
வரலாறு தொடர்பான படைப்புகளின் வெற்றி அவை தரும் சிறு சிறு விவரங்களின் துல்லியத்தில் அடங்கியுள்ளது. இது அபுனைவுக்கும் பொருந்தும் புனைவுக்கும் பொருந்தும்.
சிங்கப்பூரின் தேசிய ஆவணக்காப்பகம் 1900களின் முன் பாதி தொடங்கி இன்றுவரை சிங்கப்பூரில் அந்தந்தக் காலக்கட்டத்தில் நிலவும் அரசியல், சமூக, கலாச்சார, ஆன்மீக, கலாச்சார சூழல்களைப் பற்றிப் பலதரப்பட்ட சிங்கப்பூரர்களைப் பேசச் சொல்லி ஒலிவடிவில் சேகரித்து வருகிறது. காப்பகம் பாதுகாத்து வரும் ஆவணங்கள், புகைப்படங்களோடு இந்த ஒலிப்பதிவுகள் சிங்கப்பூரின் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களை அறிந்து கொள்ள உதவுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் இந்தப் ஒலிப்பதிவுகளைக் கேட்க வழிவகைகள் உள்ளன.
முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மியின் “நேற்றிருந்தோம்… நினைவலைகள்” என்ற நூல் இவ்வகை முயற்சிகளில் ஒன்று.
நவம்பர் 2007லிருந்து 2011வரை சிங்கப்பூர் வாசகர் வட்ட நிர்வாகிகள் சிங்கப்பூர் ஆளுமைகளை அழைத்து 1950களிலும் 1960களிலும் சிங்கப்பூரில் தமிழர்கள் வாழ்வும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளும் எப்படி இருந்தன என்று பகிர்ந்து கொள்ளும்படி கேட்டிருக்கிறார்கள். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஆறு பேர்களுடைய உரைகளை முனைவர் ஸ்ரீலக்ஷ்மி இந்நூலில் தொகுத்திருக்கிறார்.
இராம. கண்ணபிரான், எம்.கே. நாராயணன், மா. இளங்கண்ணன், முனைவர் மா. இராஜிக்கண்ணு, பி. சிவசாமி, ந. பக்கிரிசாமி, செ.ப. பன்னீர்செல்வம் என்ற அனைவரும் கலை, இலக்கிய ஆர்வமுடையவர்கள் என்பதால் பதிவுகள் மிகச் சுவையாகவும், வியப்பூட்டும் வகையில் நுணுக்கமானவையாகவும் இருக்கின்றன.
அந்தக் காலச் சிங்கப்பூரைப் பற்றியும் அப்போது வாழ்ந்த தமிழர்களின் சமூகப் போக்குகள், தொழில், கடைவீதிகள், பொழுதுபோக்குகள், உணவு பழக்க வழக்கங்கள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், அரசியல் என்பவற்றைப் பற்றியும் விவரிக்கும் மிக நுணுக்கமான பதிவுகள்.
கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரில் தமிழர்கள் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இவ்வட்டாரங்கள் அவர்கள் இளம் வயதில் வாழ்ந்த வட்டாரங்கள் என்பதால் அவர்கள் பதிவுகளில் மிகுந்த துல்லியம் தெரிகிறது.
முன்னுரையிலேயே சிங்கப்பூர் வாசகர் வட்டம் 1988ம் வருடம் ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்ட வரலாற்றையும் இந்நாள்வரை அதனுடைய செயல்பாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் பொறுப்பில் இருந்தவர்களின் பெயர்களையும் கொடுத்து முனைவர் ஸ்ரீலக்ஷ்மி நூலின் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறார்.
1960ல் தொடங்கிய தமிழவேள் கோ. சாரங்கபாணியின் தமிழர் திருநாள் கொண்டாட்டமே அந்நாளில் சிங்கப்பூர்த் தமிழர்களின் ஒரே பெரிய கொண்டாட்டம் என்று பெரும்பாலானாவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் தமிழவேளின் கொண்டாட்டங்களுக்கு எதிராகப் பல இடங்களில் பொங்கல் கொண்டாடினார்கள் என்று இந்த நூல் சொல்கிறது.
வரலாற்று நூல் என்பதால் சில முக்கியப் பிழைகளை முனைவர் ஸ்ரீலக்ஷ்மி தவிர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு நூல் நெடுக CLA சாலை என்ற குறிப்பு வருகிறது. சிங்கப்பூரில் அப்படி ஒரு சாலையே இல்லை.
நானும் படித்துவிட்டுக் குழம்பினேன். பிறகுதான் அவர் சொல்ல வந்தது Selegie ரோடு என்று நூலில் தரப்பட்டிருந்த விவரங்களால் ஒருவாறு ஊகிக்க முடிந்தது.
மேலும் முதல் பதிவில் சொல்லப்படுவதுபோல் சிங்கப்பூர் பள்ளியில் ஆங்கிலம் சொல்லித்தந்த ஆசிரியர்கள் ‘காக்னி’ உச்சரிப்பில் ஆங்கிலம் பேசியிருக்க மாட்டார்கள். காக்னி என்பது லண்டனில் மிக தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் பேசும் வழக்கு.
ஆண்களின் பதிவுகளை மட்டுமே சேர்க்காமல் வரலாற்று முழுமைக்காகவும் வேறுபட்ட பார்வைக்காகவும் பெண்களின் பதிவுகளையும் நூலில் சேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
எது எப்படி இருப்பினும் “நேற்றிருந்தோம்… நினைவலைகள்” மிக அற்புதமான முயற்சி. முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி ஆழமான அறிவாற்றலும் கடுமையாக உழைப்பும் உள்ளவர் எல்லோரும் அறிந்தது.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சூழலில் அவருக்குத் தக்க அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் தெளிவு.
இது, சரியான சிங்கப்பூர் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
ஸ்ரீலெட்சுமிக்கு வாழ்த்துகள். இந்நூல் சிங்கப்பூர் சார்ந்த வரலாற்றுப் புனைவுகளுக்குத் துணைபுரியும்.
LikeLike