டிசம்பர் 1913ல் ரஷ்ய கவிஞர் ஒருவர் ரஷ்ய எதிர்காலவாதத்தின் (futurism) முக்கிய கவிஞர்களோடு சிம்ஃபெரொபோல், செவாஸ்டோபோல், ஒடெஸ்ஸா ஆகிய நகரங்களில் கவிதை வாசிப்புக்களை நடத்தினார். தானே தைத்துக் கொண்ட மஞ்சள் சட்டையை அணிந்தபடி அந்தக் கவிஞர் மேடையில் தோன்றிய போதெல்லாம் கூடி இருந்த கூட்டத்தார் பரவச நிலையை அடைந்தனர் என்றும் சோவியத் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் உணர்ச்சி வேகம் இருந்தது என்றும் அக்காலப் பதிவுகள் காட்டுகின்றன.
அந்தக் கவிஞரின் பெயர் விளாடிமிர் விளாடிமிரோவிச் மாயகோவ்ஸ்கி.
மாயகோவ்ஸ்கி கம்யூனிஸச் சித்தாந்தத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டார் என்றும் அவர் கவிதைகள் வெறும் பிரச்சாரம் என்றும் சில விமர்சகர்களிடையே அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஆனால் மாயகோவ்ஸ்கி அற்புதமான எழுத்தாளர். நாடகம், இதழியல், தத்துவம், கவிதை, ஓவியம் என்ற பலதுறைகளில் கவனிக்கத்தக்கப் பேராற்றல் உள்ளவராகத் திகழ்ந்தவர். ரஷ்ய எதிர்காலவாதத்தின் தந்தை என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர்.
ரஷ்ய எதிர்காலவாதம் 1909ல் இத்தாலிய கவிஞர் ஃபிலிப்போ மாரினெட்டி வெளியிட்ட எதிர்காலவாதத்தின் அறிக்கையில் (Manifesto of Futurism) உள்ள கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது. எதிர்காலவாதம் பழைய அழகியல் கோட்பாடுகளை மறுத்து வேகம், தொழில்நுட்பம், இயந்திரமயம், வன்முறை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை புதிய அழகியல் கோட்பாடுகளாக முன்மொழிந்தது.
மாயகோவ்ஸ்கி இந்த அழகியல் கொள்கையைத் தனதாக்கிக் கொண்டார். 1913ல் ரஷ்ய படைப்பாளிகள் வெளியிட்ட ரஷ்ய எதிர்காலவாதத்தின் முக்கிய ஆவணமான ‘பொது ரசனையின் முகத்தில் ஓர் அறை’ என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் மாயகோவ்ஸ்கியும் ஒருவர். வேகத்தையும் வன்முறையும் தொழில் வளர்ச்சியையும் கொண்டாடிய எதிர்காலவாத அழகியல் அப்போதுதான் ரஷ்யாவில் நிறைவேறியிருந்த கம்யூனிஸ புரட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. அதனால் அவர்களும் மாயகோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களைக் கம்யூனிஸ எழுத்தாளர்களாகத் தத்து எடுத்துக் கொண்டார்கள்.
மாயகோவ்ஸ்கியின் கவிதைகள் எதிர்காலவாதத்தின் அழகியலை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் மொழியையும் படிமங்களையும் பயன்படுத்துபவை. மாயகோவ்ஸ்கியின் “கால்சட்டைக்குள் மேகம்” என்ற கவிதை ரஷ்ய எதிர்காலவாதத்தின் மிக முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.
நிறைவேறாத காதலை வெளிப்படுத்தும் இந்தக் கவிதையில் கவிஞன் தனது காதலியான மரியாவுக்காக ஒரு ஹோட்டலில் காத்திருக்கிறான். சிறிது நேரத்துக்குப் பின் அவள் அங்கு வந்து தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று அவனிடம் சொல்கிறாள். உணர்ச்சி மிகுந்த சொல்லாட்சி, வன்முறை கக்கும் படிமங்கள் என்று தொடர்கிறது மாயகோவ்ஸ்கியின் கவிதை.
“நான் இப்போது விளையாடப் போகிறேன்
தீ கக்கும் என் வளைந்த புருவங்களில் குற்றமேதுமில்லை
தீயினால் அழிக்கப்பட்ட வீடு
சில நேரங்களில் வீடற்றவர்களுக்கு வசிப்பிடமாகிறது”
“கர்த்தாவே நீர் எமக்கு ஒரு குவியலைத் தந்திருக்கிறீர்கள்:
பிழைத்து இருப்பதற்குத் தலையும் கைகளும்
துன்பமில்லாமல் முத்தமிட, முத்தமிட, முத்தமிட
உம்மால் ஏன் இதைப் படைக்க முடியவில்லை?”
கம்யூனிஸக் கவி என்ற பெயர் அவருக்கு இருந்தாலும் மாய்கோவ்ஸ்கி சோவியத் அதிகார மையங்களின் கடும் தணிக்கை வெறியையும் சோவியத் அரசியலமைப்பு வளர்த்துக் கொண்டிருந்த உப்புச் சப்பில்லாத யதார்த்தவாத படைப்புகளையும் கண்டித்தார். “வருமான வரிக்காரனோடு கவிதையைப் பற்றிய உரையாடல்” என்ற அவர் கவிதை அவர் முன்னெடுத்த விமர்சனங்களில் முக்கியமானது.
இத்தகைய விமர்சனங்கள் அவரை சோவியத் அரசாங்கத்தின் அடக்குமுறைக்குப் பாத்திரமாக்கின.
மாயகோவ்ஸ்கியின் கவிதைகளில் பெரும்பாலானவை பழைய அழகியல் கோட்பாடுகளும், மதமும், அரசியலமைப்புகளும் மனிதனை அன்பு செய்யவும் காதலிக்கவும் விடாமல் தடுப்பதை விமர்சித்தன. 1918ல் அவர் வெளியிட்ட “மனிதன்” என்ற கவிதை மாயகோவ்ஸ்கியின் பிறப்பு, வாழ்க்கை, மீண்டும் வருதல் என்ற முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுவிஷேசத்தில் கூறப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை நினைவுறுத்துவதாக உள்ளது. இந்தக் கவிதையில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த கவிஞன் ஆயிரம் வருடங்களுக்குப் பின் மீண்டும் பூமிக்கு வரும் போது எந்தத் தெருவில் தன் காதலியின் கதவுக்கு முன்னால் தன்னைச் சுட்டுக் கொண்டானோ அந்தக் கதவிருக்கும் தெருவுக்குத் தனது பெயர் சூட்டப்பட்டிருப்பதை உணர்கிறான்.
மாயகோவ்ஸ்கி தன்னைத் தானே பல கவிதைகளில் அன்பை அறிவிக்க வந்தும் அதைச் செய்ய முடியாமல் தோற்றுப் போன இரட்சகராகவே காட்டிக் கொள்கிறார். “முதுகெலும்பு புல்லாங்குழல்” என்ற கவிதையில் தன்னை “வார்த்தைகள் என்னும் ஆணிகளால் தாள் என்னும் சிலுவையில் அறையப்பட்ட” மேசியா என்று வர்ணிக்கிறார். அவர் மண்டையோடு முழுக்க கவிதை வரிகள் நிறைந்திருக்கிறதாம். “தோட்டா என்னும் முற்றுப்புள்ளியால்” இந்தக் கச்சேரி முடியப் போவதைக் கவிஞன் எதிர்நோக்கி இருப்பதாக இந்தக் கவிதை சொல்லிச் செல்கிறது.
சோவியத் பிரச்சாரச் சுவரொட்டிகளான அஜிட்பிராப் சுவரொட்டிகளை வடிவமைத்தவர்களில் தலையானவராகவும் மாயகோவ்ஸ்கி அறியப்படுகிறார்.
1930ல் தனது 36வது வயதில் மாயகோவ்ஸ்கி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்குக் காதல் தோல்விதான் காரணம் என்று நம்பப்படுகிறது.
இன்னும் அதிகமாக வாசிக்கப்பட வேண்டிய கவிஞர், விளாடிமிர் மாய்கோவ்ஸ்கி