தற்போது சீன மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களில் 1966ல் பிறந்த யீ ஷா முக்கியமானவர். பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை செய்கிறார்.
இதுவரை கிட்டத்தட்ட இருபது கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டுள்ளார். ஐரோப்பாவில் நடக்கும் கவிதை விழாக்களில் கலந்து கொள்கிறார்.
தினமும் தனது வலைப்பூவின் வழியாக ஒரு புதிய சீனக் கவிஞரை அறிமுகப்படுத்தும் இவர் முயற்சி சீனாவில் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
‘கவிஞனைப் பட்டினி போடுங்கள்!’, ‘மஞ்சள் நதியை ரயில் கடக்கிறது’, ‘உலகத்தின் ஓர் ஓரமாய்’ என்ற இவரது தலைப்புகளில் இவரது கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்துள்ளன.
யீ ஷாவின் கவிதைகளில் கவர்வது மிக யதார்த்தமான மொழி. எதிர்க்கவிதைகளின் பாணியில் இருந்தாலும் யீ ஷாவின் கவிதைகள் எதிர்க்கவிதைகள் அல்ல.
எதிர்க்கவிதைகளின் அலட்சியத்தையும் கேலியையும் மீறி மிகச் சாதாரண பொதுஜனத்தின் பார்வையில், பொதுஜனத்திற்கு எட்டும் மொழியிலேயே அவர் கவிதைகள் சமூக விமர்சனங்களை மெல்லிய அழகியல் உணர்வோடு வெளிப்படுத்துகின்றன.
உதாரணத்துக்கு “மாவோவின் காலத்தில் பிறந்திருப்பது” என்ற யீ ஷாவின் கவிதை:
என் தொப்புளின் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவோ
அது இவ்வளவு அசிங்கமாய் இருப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்லவோ
எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனாலும் எல்லா நேரமும்
என் தொப்புளை நோண்டி
அதிலிருக்கும் அழுக்கை எடுத்து
மற்றவர்களுக்குக் காட்டும் விருப்பம்
எனக்கு இல்லை.
மாவோவின் காலத்தில் அரசாங்க இயந்திரம் எந்த மாதிரியான காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்தியது என்பதை மிக நுணுக்கமான வகையில் சொல்லும் கவிதை. தொப்புளைச் சதா நோண்டி அதிலிருக்கும் அழுக்கை கையில் எடுப்பது சிலருக்குப் பழக்கம். சிலர் அதை முகர்ந்துகூட பார்ப்பார்கள். இது ஒரு வகையில் மனநோய்.
குற்றம் காண்பதும்.
யீ ஷாவின் கவிதைகள் உண்மையில் சந்தக் கவிதைகள் என்ற சீன கவிதை வகையைச் சேர்ந்தவை. சீன மொழியில் ‘சந்தம்’ என்ற வார்த்தைக்கு ‘உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது’ என்ற பொருள் உண்டு. 1980களில் எழுதிய சீனக் கவிஞர்கள் ஹாய்சியும் பாய் ஹுவாவும் ‘சந்தம் என்பது ரத்தம்’ என்று அறிவித்தார்கள்.
சீன இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மனிதர்களை நகர்த்தக் கூடிய உணர்ச்சிகளை வெளிகொண்டுவரும் கவிதைகள் யாவும் சந்தக் கவிதைகளே. ஆனால் வெறும் ரோமாண்டிசிச வேகத்திற்கு அப்பாலும் யீ ஷாவின் கவிதைகளில் வெளிப்படும் உணர்ச்சி சுற்றியிருக்கும் உலகத்தில் இருக்கும் மனிதர்களையும் சூழலையும் துல்லியமாக எடைபோடும் வல்லமையுடையதாக இருக்கிறது.
“என் அப்பா உடல் சுகாதாரமில்லாத ஆண்பிள்ளைதான், ஆனால் ஆண்பிள்ளை” என்ற யீ ஷாவின் கவிதையில் சிறுநீரகப் புற்றுநோய் தாக்கிய நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்குத் திரும்பும் கிழவனை அவருடைய மகன் கைகளால் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறான். அப்பா நிர்வாணமாக இருக்கிறார். நோயினால் உடல் மிகவும் மெலிந்து போய் இருக்கிறது. வயிற்றில் பெரிய மஞ்சக் நிற கட்டுகள். அவர் ஆண்குறிக்குள் மூத்திரக் குழாய் ஏற்றுகிறார்கள்.
மயக்க மருந்து போதையில் அடக்கமுடியாமல் சிரிக்கும் அப்பா பின்னர் தனது இடது சிறுநீரகம் அகற்றப்பட்டதையும் மறந்து பெண் தாதிகள் தனது ஆண்குறியைச் சுற்றியிருந்த மயிரை மழித்ததைச் சொல்லிக் காட்டி சிடுசிடுக்கிறார்.
நோய்வாய்ப்பட்ட ஒரு கிழத் தந்தைமேல் மகனுக்கு உள்ள பாசத்தைச் சொல்லும் கவிதைகள் எந்த மொழி இலக்கியத்திலும் மிகக் குறைவுதான். யீ ஷாவின் இந்தக் கவிதை மிகத் துல்லியமான சித்திரங்களில் தகப்பனின் தோற்றத்தையும் மருத்துவமனைச் சூழலையும் சொல்கின்றது. அதே சமயம் நோயினால் சுயமரியாதையை இழந்து அல்லல்படும் தந்தையின் பரிதாபமான நிலையையும், அந்தக் காட்சியைக் காணும் வளர்ந்த மகனின் மனநிலையையும் சிக்கமான வார்த்தை பிரயோகத்தால் காட்டி விடுகிறது.
‘அந்த வருடத்தில் என் மனதில் தங்கிய ஒரே முகம்’ என்ற கவிதையில் யீ ஷா தனது தாயின் பிணத்தை வண்டியில் வைத்து எரியூட்டுவதற்காகக் கொண்டு போன மின்மயான ஊழியனின் முகம் மட்டுமே அந்த வருடத்தில் அவர் நினைவு வைத்துக் கொண்ட ஒரே முகம் என்கிறார்.
யீ ஷாவின் கவிதைகளின் சிறப்பு அம்சமே அவற்றினுள் ஒரே நேரத்தில் அரங்கேறும் பல விதமான உணர்ச்சி பின்னல்கள்தான்.
தாயின் உடம்பை எரியூட்டக் கொண்டு போகும் ஏழை மகனின் மனநிலை ஒரு புறம் இருக்க, அந்த ஊழியனின் முகம் எத்தனை அவலட்சணமாக இருந்தது என்பதும், அம்மாவின் உடலிருக்கும் டிராலியை ‘இனியும் நீ இங்கு இருப்பதால் ஆகப் போவது எதுவும் இல்லை’ என்று சொல்லியபடிதே மகனிடம் இருந்து வற்புறுத்தி வாங்கி அவன் கொண்டு போனதும், அவனுக்கு வேறெந்த பணமும் தரமுடியாததால் கையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை மகன் அவனிடம் அன்பளிப்பாகக் கொண்டுத்ததும் கவிதையில் வருகின்றன.
கவிதை முழுவதும் நகர்வுகள். நடுவில் நகராத பெரும் சோகம்.
யீ ஷா அற்புதமான கவிஞர்.