சமீபத்தில் நண்பர் ஒருவர் அவர் எழுதிய குறுங்கதைகளின் தொகுப்பை எனக்குத் தந்தார். அனைத்தும் ‘மைக்ரோ’ கதைகள் என்ற சுமார் 100 வார்த்தைகள் கொண்ட வகைமையைச் சார்ந்தவை.
ஆங்கிலத்தில் 6 வார்த்தை கதைகளிலிருந்து 1000 வார்த்தைகள் கொண்ட flash fiction வரை உண்டு. அமெரிக்காவில் இயங்கும் மின்னிதழ்கள் பெரும்பாலும் இந்த flash fiction-ஐத்தான் விரும்புகின்றன.
அவர்களைப் பொறுத்தவரை சிறுகதை என்பது 2,500 வார்த்தைகளுக்கு மேல். 7,500 வார்த்தைகள் வரைகூட. சில தமிழ் வாசிப்புச் சூழல்களில் ஆங்கில flash fictionஏ சிறுகதையாகக் கருதப்படும்.
நண்பரின் குறுங்கதைகளுக்கு வருகிறேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மோசமான முயற்சி. விரித்துச் சொல்ல வேண்டும் என்றாலும் அதுதான்.
சத்தியமாய்க் குறுங்கதை வடிவத்தை அவர் சாகடித்திருக்க வேண்டாம்.
குறுங்கதைகள் எழுதும் பல பேரும் கதையின் இறுதியில் ஏதேனும் திருப்பம் எனப்படும் ‘டிவிஸ்டு’ஓடு என்று முடிவதுதான் குறுங்கதை (என்றோ படித்த) Jeffrey Archer-தனமாக என்று தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஜெஃப்ரி ஆர்ச்சரை அவருடைய டிவிஸ்டுகளுக்காக மட்டும் கொண்டாடுகிறவர்கள் அநேகம் பேர் Kane and Abel போன்ற அவருடைய அற்புதமான நாவல்களைப் படித்தவர்கள் அல்ல.
டிவிஸ்டுகள் உள்ள கதைகள மட்டுமே ஒரு நூற்றி இருபது பக்கங்கள் ஒற்றைப் பக்க கதைகளாக எழுதி அடைத்துவிட்டால் வாசகனுக்கு எத்தகைய அலுப்பு ஏற்படும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.
பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள், பரமார்த்த குரு கதைகள் போன்ற நீதி போதனையை முக்கியக் குறிக்கோளாய்க் கொண்ட கதைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
நவீன குறுங்கதை வடிவத்தை முன்னெடுத்த கேட் சோபின், சாமர்ஸெட் மாம் ஆகியோரது கதைகளையும் 1920களில் காஸ்மபாலிட்டன் சஞ்சிகையில் ‘சிறு சிறுகதைகள்’ என்ற பெயரில் வெளிவந்த கதைகளை வாசித்துப் பார்த்தோம் என்றால் குறுங்கதையின் வழியாக இவ்வடிவத்தின் முன்னோடிகள் மூன்று விஷயங்களைச் செய்ய முனைந்திருப்பதைக் காணலாம்.
ஒன்று, கணத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களின் சாத்தியங்களை வாசகர்களின் முன்னால் கொண்டு வருவது.
சில நொடிகளே நீடிக்கும் சம்பவங்கள் பல நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறுங்கதை எழுத்தாளர் ஒரு கணத்தின் சாத்தியங்களை ஆராய்கிறார். இங்கு ஒரு கணம் என்பது நிச்சயமாக சில நிமிடங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. காஸ்மபாலிட்டனில் வெளிவந்த ஒரு கதை ஒரு நூற்றாண்டைத் தாண்டிப் போனதாக ஞாபகம். இங்கு ஒரு கணம் என்பது சம்பவங்களை இணைக்கும் சமரசமில்லாத ஒருமை. இந்தக் கடுமையான ஒருமையைச் சுற்றி நல்ல குறுங்கதைகள் பின்னப்படுகின்றன. அந்த ஒருமையின் நிலைநாட்டவே கதையின் நகர்வு, மொழி, கட்டமைப்பு என்ற அனைத்துக் கூறுகளும் இயங்குகின்றன.
ஒரு தனி கணத்தின் வீச்சைச் சொல்ல வருபவை குறுங்கதைகள்.
இரண்டு, கதையை மீறிய கதையின் சாத்தியங்களை வாசகர்களுக்கு முன்னால் கொண்டு வருவது.
இதுதான் சவால். நல்ல குறுங்கதை இரு வேறு தளங்களில் இயங்குகிறது. ஒன்று தனக்குள் நிகழும் விவரிப்புகளின் சிக்கனத்தால் அது வாசகனின் கற்பனைக்கு இடம் அளிக்கிறது. அடுத்து விவரிக்கப்படும் சம்பவத்தை மீறியும் நடக்கப்போகும் கதையைப் பற்றிய சிந்தனையை வாசகர்களிடம் தூண்டுகிறது. இவ்விரண்டு இயக்கங்களும் குறுங்கதைகளின் ஈர்ப்புக்கு மிக முக்கியமான காரணங்கள். சும்மா டிவிஸ்டு வைத்து எழுதுவது வெற்றி பெறாது என்று சொன்னதற்கு இதுதான் காரணம்.
மூன்று, வறுமை மிகுந்த மொழியின் சாத்தியங்களை வாசகர்களின் முன்னால் கொண்டு வருவது.
அலங்காரங்கள் அற்ற மொழியில், குறைவான வார்த்தைகளில் சொல்லப்படும் கதைகள் நிறைவான வார்த்தைகளில் எழுதப்படும் கதைகளைவிட அடிப்படை இயல்பில் வேறுபட்டவை. நாவலைவிட சிறுகதைகளைவிட குறுங்கதைகளில் வரும் மொழி நிகழ்வைக் கடத்த அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையின் முழு கன பரிமானத்தையும் அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தில் குறுங்கதை எழுத்தாளன் இருக்கிறான். மிகையாகிப் போகும் ஒரு வார்த்தைகூட குறுங்கதையின் அழகியலையும் ஒருமையையும் கலைக்க வல்லதாக இருக்கிறது.
குறுங்கதைகள் சரியான வீச்சைப் பெற வேண்டும் என்றால் மிகக் கவனமாகத் திட்டமிட்டு எழுதப்பட வேண்டியவை.
நல்ல குறுங்கதைகளை எழுதும் திறமை படைத்தவர்களாக இருந்ததால்தான் நாம் இன்றுவரையில் பழைய குட்டிக்கதை ஆசிரியர்களையும் ஜென் குருமார்களையும் அவர்களின் புனைவாற்றலுக்காகக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.