கதைகளின் போதாமை

ஓர்தெகா யி காஸெட்

பிலிப்பைன்ஸ் கதைசொல்லி மெரெஸெடோர் ஸாபாதா என் நண்பர். சிங்கப்பூர் வந்திருக்கும் அவர் இன்று என்னை வந்து சந்தித்தார். 1956ல் பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட ‘மூன்று காத்திக் நாவல்கள்’ தொகுப்பின் முன்னுரையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலங்களில் வெளியிடப்பட்ட ஐரோப்பிய புது அலை நாவல்கள் எதுவும் வாசகர்கள் திருப்தி செய்யாததால்தான் அவர்கள் புல்காகோவ்-இன் 1940 நாவலான தி மாஸ்டர் அண்ட் தி மார்கரிட்டா-வையும் குஸ்தாவ் மெய்ரிங்-இன் 1907 தி கோலம் என்ற நாவலையும் தேடி வாசிப்பதாக எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னேன்.

மெரெஸெடோர் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ‘இதுவரைக்கும் அதுதான் கதை’ என்றார்.

பெங்குவின் முன்னுரை தெரிவித்த கருத்தை போர்ஹெஸ் தனது கட்டுரைகள் பலவற்றில் தெரிவித்திருக்கிறார். ரோபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன், எட்கர் ஆலன் போ போன்ற எழுத்தாளர்கள் எழுதிய சாகஸக் கதைகளிலும் மர்மக் கதைகளிலும் உள்ள வசீகரத் தன்மை செவ்விலக்கிய நாவல்களில் இல்லை என்பது போர்ஹெஸ் அபிப்பிராயப்படுகிறார்.

ஹோசே ஓர்தெகா யி காஸெட் 1925ல் எழுதிய தனது ‘நாவலின் மறைவு’  என்ற நூலில் நவீன நாவலின் அமைப்பு வாசகரை ஈர்க்கும் தன்மையை இழந்துவிட்டதாகவே கருதுகிறார்.

இதன் அடிப்படையிலேயேதான் நானும் ஆயிரத்தோரு அரபிய இரவு கதைகளின் ஈர்ப்பை ஆராயும் விதமாக ‘கதைசொல்லியின் ஆயிரத்தோரு இரவுகள்’ என்ற கட்டுரையை எழுதினேன். இந்தக் கட்டுரை யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நீர்த்துப்போன கதைகூறலுக்கு எதிராக போர்ஜெஸ் மற்றும் ஓர்தெகா யி காஸெட் போன்றவர்கள் வைக்கும் விமர்சனத்தின் சாரம்: ஒன்று, கதையின் உள்ளடக்கம் தொடர்பானவை. மற்றொன்று கதையின் கட்டமைப்பு தொடர்பானவை.

உள்ளடக்கம்: கதையின் அடிப்படை ஈர்ப்பு அதற்குள் தென்படக்கூடிய சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டது.  முதலில் கதையில் உண்மையில் சிக்கல் இருக்க வேண்டும். அது சிக்கல்தான் என்று வாசகர்கள் நம்ப வேண்டும். சாகஸக் கதைகளிலும் பேய்க் கதைகளிலும் இந்தச் சிக்கல் இயல்பாகவே வந்து அமைந்துவிடுகிறது.

பல எழுத்தாளர்களின் படைப்புக்களோடு வெளிவந்த ஒரு சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் படித்தேன். பங்களித்த எல்லோரும் மிகச் சிரத்தையாகத்தான் கதைகளை எழுதியுள்ளார்கள்.  ஆனால் அவர்கள் சிக்கல்கள் என்று நினைத்து எழுதியிருந்தவை யாவும் யாருக்கும் உதவாத ரகம்.

உதாரணத்துக்கு: எல்லா வசதிகளும் அனுபவிக்கும் நடுத்தர வர்க்க பெண்மணிகளுக்குள் வரக்கூடிய மெல்லிய வம்புச்சண்டைகள். கதையை எழுதிய எழுத்தாளருக்கு வேண்டுமானால் இந்தச் சண்டை மாபெரும் உறவுச் சிக்கலாகத் தோன்றலாம். ஆனால் பரவலான வாசகர்களின் பார்வையில் இத்தகைய இலக்கிய முயற்சி கொஞ்சம் கோமாளித்தனமானதாகவும் மிகுந்த அசதி தரக்கூடியதாகவுமே தோன்றும் வாய்ப்புள்ளது.

கதைகளுக்கு இப்படிப்பட்ட சிக்கல்களைத் தேர்ந்தெடுத்து எழுதும் எழுத்தாளர்கள் வாழ்க்கையை உற்றுப் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள். அல்லது அர்த்தமே இல்லாத வாய்ப்பேச்சுக்களின் சிறு வட்டத்துக்குள் தங்களைக் குறுக்கிக் கொண்டவர்கள் என்றுதான் ஊகிக்க வேண்டியதாக உள்ளது.

ஆகையால், கதைக்கு உண்மையான சிக்கல் இருப்பதும், அது வாசகர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதும் அவசியம்.

ஆனால் அதற்காக மிக பிரம்மாண்டமான விஷயங்களைத்தான் எழுத வேண்டுமா என்று கேட்பது விதண்டாவாதம். கதையில் வரும் சம்பவம் வேறு. அது பேசும் சிக்கல் வேறு. மிகச் சாதாரண சம்பவங்களில் மிக உக்கிரமான சிக்கல்கள் அடங்கியிருக்கலாம்.  ஷோபா சக்தியின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.  இந்த உண்மை விளங்கும்.

கட்டமைப்பு: ஆரம்பத்தில் தொடங்கி முடிவில் முடியும் மிக சலிப்பான விஷயம் உலகத்தில் உள்ளது. அதன் பெயர் அன்றாட வாழ்க்கை. அன்றாட வாழ்க்கையைக் காப்பி எடுத்ததுபோல் இருக்கும் கதைகள். நான் குறிப்பிட்ட தொகுப்பில் வரும் கதைகளில் பெரும்பாலானவை இப்படிப்பட்ட வெறும் சம்பவக் குவியல்களே. (போர்ஹெஸ் செவ்விலக்கிய நாவல்களைப் பற்றி இதே விமர்சனத்தைத்தான் வைக்கிறார். அது வேறு ஓர் இடத்தில் பார்ப்போம்).

கதைகூறல் என்பது அழகியல் சார்ந்தது. வாசகர்களிடம் குறிப்பிட்ட தாக்கங்களை உருவாக்கும் வகையில் சம்பவங்களை தேர்ந்தெடுத்து அடுக்கி வைக்கும் கலையாற்றலைக் கோருவது. கதையில் சேர்க்கப்படும் சம்பவங்களைவிட வாசகரின் பார்வை எழுத்தாளரால் எதனிடத்தில் திருப்பப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

முழுதாய்ப் பார்க்கப் போனால் மோனா லிஸா அப்படியொன்றும் பேரழகி இல்லை. அவள் முகத்தில் தா வின்சி காட்டும் குறுநகையின் நிழலில்தான் கலை நிகழ்கிறது.

அந்தக் குறுநகையின் நிழலைக் கதைக் கட்டமைப்பின் வழியாக வாசகர் முன்னால் கொண்டு வருவதைத்தான் நான் எழுத்தின் வெற்றியாகக் கருதுகிறேன்.

2 thoughts on “கதைகளின் போதாமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s