்பர்களாகக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டக்காரர் என்பது சிறிய விசாரிப்புக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.
சின்ன வயதிலேயே எழுத்தாளர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதே என்று படித்துப் படித்து என் அம்மா என்னிடம் சொல்லியிருந்தபடியால் நான் இதுவரை பெரும்பாலும் சாப்பாட்டுப் பிரியர்களையும் அமெச்சூர் நகைச்சுவைக் கலைஞர்களையும், மேஜிக் நிபுணர்களையும் மட்டுமே நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன்.
இவர்கள்தான் ‘இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு’ என்று கேட்டுத் கேட்டுத் துளைத்தெடுப்பார்கள்.
எழுத்தாளர்கள் சாதாரணமாக அபிப்பிராயங்கள் கேட்பதில்லை.
நல்லதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற முடிவுக்குப் பெரும்பாலான எழுத்தாளர்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் நல்லதைத் தவிர வேறெதையும் கேட்கக் கூடாது என்று பலர் முடிவு செய்திருக்கிறார்கள்.
அண்மையில் கவிதை புத்தக வெளியீடு ஒன்றின் பதிவை வேறொரு நண்பர் அனுப்பியிருந்தார்.
மொத்தமும் பரஸ்பர பாராட்டு மேளா.
நேற்று 89 வயதில் மரணமடைந்த ஹெரால்ட் ப்ளூம் என்ற அமெரிக்க இலக்கிய விமர்சகர் இதற்கெல்லாம் நேர்மாறாக இருந்தார். ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்ட அவருடைய இலக்கிய விமர்சனங்கள் பல நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பின. அமெரிக்கப் பெண் கவிஞர் ஏட்ரியன் ரிச், எழுத்தாளர் மாயா ஆஞ்செலூ முதற்கொண்டு பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் குப்பை என்று சொல்லத் தயங்காதவர்.
2007ல் டோரிஸ் லெஸ்ஸிங்-க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தரப்பட்ட போது அது “நாலாந்தர அறிவியல் புனைவுக்கு அரசியல் காரணங்களுக்காகத் தரப்பட்ட புனைவு” என்று ப்ளூம் விமர்சனம் எழுதினார்.
ஷேக்ஸ்பியரின் 38 நாடகங்களை ஆராய்ந்து மிக முக்கிய விமர்சனங்களை எழுதிய ப்ளூம் அவற்றில் 24 மட்டுமே சிறந்தவை என்று விமர்சனம் எழுதினார்.
காலாவதியான படைப்புகளைப் போலவே காலாவதியான விமர்சனங்களும் உண்டு என்பது ப்ளூமின் கருத்து. அவற்றைக் காற்று அடித்துவிட்டுப் போய்விடும் என்றார்.
ப்ளூம் மிகச் சில இருபதாம் நூற்றாண்டு (மேற்கத்திய) எழுத்தாளர்களே மிகச் சிறந்தவர்கள் என்று கருதினார்: சாமுவேல் பெக்கெட், தாமஸ் பிங்கோன், ஐரிஸ் மர்டோக், ஏ.எஸ்.பியாட், ஜான் பான்வில், பீட்டர் ஆக்ராய்ட், வில் செல்ப், போர்த்துகீஸிய எழுத்தாளர் ஹோசே சாரமாகோ (Samuel Beckett, Thomas Pynchon, Iris Murdoch, A.S. Byatt, John Banville, Peter Acroyd, Will Self, Jose Saramago)
அவரது விமர்சனக் கட்டுரைகளை வாசிக்கும் போது ப்ளூமின் தீர்க்கமான விமர்சனத்துக்கு மூன்று காரணங்கள் தெரிகின்றன – (1) ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட மொழி இலக்கியத்தில் உள்ள முக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தது; (2) அந்தந்தக் காலக்கட்டத்தில் உள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்களை மட்டும் ஆழமாக வாசித்தது; (3) மற்ற நூல்களை இவற்றோடு ஒப்பிட்டு உண்மையைச் சொன்னது.
ஒற்றை நூலை வாசித்துவிட்டுத் தலையும் இல்லாமல் காலும் தெரியாமல் எழுதுவதெல்லாம் விமர்சனம் ஆகாது என்பது ப்ளூமை வாசித்தால் அறிந்து கொள்ளலாம். அதுபோலவே நுனிப்புல் மேய்வதுபோல் பட்டியல் போட்டு டஜன் கணக்கில் நூல்களை வாசித்துத் தள்ளுவதும் விமர்சனத்துக்கு உதவாமல் போகலாம்.
ப்ளூம் ஆங்கில மொழி நூல்களில் மிகச் சிறந்த நூல்களின் பட்டியல் (canon) தயாரிக்கப்பட வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்தவர்.
எந்த ஆங்கில நூல்களை, எப்படி வாசிக்க வேண்டும் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
மேற்கத்திய இலக்கியத்தைப் புரிந்து கொள்ள ப்ளூமின் கட்டுரைகள் பேருதவியாக இருக்கின்றன.
எழுத்தாளர்களிடம் மட்டும் கவனமாக இருங்கள்.